Scholarship Programs in India : இந்தியாவில் செயல்படுத்தப்படும் கல்வி உதவித்தொகை திட்டங்கள்..
இந்தியாவில் செயல்படுத்தப்படும் கல்வி உதவித்தொகை திட்டங்களை பற்றி கீழே காண்போம்.
கல்வி ஒருவருக்கு இன்றியமையாத ஒன்று. அதன் முக்கியத்துவத்தை புரிந்து மத்திய, மாநில அரசுகள் கல்வியில் பின்தங்கிய, பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு அவர்களின் கல்வியை தொடர கல்வி உதவித்தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், நாட்டில் செயல்படுத்தப்படும் கல்வி உதவித் தொகை திட்டங்களை கீழே காணலாம்.
நேஷனல் மீன்ஸ்-கம்-மெரிட் ஸ்காலர்ஷிப் திட்டம்:
கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டத்தை, பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் எட்டாம் வகுப்புக்குப் பிறகு படிப்பை நிறுத்திவிடக் கூடாது என்ற நோக்கில் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
தேர்ந்தெடுக்கப்படுகிற மாணவர்களுக்கு மாதம் ரூ. 1000/- என்ற கணக்கில் ஆண்டுக்கு பன்னிரெண்டாம் ரூபாய் உதவித் தொகை இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.
மாநில அரசுப்பள்ளி அல்லது அரசின் உதவி பெறும் பள்ளி அல்லது உள்ளாட்சி அமைப்புகள் நடத்தும் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படிக்க இந்த உதவித் தொகை கிடைக்கும். ஆண்டுக்கு ஒரு லட்சம் மாணவர்கள் வரை பயன்பெரும் இத்திட்டத்தில் சேர, எட்டாம் வகுப்புத் தேர்வில் 55 சதவீதத்திற்கும் குறையாமல் (ஆதிதிராவிடர் / பழங்குடியின மாணவர்களுக்கு 50) மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கான போஸ்ட்-மெட்ரிக் ஸ்காலர்ஷிப்:
இந்த உதவித் தொகைத் திட்டம் பெற்றோர்களது ஆண்டு வருவாய் ரூ. 1 லட்சமாக குறைவாக உள்ள மணாவர்களுக்கு வழங்கப்படுகிறது . இதற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 30 சதவீதம் தொகை மாணவியருக்கும் 5 சதவீதம் மாற்றுத் திறனாளிகளுக்கும் கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப் திட்டங்கள்:
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பல்வேறு உதவித்தொகை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பிரி மெட்ரிக், போஸ்ட் மெட்ரிக், உயர்தர கல்வி, தேசிய வெளிநாட்டு உதவித்தொகை திட்டம், நேஷனல் ஃபெலோஷிப், இலவச பயிற்சி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
முதுமை, நோய், இயலாமை போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு ஆகிய ரீதியில் உதவுவதை இத்திட்டங்கள் நோக்கமாக கொண்டுள்ளன. மாற்றுத்திறனாளிகளை சமூக-பொருளாதார ரீதியாக முன்னேற்ற இத்திட்டங்கள் உதவுகிறது. மேல்குறிப்பிடப்பட்டுள்ள ஆறு உதவித்தொகை திட்டங்களும் 40% க்கும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு பொருந்தும். விதிகளின்படி மாற்றுத்திறனாளி சான்றிதழைக் கொண்ட மாணவர்கள், இத்திட்டத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.
பட்டியல் வகுப்பு மாணவர்களுக்கான போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை:
போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் திட்டம் என்பது மத்திய அரசின் நிதியுதவியில் செயல்படுத்தப்படும் திட்டமாகும். இது, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் மூலம் செயல்படுத்தப்படுகிறது. போஸ்ட் மெட்ரிகுலேஷன் அல்லது உயர் கல்வி படிக்கும் பட்டியல் சாதி மாணவர்கள் தங்கள் கல்வியை முடிக்க இத்திட்டம் மூலம் நிதி உதவி வழங்கப்படுகிறது. பெற்றோர்/கார்டியனின் வருமானம் ஆண்டுக்கு 2,50,000/- ரூபாய்க்கு மிகாமல் இருக்கும் மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும்.
