(Source: ECI/ABP News/ABP Majha)
NEET UG 2024: வெளியான முக்கிய அறிவிப்பு; நீட் தேர்வுக்கு மீண்டும் விண்ணப்பிக்கலாம்- எப்போது வரை?
NEET UG 2024 Registration: மாணவர்களின் தொடர் கோரிக்கைகளுக்கு ஏற்ப நீட் நுழைவுத் தேர்வுக்கு மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று தேசியத் தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.
மருத்துவப் படிப்புகளில் சேர நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வுக்கு மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று தேசியத் தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது. இதன்படி மாணவர்கள் நாளை (ஏப்.9) முதல் ஏப்.10 இரவு வரை விண்ணப்பிக்கலாம்.
மாணவர்களின் தொடர்ச்சியான கோரிக்கைகளுக்கு ஏற்ப ஒரேயொரு வாய்ப்பாக, நீட் விண்ணப்பப் பதிவு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தேசியத் தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 10ஆம் தேதி நள்ளிரவு 11.50 மணி வரை மாணவர்கள் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்னென்ன ஆவணங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்?
* ஆதார் அட்டை
* டிஜி லாக்கர்
* ஏபிசி ஐடி
* பாஸ்போர்ட்
* பான் கார்டு
* பள்ளி அளவிலான அடையாள அட்டை
மே 5-ல் தேர்வு
2024ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு மே 5ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்வு முடிவுகள் ஜூன் 14ஆம் தேதி வெளியாக உள்ளன. நீட் தேர்வு 3 மணி நேரம் 20 நிமிடங்களுக்கு.. அதாவது 200 நிமிடங்களுக்கு நடைபெற உள்ளது. மே 5 அன்று மதியம் 2 மணி முதல் 5.20 மணி வரை நேரடி முறையில் நடைபெறும் தேர்வுக்கு, ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். பிப்ரவரி 9ஆம் தேதி இதற்கான விண்ணப்பப் பதிவு தொடங்கிய நிலையில், விண்ணப்பிப்பதற்கான அவகாசம் பல முறை நீட்டிக்கப்பட்டது.
தொடர்ந்து மீண்டும் கடைசி முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி மாணவர்கள் நாளை (ஏப்.9) முதல் ஏப்.10 இரவு 10.50 மணி வரை விண்ணப்பிக்கலாம். ஏப்ரல் 10ஆம் தேதி நள்ளிரவு 11.50 மணி வரை மாணவர்கள் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
NTA re-opens the registration window for NEET (UG) 2024 based on stakeholder requests. Revised dates for online application forms: 9th to 10th April 2024 (up to 10:50 P.M.). Last date for fees payment: 10th April 2024 (up to 11:50 P.M.). One-time opportunity, so apply carefully! pic.twitter.com/B7SdiK9Dtz
— National Testing Agency (@NTA_Exams) April 8, 2024
விண்ணப்பிப்பது எப்படி?
* முதல்முறை விண்ணப்பிக்கும் மாணவர்கள், https://neet.ntaonline.in/frontend/web/registration/index என்ற இணைப்பை க்ளிக் செய்து முன்பதிவு செய்ய வேண்டும்.
* சரியான இ- மெயில் முகவரி, தொலைபேசி எண்ணை மட்டுமே உள்ளிட வேண்டும்.
* முன்பதிவு படிவத்தைப் பூர்த்தி செய்த பிறகு, விண்ணப்பப் படிவத்தை நிரப்ப வேண்டும்.
* விண்ணப்ப எண் மற்றும் கடவுச் சொல்லை உள்ளிட்டு, விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு, விண்ணப்பதாரரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கையெழுத்து, கைரேகை ஆகிய ஆவணங்களை ஸ்கேன் செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
* முதல் இரண்டு படிவங்களையும் பூர்த்தி செய்த பிறகு, விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். அதன்பிறகே விண்ணப்பப் படிவம் உறுதிசெய்ய வேண்டும். சரியான தகவல்களை மட்டுமே தேர்வர்கள் உள்ளிட வேண்டும்.
தேர்வு குறித்த முழுமையான விவரங்களை அறிய: https://exams.nta.ac.in/NEET/images/neet-ug-2024-draft-ib-09022024.pdf என்ற தகவல் வழிகாட்டியைக் காணலாம்.
தொடர்புகொள்ள- தொலைபேசி எண்: +91-11-40759000
மின்னஞ்சல் முகவரி: neet@nta.ac.in
கூடுதல் விவரங்களுக்கு: https://neet.nta.nic.in/