10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 65 லட்சம் மாணவர்கள் ஃபெயில்; அரசே சொன்ன அதிர்ச்சித் தகவல்!
நாடு முழுவதும் 59 பள்ளிக் கல்வி வாரியங்களில் இருந்து 10, 12ஆம் வகுப்புத் தேர்வுகளை எழுதியவர்களின் தேர்வு முடிவுகள் அலசலுக்கு உட்படுத்தப்பட்டன.
2023-ம் ஆண்டில் மட்டும் 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 65 லட்சம் மாணவர்கள் தோல்வி அடைந்துவிட்டதாக, மத்திய அரசு அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளது. மத்தியக் கல்வி வாரியத்தைக் காட்டிலும் மாநிலக் கல்வி வாரியத்தில் தோல்வி விகிதம் அதிகமாகப் பதிவாகி உள்ளதாக மத்தியக் கல்வி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் மூத்த கல்வி அமைச்சக அதிகாரி கூறி உள்ளதாவது:
’’நாடு முழுவதும் 59 பள்ளிக் கல்வி வாரியங்களில் இருந்து 10, 12ஆம் வகுப்புத் தேர்வுகளை எழுதியவர்களின் தேர்வு முடிவுகள் அலசலுக்கு உட்படுத்தப்பட்டன. இதில், 56 கல்வி வாரியங்கள் மாநில அளவிலானவை. 3 வாரியங்கள் மத்தியக் கல்வி வாரியங்கள் ஆகும், இதில், அரசு சார்பிலான பள்ளிகளில் அதிக அளவிலான மாணவிகள் 12ஆம் வகுப்புத் தேர்வை எழுதியுள்ளனர். இந்த எண்ணிக்கை, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் தலைகீழாக உள்ளது.
10ஆம் வகுப்பு புள்ளிவிவரம் சொல்வது என்ன?
2023ஆம் ஆண்டு 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை எழுத விண்ணப்பித்த மாணவ மாணவிகளில் 33.5 லட்சம் பேர் அடுத்த வகுப்புக்குச் செல்லவில்லை. இதில், 28 லட்சம் பேர் தோல்வி அடைந்த நிலையில், 5.5 லட்சம் பேர் தேர்வையே எழுதவில்லை. இதுவே குறைந்த தக்கவைப்பு விகிதம் மற்றும் மொத்த மாணவர் சேர்க்கை குறைவுக்கு (GER) முக்கியக் காரணமாக உள்ளது.
இதில் மத்தியக் கல்வி வாரியத்தில், 6 சதவீத மாணவர்கள் தோல்வி அடைந்த நிலையில், மாநிலக் கல்வி வாரியத்தில் படித்த 16 சதவீத மாணவர்கள் தோல்வியைத் தழுவி உள்ளனர்.
12ஆம் வகுப்பில் எப்படி?
பிளஸ் 2 மாணவர்கள் 32.4 லட்சம் பேர் கல்லூரிக்குச் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதில் 27.2 லட்சம் பேர் தோல்வி அடைந்த நிலையில், 5.2 லட்சம் பேர் தேர்வையே எழுதவில்லை. மத்தியக் கல்வி வாரியத்தில், 12 சதவீத மாணவர்கள் தோல்வி அடைந்த நிலையில், மாநிலக் கல்வி வாரியத்தில் படித்த 18 சதவீத மாணவர்கள் தோல்வியைத் தழுவி உள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தில் அதிகம்
10ஆம் வகுப்பில் மத்தியப் பிரதேச வாரியத்தில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் தோல்வியடைந்து உள்ளனர். அதைத் தொடர்ந்து பிஹா ர் மற்றும் உ.பி. வாரிய மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். 12 ஆம் வகுப்பைப் பொறுத்தவரை, அதிக மாணவர்கள் உத்தரப் பிரதேசத்தில் இருந்து தோல்வியடைந்தது அதைத் தொடர்ந்து அடுத்த இடத்தில் மத்தியப் பிரதேசம் உள்ளது.
முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் 2023 ஆம் ஆண்டில் மாணவர்களின் ஒட்டுமொத்த செயல்திறன் குறைந்துள்ளது. தேர்வுக்கான பாடத்திட்டம் அதிகமாக இருந்தது இதற்கான காரணமாக இருக்கலாம்.
அரசுப் பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதியவர்களில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம். இது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கல்விக்காக செலவழிக்கும்போது பாலினத்தை கவனத்தில் கொள்வதைக் காட்டுகிறது. இருப்பினும், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் தேர்ச்சி பெறுவதில் மாணவிகளே ஆதிக்கம் செலுத்துகின்றனர்."
இவ்வாறு மத்தியக் கல்வி அமைச்சக வட்டாரம் தெரிவித்துள்ளது.