தேர்வே இல்லை; உதவித்தொகையோடு ரஷ்யாவில் படிக்கலாம்- எப்படி? விவரம் இதோ!
இந்திய மாணவர்களுக்கு ரஷ்ய அரசின் கல்வி உதவித்தொகை திட்டத்துக்கு 2026-27 ஆண்டிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

2026- 27 ஆம் கல்வி ஆண்டிற்கான ரஷ்ய அரசின் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் (Government Scholarship Programme) கீழ் உயர்கல்வி பயில இந்திய மாணவர்களுக்கு ரஷ்யக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. மருத்துவம், பொறியியல், விண்வெளி ஆய்வு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்திய மாணவர்கள் ரஷ்யாவில் கல்வி கற்க இது ஓர் அரிய வாய்ப்பாகும்.
கல்வித் துறைகள் மற்றும் மொழி
மருத்துவம், மருந்தியல், பொறியியல், கட்டிடக் கலை, விவசாயம், பொருளாதாரம், மேலாண்மை, மானுடவியல், கணிதம், சமூக அறிவியல், விளையாட்டு மற்றும் கலை உள்ளிட்ட பல்வேறு பாடப் பிரிவுகளில் மாணவர்கள் சேரலாம். குறிப்பாக மருத்துவப் படிப்புகள் பல, ஆங்கில வழியில் கற்பிக்கப்படுவதால், சேர்க்கைக்கு ரஷ்ய மொழி அறிவு கட்டாயமில்லை. இருப்பினும், ரஷிய மொழியை கற்க விரும்பும் மாணவர்கள், தங்கள் முதன்மைப் படிப்பைத் தொடங்கும் முன் ஓராண்டு ஆயத்த மொழிப் பயிற்சியை மேற்கொள்ளலாம்.
பல்கலைக்கழகங்கள் மற்றும் படிப்புகள்
மாஸ்கோ, செயின்ட் பீட்டர்ஸ்பர்க், கசான், விளாடிவோஸ்டாக் உள்ளிட்ட ரஷ்யாவின் முக்கிய நகரங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் இளநிலை (Bachelor's), நிபுணத்துவம் (Specialist), முதுநிலை (Master's), எம்.பில். (MPhil) மற்றும் மேம்பட்ட பயிற்சிப் படிப்புகளை மேற்கொள்ள இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.
தேர்வு முறை
இந்த உதவித்தொகைத் திட்டத்திற்கு நுழைவுத் தேர்வுகள் ஏதுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்களின் முந்தைய கல்வி சாதனைகள் மற்றும் அவர்களின் 'போர்ட்ஃபோலியோ' (Portfolio) அடிப்படையில் மட்டுமே தேர்வு நடைபெறும். ஆராய்ச்சி கட்டுரைகள், பரிந்துரை கடிதங்கள் மற்றும் தேசிய, சர்வதேச போட்டிகளில் பெற்ற சான்றிதழ்கள் தேர்வுக்குப் பரிசீலிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப 6 பல்கலைக்கழகங்கள் வரை தேர்வு செய்யலாம். தேர்வு செயல்முறை இரண்டு கட்டங்களாக நடைபெறும்:
- முதல் கட்டமாக, ஆவணங்கள் சரிபார்ப்பு மற்றும் முதற்கட்டப் பட்டியல் தயாரித்தல் ஜனவரி 15 வரை நடைபெறும்.
- இரண்டாம் கட்டத்தில், ரஷ்ய அறிவியல் மற்றும் உயர்கல்வி அமைச்சகம் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து மாணவர்களுக்கான இடங்களை ஒதுக்கி விசா ஆவணங்களை வழங்கும்.
ஆர்வமுள்ள மாணவர்கள் தகுதி வரம்புகள் மற்றும் கூடுதல் விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.






















