படித்த பள்ளிக்கு ரூ.25 லட்சம் நிதி; அரசுப்பள்ளிகளுக்கு 50 லட்சம்+ உதவிகள்- சமூக மாற்றத்துக்கு வித்திடும் ரவி சொக்கலிங்கம்
தனது அயல்நாட்டுப் பணி கை நிறைய ஊதியத்தைக் கொடுத்தாலும் மனம் நிறைய திருப்தியை அளிக்கவில்லை என்று உணர்ந்தார்.

தனியொருவராய் தன்னார்வ சமூக சேவை அமைப்பைத் தொடங்கி, தான் படித்த பள்ளிக்கு மட்டுமே 25 லட்ச ரூபாய்க்கும் மேல் உதவியுள்ளார் ரவி சொக்கலிங்கம். இதுபோக தமிழ்நாடு முழுக்க உள்ள பல்வேறு அரசுப் பள்ளிகளுக்கு, ஏரளாமன நலத்திட்டத்தைத் தொடங்கி, 50 லட்ச ரூபாய்க்கும் மேலாக நிதி உதவி, வழிகாட்டல்களைச் செய்து வருகிறார்.
யார் இவர்?
திருநெல்வேலி, அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்தவர் ரவி சொக்கலிங்கம், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகளின் குடும்ப வழி வந்தவர். சென்னை, ஆவடியில் உள்ள ரயில்வே பள்ளியில் படித்த ரவி சொக்கலிங்கம், துபாயில் உள்ள பன்னாட்டு நிறுவனமொன்றில், மூத்த தரக் கட்டுப்பாடு மேலாளராகப் பணியாற்றி வருகிறார்.
தனது அயல்நாட்டுப் பணி கை நிறைய ஊதியத்தைக் கொடுத்தாலும் மனம் நிறைய திருப்தியை அளிக்கவில்லை என்று உணர்ந்தார். கடந்த 2012ஆம் ஆண்டு, சர்வீஸ் டூ சொசைட்டி (Service to Society) என்ற தொண்டு நிறுவனத்தைத் தொடங்கி, மாணவர்களுக்கு உதவ ஆரம்பித்தார்.
இந்நிறுவனம் சார்பில் மாணவர்களுக்கும் பள்ளிகளுக்கும் உதவி வருகிறார். கல்விக் கட்டணம் வழங்கப்படுவதோடு, கல்வி உபகரணங்கள், வழிகாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கிறார் ரவி சொக்கலிங்கம். தனது பணிகள் குறித்து அவரே விவரிக்கிறார்.

வேலைவாய்ப்பு முகாம்கள்
’’தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திர மாநிலங்களில் வழிகாட்டல், பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி முகாம்கள் எஸ்டூஎஸ் அமைப்பு சார்பில் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 96 கல்லூரிகளிலும், 162 அரசுப் பள்ளிகளிலும் நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளன.
பசித்தோர்க்கு உணவு
> ஆதரவற்றோர் இல்லங்களில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் உணவு வழங்கி வருகிறோம். இதுவரை 31,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு தரமான உணவு வழங்கப்பட்டுள்ளது.
> அம்மா- கர்ப்பிணி பெண்களுக்கு சத்துணவு வழங்கும் திட்டம்
> கண்மணி என்ற பெயரில் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு உள்ளாடை வழங்கும் திட்டம் (இதுவரை 1200 மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது)
> 74 பள்ளிகளில் காலை இணை உணவு திட்டம் (2018 முதல்)
> அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இணைய வழியில் "மாணவ வாசக திட்டம்" மற்றும் "மாணவ Leadership Program" திட்டம் (152-க்கும் மேற்பட்ட நிகழ்வுகள்)
இவைபோக,
> புத்தக வாசிப்பு திட்டம்
> பிறந்த நாள் பரிசு திட்டம் (அரசு தொடக்கப் பள்ளிகளில் கடந்த 10 வருடங்களாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 3400 மாணவர்களுக்கு பிறந்தநாள் பரிசு வழங்கப்படுகிறது).
> ரூ.10 ஊக்கப்பரிசு திட்டம்
> விதைப்பென்சில் திட்டம்
> குழந்தைகள் தின திட்டம்
> ஆதரவற்ற குழந்தைகள் திட்டம்
> பண்டிகை புத்தாடை திட்டம்
> தாயுமானவர் திட்டம் (ஆதரவற்ற மற்றும் தாய் அல்லது தந்தை இல்லாத மாணவ / மாணவியருக்கு ஒவ்வொரு மாதமும் மளிகை சாமான்கள் வழங்குதல்) ஆகியவற்றைச் செயல்படுத்தி வருகிறோம்.

அதேபோல ஆசிரியர்களுக்கும் விருதுகள் வழங்கி, அவர்களை கவுரவித்து வருகிறோம். குறிப்பாக,
> வெள்ளி விழா விருது
> சாதனை ஆசிரிய தம்பதி விருது
> வாழ்நாள் சாதனை ஆசிரியர் விருது ஆகியவற்றை மேற்கொண்டு வருகிறோம்'' என்கிறார் ரவி சொக்கலிங்கம்.
3 மாதத்துக்கு ஒருமுறை, தனது அலுவல் பணிக்காக துபாய் சென்று வரும் அவர், பிற நேரங்களில் முழுமையாக சமூக சேவை சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வருகிறார். துறைசார் ஆளுமைகளை அரசுப்பள்ளிகளுக்கு அழைத்து வந்து உரை நிகழ்த்தச் சொல்லி, தன்னம்பிக்கை வளர்த்தச் செய்கிறார். ''மாணவர்கள் வழியாகவே மானுட சமுதாயத்தை மாற்றியமைக்க முடியும்’’ என்கிறார் ரவி சொக்கலிங்கம்.
யாரிடமும் நன்கொடை கேட்பதில்லை
நன்கொடை வேண்டும் என்று யாரிடமும் கேட்டுப் பெறுவதில்லை என்பதைக் கொள்கையாகவே வைத்திருக்கும் இவரின் அமைப்பு, மாணவர்களுக்கு பணமாக உதவிகளை வழங்குவதில்லை. தேவைப்பட்டால் கட்டணமாகச் செலுத்தியும் பொருட்களாக வாங்கிக் கொடுத்தும் உதவி வருகின்றனர்.
மக்கள் பணியே மகேசன் பணி என்பார்கள். மாணவர் பணியே மகத்தான பணி என்று செயல்பட்டு வருகிறார் ரவி சொக்கலிங்கம்.





