இந்திரா காந்தி ஒற்றைப் பெண் குழந்தை உதவித்தொகை:
இந்த இந்திரா காந்தி ஒற்றைப் பெண் குழந்தைக்கான உதவி திட்டமானது, வீட்டில் ஒரே ஒரு பெண் குழந்தை பெற்றவர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கிறது. வீட்டில் ஒரு பெண் குழந்தை இருந்தால் இது திட்டத்தின் கீழ் அவர்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. வீட்டில் ஒரு பெண் குழந்தையாக இருக்கும் பட்சத்தில் மேற்படிப்பு படிப்பதற்காக இந்த திட்டம் உதவி புரிகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு ஆண்டுக்கு ரூ.36,200 பண உதவி வழங்கப்படுகிறது.
இந்திரா காந்தி ஒற்றைப் பெண் குழந்தை உதவித்தொகை திட்டத்தில் இணைவதற்கான தகுதியாக, வீட்டில் ஒரே ஒரு பெண் குழந்தையாக இருந்து ,அவர் முதுகலை படிப்புகளை பயின்று கொண்டிருந்தால் இந்த நிதி உதவி அவர்களுக்கு வழங்கப்படும்.
சஷாக்ட் உதவித்தொகை:
இந்த உதவித்தொகை திட்டம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் சேர விரும்பும் மாணவிகளை ஊக்குவிக்குவதற்காக வழங்கப்படுகிறது. பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வுகளை முடித்தவுடன் மாணவிகள் இந்த உதவி திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என கூறப்படுகிறது. இதில் கிராமப்புற மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் உள்ள மாணவிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. இந்த நிதி உதவியை பெறுவதானால் குடும்ப வருமானம் ரூ.5,00,000 க்கும் குறைவாக இருக்க வேண்டும்.மேலும் இந்த நிதித் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவிக்கு மூன்று ஆண்டுகளுக்கு ரூ.2,40,000 வரை நிதி உதவி வழங்கப்படுகிறது.
லெக்ராண்ட் எம்பவரிங் உதவித்தொகை திட்டம்:
Legrand Empowering Scholarship Program : மாணவி படிப்பை முடிக்கும் வரை ஆண்டுக் கட்டணத்தில் 60% (ரூ.60,000 வரை) இந்த நிதி உதவி திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. சிறப்புப் பிரிவில் உள்ள மாணவிகளுக்கு, ஆண்டுக் கட்டணத்தில் 80% (ரூ.1,00,000 வரை) வழங்கப்படுகிறது. இந்த நிதி உதவியானது மாணவியின் கல்வித் திறனை பொறுத்து கொடுக்கப்படுகிறது.
இது இந்தியாவில் அறிவியல் அல்லது நிதித் துறையில் பட்டப்படிப்பைத் தொடர விரும்பும் மாணவிகளுக்கான நிதி திட்டமாகும். இந்தத் திட்டத்தின் கீழ் உதவி பெறுவதற்கு 12 ஆம் வகுப்பு முடித்து 70% அல்லது அதற்கு மேல் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசின் புதுமை பெண் திட்டம்:
அரசுப் பள்ளிகளில் இருந்து உயர்கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும் பெண் குழந்தைகளின் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க தமிழ்நாடு அரசு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தைத் (புதுமை பெண் திட்டம்) தொடங்கியது. இத்திட்டத்தின் மூலம், நிதி உதவியாக ரூ. யுஜி பட்டப்படிப்பு/டிப்ளமோ/ஐடிஐ/ வேறு ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட படிப்பை முடிக்கும் வரை பெண்களுக்கு மாதம் 1000 வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊக்கத்தொகை மாணவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.