IND vs SA: இனி தான் ஃபயரே..! பழிவாங்கும் மோடில் தெ.ஆப்.,? சமாளிக்குமா இந்தியா? சூப்பர் 8 சுற்றில் பலப்பரீட்சை
ICC T20 World Cup 2026 IND vs SA: ஐசிசி டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றில், இந்தியா மற்றும் தென்னாப்ரிக்கா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்த உள்ளன.

ICC T20 World Cup 2026 IND vs SA: இந்தியா மற்றும் தென்னாப்ரிக்கா அணிகள் இடையேயான போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளன.
டி20 உலகக் கோப்பை - சூப்பர் 8 சுற்று
இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் ஐசிசி டி20 உலகக் கோப்பையின், லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடித்த அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறின. இரண்டாவது சுற்றில் நேற்று திட்டமிடப்பட்ட பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி, மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இந்நிலையில் இன்று சூப்பர் சுற்றில் இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன. முதல் போட்டியில் இலங்கை மற்றும் இங்கிலாந்தும், இரண்டாவது போட்டியில் நடப்பு சாம்பியனான இந்தியா மற்றும் தென்னாப்ரிக்கா அணிகள் மோத உள்ளன.
இந்தியா - தென்னாப்ரிக்கா அணிகள் பலப்பரீட்சை
இந்தியா மற்றும் தென்னாப்ரிக்கா அணிகள் மோதும் போட்டி, உள்ளூர் நேரப்படி இரவு 7 மணிக்கு, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதன் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ ஸ்டார் செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். கடந்த 2024ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் இந்த இரு அணிகளுமே இறுதிப்போட்டியில் மோதின. அதில் வென்று இந்திய அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. அதற்கு பழிவாங்கும் முனைப்பில் தென்னாப்ரிக்கா இன்றைய போட்டியில் களமிறங்க உள்ளது. அதேநேரம், 2023யில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு பிறகு, ஐசிசி தொடர்களின் எந்த போட்டியிலும் தோல்வியே கண்டதில்லை என்ற ஆதிக்கத்தை தொடர இந்தியாவும் தீவிரம் காட்டுகிறது.
இந்திய அணியின் பலம், பலவீனம்..
இந்திய அணியின் திறமைக்கான உண்மையான சோதனையாக இந்த சூப்பர் 8 சுற்று இருக்கும். லீக் சுற்றில் விளையாடிய 4 போடிட்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி வலுவான பேட்டிங் லைன் - அப்பை கொண்டிருந்தாலும், தொடக்கம் வலுவாக அமையாதது தலைவலியாக உள்ளது. குறிப்பாக அபிஷேக் சர்மா விளையாடிய 3 போட்டிகளிலும் டக்-அவுட் ஆகி அதிர்ச்சி அளித்துள்ளார். ஒருவேளை அவருக்கு பதிலாக சாம்சன் இன்று களமிறங்குவாரா என பொறுத்திருந்தே பார்க்க வேண்டுன். திலக் வர்மா அதிரடியாக ரன் சேர்க்க வேண்டியுள்ளது. எந்தவொரு தனிநபரையும் பேட்டிங் யூனிட் சார்ந்து இருக்காமல் , இஷான் கிஷன், கேப்டன் சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே மற்றும் ஹர்திக் பாண்ட்யா என பலரும் பங்களித்து வருவது நம்பிக்கைக்குரிய விஷயமாக உள்ளது.
பவுலிங் யூனிட்டை பொறுத்தவரையில் பும்ரா நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகிறார். அவருக்கு ஆதரவாக அர்தீப் சிங், அக்சர் படேல், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் சிறப்பாக பங்களித்து வருகின்றனர். மறுமுனையில் தென்னாப்ரிக்கா அணியும் லீக் சுற்றில் தோல்வியே காணாமல் வலுவான ப்ளேயிங் லெவன் மூலம் எதிரணிகளை அச்சுறுத்தி வருகிறது.
அகமதாபாத் மைதானம் எப்படி?
அகமதாபாத் மைதானம் வழக்கமாகவே பேட்ஸ்மேன்களுக்கு சாதகமானது என அனைவரும் அறிந்ததே. வேகமான அவுட்-ஃபீல்டும் மிகப்பெரிய இலக்கை நிர்ணயிக்க உதவும். முன்னதாக இங்கு நடைபெற்ற போட்டியில் இரு அணிகளுமே 175 ரன்களை எளிதாக கடந்தது. இருப்பினும் போட்டியின் ஆரம்பத்தில் பந்துவீச்சாளர்கள் சற்ரே ஆதிக்கம் செலுத்தலாம். எனவே ஆரம்பகட்டத்தில் பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டியுள்ளது.
நேருக்கு நேர்:
சர்வதேச டி20 போட்டிகளில் இந்தியா மற்றும் தென்னாப்ரிக்கா அணிகள், 35 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் இந்திய அணி 21 முறையும், தென்னாப்ரிக்கா அணி 13 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டியில் முடிவு ஏதும் எட்டப்படவில்லை.
உத்தேச ப்ளேயிங் லெவன்:
இந்தியா: அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக், துபே, ரிங்கு சிங், அக்சர் படேல், பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி
தென்னாப்ரிக்கா: மார்க்ரம், டி காக், ரிக்கல்டன், டெவால்ட் ப்ரீவிஸ், ஸ்டப்ஸ், மில்லர், சி. போஷ், ஜான்சன், நிகிடி, மகராஜ்,ரபாடா





















