JEE Mains 2025: மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடுவதா? ஜேஇஇ மெயின் தேர்வு விடையில் குளறுபடிகள்!
ஜேஇஇ மெயின் ரெஸ்பான்ஸ் ஷீட்டில் உள்ள வினாக்களுக்கும் மாணவர்கள் எழுதிய வினாக்களுக்கும் வேறு வேறாக உள்ளன.

2025ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ மெயின் தேர்வு இரண்டாவது அமர்வுக்கான தற்காலிக விடைக் குறிப்பு, கேள்வித் தாள் மற்றும் பதிவுசெய்யப்பட்ட பதில்களை தேசியத் தேர்வுகள் முகமை அண்மையில் வெளியிட்டது. இதில், பல்வேறு குளறுபடிகள், தவறுகள் நிகழ்ந்திருப்பதாக மாணவர்கள், பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
9 கேள்விகளில் குளறுபடிகள்
தேசியத் தேர்வுகள் முகமை அண்மையில் தற்காலிக விடைக் குறிப்பை வெளியிட்டது. இதில் 9 கேள்விகள் தவறாக உள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, இயற்பியல் பாடத்தில் இருந்து 4 கேள்விகள், வேதியியல் பாடத்தில் 3 வினாக்கள் மற்றும் கணிதப் பாடத்தில் 2 கேள்விகள் தவறாகக் கேட்கப்பட்டுள்ளதாக சர்ச்சை வெடித்துள்ளது.
இந்த நிலையில், response sheet-ல் தேசியத் தேர்வுகள் முகமை பகிர்ந்துள்ள கேள்விகள், தவறாக உள்ளதாக மாணவர்கள் சாடியுள்ளனர். மாணவர்களின் கூற்றுப்படி, ஜேஇஇ மெயின் ரெஸ்பான்ஸ் ஷீட்டில் உள்ள வினாக்களுக்கும் மாணவர்கள் எழுதிய வினாக்களுக்கும் வேறு வேறாக உள்ளன.
வேறுபட்ட விடைக் குறிப்புகள்
இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பயனர்கள் பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டனர். இதுபற்றி அவர்கள் கூறும்போது, ’’JEE முதன்மை விடைத்தாள் பல சந்தர்ப்பங்களில் மாணவர்கள் உண்மையில் எழுதியதில் இருந்தும் NTA வழங்கிய விடைகளில் இருந்தும் வேறுபட்டது’’ என்று தெரிவித்தனர்.
JEE முதன்மை அமர்வு வினாத்தாளில் உள்ள குளறுபடிகளின் எண்ணிக்கை மற்றும் மாணவர்களை கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாக்கியதற்காக NTA மீது விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.
இ- மெயில் அனுப்பியும் எந்த பதிலும் இல்லை
இதுகுறித்துப் பெற்றோர் கூறும்போது, ’’என்னுடைய மகள் 71 வினாக்களுக்கு பதில் எழுதியுள்ளார். தற்போது, எந்த வினாக்களுக்குமே பதில் எழுதவில்லை என்டிஏ தெரிவித்துள்ளது. குழந்தைகளின் எதிர்காலத்துடன் தேசியத் தேர்வுகள் முகமை விளையாடுகிறது. இதுகுறித்து இ- மெயில் அனுப்பியும் எந்த பதிலும் இல்லை’’ என்று தெரிவித்துள்ளார்.
இன்னொரு பெற்றோர் கூறும்போது, ’’என்னுடைய மகள் 50 வினாக்களுக்கு பதில் எழுதியுள்ளார். ஆனால் 48 கேள்விகள் மட்டுமே பதிலளித்ததாக தேசியத் தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது. அவளின் எதிர்காலத்தை எண்ணி கவலைப்படுகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
கூடுதல் தகவல்களுக்கு: https://jeemain.nta.nic.in/

