MBBS Ranking List: மருத்துவ படிப்பு மாணவர் சேர்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு - சேலம் மாணவி முதலிடம்
எம்.பி.பி.எஸ் மற்றும் பல் மருத்துவ படிப்பு மாணவர் சேர்கைக்கான தரவரிசைப் பட்டியலை தமிழ்நாடு அரசு வெளியிட்டது.
எம்.பி.பி.எஸ் மற்றும் பல் மருத்துவ படிப்பு மாணவர் சேர்கைக்கான தரவரிசைப் பட்டியலை தமிழ்நாடு அரசு வெளியிட்டது.
தரவரிசைப் பட்டியல் வெளியீடு:
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வு அமைச்சர் மா. சுப்பிரமணியன், ”எம்.பி.பி.எஸ் மற்றும் பல் மருத்துவ படிப்பு மாணவர் சேர்கைக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார். தமிழக அரசின் 7.5% உள்இட ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு மற்றும் பல் மருத்துவம் உள்ளிட்ட 3 வகையான தரவரிசை பட்டியலையும் வெளியிட்டார்.
பொதுப்பிரிவு:
பொதுப்பிரிவில் நீட் தேர்வில் 720 மதிப்பெண்கள் பெற்ற விழுப்புரத்தை சேர்ந்த பிரபஞ்சன் முதலிடம் பிடித்துள்ளார். அவரை தொடர்ந்து, சென்னையை சேர்ந்த சூர்யா சித்தார்த் மற்றும் சேலத்தை சேர்ந்த வருண் ஆகியோர் தலா 715 மதிப்பெண்கள் பெற்று முறையே இரண்டு மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளனர்.
7.5 சதவிகித இடஒதுக்கீட்டில் முதலிடம் யாருக்கு?
7.5 சதவிகித இடஒதுக்கீட்டிற்கான தரவரிசைப் பட்டியலில், சேலத்தை சேர்ந்த கிருத்திகா எனும் மாணவி 569 மதிப்பெண்களுடன் தரவரிசைப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். அவரை தொடர்ந்து, தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பச்சையப்பன் 565 மதிப்பெண்களுடன் இரண்டாவது இடத்தையும், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் 560 மதிப்பெண்களுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர். இந்த உள் இடஒதுக்கீட்டின் கீழ் 473 இளநிலை மருத்துவ இடங்கள், 133 பல் மருத்துவ இடங்கள் என 606 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
40,913 பேர் விண்ணப்பம்:
தமிழ்நாட்டில் மொத்தமாக 6 ஆயிரத்து 326 இளநிலை மருத்துவம் எனப்படும் எம்பிபிஎஸ் இடங்களும், அரசு பல் மருத்துவக் கல்லூரிகள் உட்பட அனைத்து கல்லூரிகளிலும் சேர்ந்து ஆயிரத்து 768 பிடிஎஸ் இடங்களும் உள்ளன. அதில், 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களாக உள்ளது. எஞ்சிய இடங்கள் மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்களாக உள்ளன. இதற்காக 40 ஆயிரத்து 913 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும் 4000 விண்ணப்பங்கள் கூடுதலாக பெறப்பட்டுள்ளன. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய கவுன்சிலிங் 20ம் தேதி தொடங்குகிறது.
கலந்தாய்வு விவரம்:
அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான முதல் சுற்று கலந்தாய்வை மருத்துவ மாணவர் சேர்க்கைக் குழு ஜூலை 20-ம் தேதி தொடங்குகிறது என்று அறிவிக்கப் பட்டுள்ளது. இது தொடர்பாக, மருத்துவக் கலந்தாய்வு குழு வெளியிட்ட அறிவிப்பில், சான்றிதழ் சரிபாா்ப்புப் பணிகள் ஆகஸ்ட் 5, 6 ஆகிய தேதிகளிளும், இரண்டாம் சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 9 அன்றும், 3-ம் சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 31 அன்று நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 சுற்று கலந்தாய்வுகளின் முடிவில் காலியாகவுள்ள இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு செப்டம்பா் 21-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு நடக்கும் அதே நாட்களில், மாநில ஒதுக்கீட்டுக்கும் கலந்தாய்வு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.