பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு சலுகைகள்: அரசு அறிவிப்பு
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு, ஆய்வக உதவியாளரைப் பணியமர்த்திக்கொள்ள அனுமதி, மொழிப்பாட விலக்கு உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படும்.
10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு, ஆய்வக உதவியாளரைப் பணியமர்த்திக்கொள்ள அனுமதி, மொழிப்பாட விலக்கு உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
மத்திய கல்வி வாரியத்தால் வழங்கப்படும் சலுகைகள் போன்று, மாநிலக் கல்வி வாரியத்திலும் சலுகைகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்கக இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:
''நடைபெறவுள்ள மே 2022 மேல்நிலை முதலாம் ஆண்டு, மேல்நிலை இரண்டாம் ஆண்டு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதவுள்ள மாற்றுத் திறனாளி பள்ளி மாணவர்களுக்கு சொல்வதை எழுதுபவர், கூடுதல் ஒரு மணி நேரம் தேர்வெழுத அனுமதி, மொழிப்பாட விலக்கு உள்ளிட்ட சலுகைகள் வழங்க சம்பந்தப்பட்ட அரசுத் தோவுகள் உதவி இயக்குநர்கள் பரிந்துரையின் பேரில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
மத்திய கல்வி வாரியத்தால் வழங்கப்படும் சலுகைகள் போன்று, மேல்நிலை மேல்நிலை முதலாம் ஆண்டு, மேல்நிலை இரண்டாம் ஆண்டு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதவுள்ள மாற்றுத் திறனாளி தேர்வர்களுக்கு சலுகைகள் வழங்கப்படவேண்டும்.
அனுமதிக்கப்பட்டுள்ள சலுகைகள் ஏற்கனவே மாற்றுத் திறனாளித் தேர்வா்களால் கோரப்பட்டு, அரசுத் தோவுகள் உதவி இயக்குநர்கள் மற்றும் தலைமை அலுவலகத்தால் நிராகரிக்கப்பட்டிருப்பினும், இவ்வரசாணையின்படி தற்போது கூடுதல் சலுகைகள் கோரினாலும் அத்தேர்வர்களின் விண்ணப்பங்களை ஆய்வு செய்து, அச்சலுகைகளை வழங்கும் பொருட்டு, அச்சலுகைகள் அடங்கிய திருத்தப்பட்ட பட்டியலை உடனடியாக தலைமையலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலமாகவும், தபால் மூலமாகவும் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
1. தேர்வெழுதும்போது வழங்கப்படும் சலுகைகள் குறித்த கூடுதல் விவரங்கள்
மாற்றுத்திறனாளிகள் தேர்வெழுதும் நேரம் 3 மணிநேரம் எனில், ஈடுசெய்நேரம் 60 நிமிடங்கள் எனவும். 2 மணி நேரம் எனில் ஈடுசெய்நேரம் 50 நிமிடங்கள் எனவும் ஒவ்வொரு 1 மணி நேரத்திற்கும் 20 நிமிடங்கள் என்ற வீதத்தில் ஈடுசெய் நேரம் வழங்கப்படும்.
11. சொல்வதை எழுதுபவர் / வினாத்தாள் வாசிப்பவர் / ஆய்வக உகவியாளர் நியமனம்.
* மாற்றுத் திறனாளித் தேர்வர்கள் விருப்பத்தின் பேரில் தங்களுக்கு தெரிந்த நபரையோ அல்லது கல்வித் துறையால் நியமிக்கப்படும் நபரையோ சொல்வதை எழுதுபவராக / வினாத்தாள் வாசிப்பவராக / ஆய்வக உதவியாளராக நியமனம் செய்யக் கோரலாம்.
* தேர்வருக்கு தெரிந்த நபர் சொல்வதை எழுதுபவராக நியமிக்கப்படும் நேர்வுகளில், சொல்வதை எழுதுபவரின் கல்வித்தகுதி தேர்வெழுதும் வகுப்பிற்கான கல்வித் தகுதியை விட சற்றுக் குறைவாக இருத்தல் வேண்டும்.
* செய்முறைத் தேர்விற்கு ஆய்வக உதவியாளராக நியமனம் செய்யப்படும் நபர் சம்பந்தப்பட்ட பாடத்தில் இளநிலைப் பட்டம் பெற்ற பட்டதாரி ஆசிரியராக இருப்பார்.
தேர்வுக் கட்டண விலக்கு:
கண் பார்வையற்றோர் மற்றும் காது கேளாத மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளித் தேர்வர்களுக்கு, தேர்வுக் கட்டண விலக்கு வழங்கப்படும் நடைமுறையினைத் தொடர்ந்து பின்பற்றலாம்''.
இவ்வாறு அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.