வாய்ப்பை இழக்காமல் அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கையை உடனே தொடங்குக! - அன்புமணி
வாய்ப்பை இழக்காமல் அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கையை உடனே தொடங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
வாய்ப்பை இழக்காமல் அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கையை உடனே தொடங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்துப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
’’தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள் வரும் 13-ஆம் தேதி திறக்கப்படவுள்ள நிலையில், அவற்றில் இதுவரை மாணவர் சேர்க்கை தொடங்கப்படாதது கவலையளிக்கிறது. தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையைத் தாமதப்படுத்துவது, அரசுப் பள்ளிகளின் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் முயற்சிக்கு முட்டுக்கட்டையை ஏற்படுத்தும்.
மாணவர் சேர்க்கையைத் தொடங்காதது ஏன்?
தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஏப்ரல் மாத இறுதியிலோ, மே மாதத்தின் தொடக்கத்திலோ மாணவர் சேர்க்கை தொடங்குவது வழக்கம். ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்பதால், மே மாதத்தில் மாணவர் சேர்க்கையைத் தொடங்குவதுதான் அவர்களுக்கான பாடநூல்கள், சீருடைகள், ஆசிரியர் தேவைகள் உள்ளிட்ட விஷயங்கள் குறித்துத் திட்டமிட வசதியாக இருக்கும்.
கடந்த ஆண்டு மே மாதத்தில் கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்த போதும்கூட, மாணவர் சேர்க்கை மே மாதத்தில் தொடங்கி விட்டது. ஆனால், இப்போது கொரோனா பரவல் கிட்டத்தட்ட ஒழிக்கப்பட்டு விட்ட நிலையில், அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை இன்னும் தொடங்காததற்காக காரணங்களைப் புரிந்துகொள்ள முடியவில்லை.
தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 13-ஆம் தேதியும், 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 20-ஆம் தேதியும், 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 27-ஆம் தேதியும் அரசுப் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளில்தான் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் சேருவார்கள். இவற்றில் 11-ஆம் வகுப்பு தவிர மற்ற வகுப்புகளுக்கு இன்னும் 5 வேலை நாட்களில் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், அவற்றுக்கு மாணவர் சேர்க்கையை இன்னும் தொடங்காமல் இருப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. மாணவர் சேர்க்கை உடனே தொடங்கப்பட வேண்டும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மே மாதத்தில்தான் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட வேண்டும் என்ற விதி இருந்தாலும், அதைத் தனியார் பள்ளிகள் மதிப்பதில்லை. தனியார் பள்ளிகளில் கடந்த டிசம்பர் மாதமே மாணவர் சேர்க்கை தொடங்கி விட்டது. பெயர் பெற்ற பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சில மாதங்களுக்கு முன்பாகவே நிறைவடைந்து விட்டது. மற்ற பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை கிட்டத்தட்ட நிறைவுக் கட்டத்தை நெருங்கி விட்டது. கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 25% இடங்களுக்கான மாணவர் சேர்க்கையும் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகின்றது.
வாய்ப்பை இழக்கும் அரசுப் பள்ளிகள்
கொரோனா பரவல் காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக பல பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளிகளுக்கு மாற்றினார்கள். கடந்த ஓராண்டில் மட்டும் அரசுப் பள்ளிகளில் 6 லட்சம் மாணவர்கள் கூடுதலாக சேர்ந்துள்ளனர். தொழில் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்படுவதால் அரசுப் பள்ளிகளில் தங்களின் குழந்தைகளைச் சேர்த்து படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் பெற்றோர் மத்தியில் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த சூழலைப் பயன்படுத்திக் கொண்டு மே மாதத் தொடக்கத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை தொடங்கியிருந்தால், நடப்பாண்டும் வழக்கத்தைவிடக் கூடுதலாக பல லட்சம் மாணவர்கள் சேர்ந்திருப்பர். அந்த வாய்ப்பை அரசுப் பள்ளிகள் இழந்து கொண்டிருக்கின்றன.
தமிழ்நாட்டில் 22 அரசு பள்ளிகளில் ஒரு மாணவர்கூட இல்லை; 11 பள்ளிகளில் தலா ஒரு மாணவர் மட்டுமே படிக்கிறார்; 24 பள்ளிகளில் தலா இருவர் மட்டுமே பயில்கின்றனர்; 41 பள்ளிகளில் தலா மூவரும், 50 பள்ளிகளில் தலா நால்வரும் மட்டுமே பயில்கின்றனர். மொத்தமாக 669 அரசு பள்ளிகளில் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே மாணவர்கள் பயின்று வரும் நிலையில், மாணவர் சேர்க்கையைத் தீவிரப்படுத்த வேண்டியிருக்கிறது. அதற்காக மாணவர் சேர்க்கையை முன்பே தொடங்கியிருக்க வேண்டும்.
குதிரைகள் தப்பிச் சென்றபிறகு லாயத்தை பூட்டுவதா?
ஆனால், ஜுன் 13-ஆம் தேதி பள்ளிக்கூடங்கள் திறந்த பிறகு மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்பதும், ஜூன் 14-ஆம் தேதி மாணவர் சேர்க்கைப் பேரணியை நடத்த வேண்டும் என்று ஆணையிடுவதும் குதிரைகள் அனைத்தும் தப்பிச் சென்ற பிறகு லாயத்தை பூட்டுவதற்கு ஒப்பான அபத்தச் செயலாகும். இது அரசுப் பள்ளி மாணவர் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு பதிலாக குறைப்பதற்கே வழி வகுக்கும்.
எனவே, தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை இந்த விஷயத்தில் இனியும் தாமதிக்காமல் உடனடியாக மாணவர் சேர்க்கையைத் தொடங்க வேண்டும். கிராமப்புறங்களில் பள்ளிக் கல்வித்துறை மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுவினர் வீடு வீடாகச் சென்று தகுதியுள்ள குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கையை ஒரு நடைமுறையாகக் கருதாமல், பெரும் இயக்கமாக மாற்றுவதற்கு பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’’.
இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.