Tamil Language: உரிமையைப் போராடிப் பெறுவதா? - தமிழை மத்திய அலுவல் மொழியாக்குக: ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழ் மொழியின் உரிமைகளை ஒவ்வொன்றாக போராடிப் பெறும் நிலை கூடாது எனவும் தமிழ் உள்ளிட்ட எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளும் மத்திய அலுவல் மொழியாக்கப்பட வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
தமிழ் மொழியின் உரிமைகளை ஒவ்வொன்றாக போராடிப் பெறும் நிலை கூடாது எனவும் தமிழ் உள்ளிட்ட எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளும் மத்திய அலுவல் மொழியாக்கப்பட வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகள்:
’’மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் (Staff Selection Commission - SSC) நடத்தும் பல்வகைப் பணியாளர் தேர்வுகளும், ஒருங்கிணைந்த மேல்நிலைப் பணியாளர் தேர்வுகளும் இனி தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. மத்திய அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது!
மத்திய அரசு நடத்தும் அனைத்து போட்டித் தேர்வுகளையும், நுழைவுத் தேர்வுகளையும் தமிழ் மொழியில் நடத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தி வருகிறது. அதற்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து சாதகமான உறுதிமொழிகளைப் பெற்றுக் கொடுத்தது. தமிழ் மொழியில் போட்டித் தேர்வு கனவு நனவானதில் மகிழ்ச்சி!
தமிழ் மொழியின் உரிமைகளை ஒவ்வொன்றாக போராடிப் பெறும் நிலை கூடாது. அன்னைத் தமிழ் மொழிக்கு அதற்குரிய அனைத்து உரிமைகளும், மரியாதையும் வழங்கப்பட வேண்டும். அதற்காக தமிழ் உள்ளிட்ட எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளும் மத்திய அலுவல் மொழியாக்கப்பட வேண்டும். அந்த இலக்கை அடைவதற்காக பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து போராடும்; வெற்றி பெறும்!’’
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தேர்வு வரலாற்றில் முதல்முறையாக தமிழ் உள்ளிட்ட 13 மாநில மொழிகளில் எஸ்எஸ்சி எம்டிஎஸ் தேர்வையும் சிஎச்எஸ்எல்இ (CHSLE Examination) தேர்வையும் எழுதலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
மே மாதத்தில் தேர்வு
இந்த நிலையில் தற்போது இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளுடன் கூடுதலாக அசாமி, பெங்காலி, குஜராத்தி, மராத்தி, மலையாளம், கன்னடம், தமிழ், தெலுங்கு, ஒடியா, உருது, பஞ்சாபி, மணிப்பூரி மற்றும் கொங்கனி ஆகிய மொழிகளில் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதன்படி முதல் எம்டிஎஸ் தேர்வு (தொழில்நுட்பம் அல்லாத பல்திறன் தேர்வு) 2023 மே 2ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது.
இந்த முடிவின் மூலம், லட்சக்கணக்கான மக்கள் தங்களின் தாய் மொழியில், பிராந்திய மொழிகளில் தேர்வெழுதி, தேர்ச்சி பெற முடியும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கான ஒப்புதலை மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறை வழங்கியுள்ளது.
அண்மையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் சிஏபிஎஃப் தேர்வுகள் அனைத்தும் பிராந்திய மொழிகளில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள சிஆர்பிஎஃப் தேர்வில் மொத்தமுள்ள 9.212 காலிப் பணியிடங்களில் 579 பணியிடங்கள் தமிழ்நாட்டில் நிரப்பப்படவுள்ளன. தமிழ்நாட்டில் 12 மையங்களில் இந்தத் தேர்வு நடைபெற உள்ளது.
ஆண்டாண்டு காலமாக இந்தத் தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்பட்டு வந்தன. இதனால் தமிழ்நாட்டில் இருந்து இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்போர் சொந்த மாநிலத்திலேயே தங்கள் தாய்மொழியில் தேர்வினை எழுத முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்குக் கடிதம் எழுதிய நிலையில், தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் தேர்வு எழுதலாம் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.