ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு முன்னால் ஒரே பொதுத் தேர்வா? தமிழக ஆசிரியர் கூட்டணி கேள்வி
ஒரே நாடு ஒரே தேர்தல்- நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர், அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே பொதுத் தேர்வு - பொது வினாத்தாட்களா என்று கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழ்நாட்டு பள்ளிக்கல்வித் துறையில் எவ்வித தயக்கமும் இன்றி தேசியக் கல்விக் கொள்கையினை எஸ்சிஇஆர்டி வழியாக அமல்படுத்திவிட்டார்கள் என்று தமிழக ஆசிரியர் கூட்டணி குற்றம் சாட்டியுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல்- நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர், அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே பொதுத் தேர்வு - பொது வினாத்தாட்களா என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.
இதுகுறித்து ஐபெட்டோ (AIFETO - ALL INDIAFEDERATION OF ELEMENTARY TEACHERS’ ORGANISATIONS) அகில இந்தியச் செயலாளர் அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
’’காலாண்டுத் தேர்வே பொதுத் தேர்வு என்று தேசியக் கல்விக் கொள்கையில் கூட இடம் பெறவில்லையே!
4,5 ஆம் வகுப்பு வினாத்தாட்களை எமிஸ் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துவிட்டார்களா? சுகப்பிரசவமா? சிசேரியனா!
1,2,3 வினாத்தாட்களை பதிவிறக்கம் செய்வதில் சர்வர் கோளாறு உள்ளதாம். சர்வர் கிடைக்கும் பகுதியினரைப் பொறுத்து ஓபன் ஆகவில்லை. வினாத்தாட்கள் எடுக்கப்பட்டுள்ளது. வினாத்தாட்களை வெளியில் எடுத்தவர்கள், ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தாயினைவிட வெற்றிக் குறிப்பில் பதிவிட்டு மகிழ்வினை பகிர்ந்து கொள்வதையும் காணமுடிகிறது.
என்னதான் நுண்ணறிவுடன் நிபுணர்களைக் கொண்டு வினாத்தாட்களை இணையதளத்தில் அனுப்பி வைத்தாலும் அந்தப் பள்ளித் தலைமை ஆசிரியர்தான் வெளியில் எடுத்து தருகிறார். பாடம் நடத்திய வகுப்பாசிரியர்தான் தேர்வு வைக்கிறார். அவர் வகுப்பு மாணவர்கள்தான் தேர்வினை எழுதுகிறார்கள். செல்லுக்குள் மதிப்பீடு செய்தாலும் விடைத்தாளினை திருத்தி மதிப்பீடு செய்வது வகுப்பாசிரியர்கள் தலைமை ஆசிரியர்கள்தான் என்பதை உணர மறுப்பதேன்?
ஆசிரியர்களை ஏன் சித்திரவதை அன்றாடம் செய்ய வேண்டும்? காலாண்டுத் தேர்வினை பழைய நடைமுறைப்படி பள்ளிச் சூழ்நிலைக்கு ஏற்ப வினாத்தாட்களைப் பெற்று தேர்வு நடத்தத்தான் செய்தார்கள் என்பதை உணர மறுப்பதேன்? பாடம் நடத்த பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லை என்பதை உணர மறுப்பதேன்?
கற்பித்தல் அல்லாத பணிகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஆசிரியர்களை மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்கு வழிவிடுங்கள்! தொடர்ந்து அடுக்கடுக்காக அனுப்பப்பட்டு வரும் வாட்ஸப் பதிவுகளால் நடந்தது என்ன? என்று கேட்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். பதிவுகள் ஆசிரியர் சங்கங்களின் மத்தியில் உணர்வலைகளை எழுப்பாமல் இல்லை.
முதலமைச்சா் அனுவலகம், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அனுவலகம், முதலமைச்சரின் நுண்ணறிவுப் பிரிவு, பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளா் உட்பட இந்திய ஆட்சிப்பணி அலுவலர்கள், அனைத்து இயக்குநர்கள், அனைத்து இணை இயக்குநர்களுக்கும் அன்றாடம் அனுப்பப்பட்டு வருவதை பார்த்து வருகிறார்கள் என்பதை காண முடிகிறது.
சிஆர்சி கூட்டம் இரண்டு சனிக்கிழமைகளில் நடைபெற்று வந்தது. 1 முதல் 5 வகுப்புகளுக்கு ஒரே சனிக்கிழமையில் நடத்துவதாக மாற்றம் செய்துள்ளார்கள். புத்தகத்தையும் வைத்து பாடம் நடத்த அனுமதித்துள்ளார்கள். விடுமுறை காலங்களில் பயிற்சி வகுப்பு நடத்தி வந்த பிடிவாதம் தவிர்க்கப்பட்டு வருகிறது.
1- 3 பதிப்பிட்டுத் தேர்வு, 4-5 வகுப்பு திறனறித் தேர்வு- 15 நாட்களுக்கு ஒருநாள் நடத்துவதற்கான திட்டம், கேள்விகளின் எண்ணிக்கை குறைப்பு, எல்லாவற்றிக்கும் மேலாக எதைச் செய்ய திட்டமிடுகிறபோதும் நமது எதிர்ப்பு வரும்.
ஆசிரியர்களை பாதுகாப்பதில் நாம் பிடிவாத உணர்வுடன் கொள்கை வழிப் பயணத்தை தொய்வில்லாமல் தொடர்வோம்’’.
இவ்வாறு தமிழக ஆசிரியர் கூட்டணி தெரிவித்துள்ளது.