மாணவர்களுக்கு ரூ.36 ஆயிரம் உதவித்தொகை; NMMS திட்டத்துக்கு முன்பதிவு; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
இந்த கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவுகளைச் சேர்ந்த தகுதியுடைய மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12,000 தொகை வழங்கப்படும்.

NMMS எனப்படும் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை (என்எம்எம்எஸ்) திட்டத்துக்கு விண்ணப்பிக்க முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
பல்வேறு மாநிலங்களுக்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை (என்எம்எம்எஸ்) திட்டத்திற்கான விண்ணப்பப் படிவங்களை மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்கள் (SCERTs) வெளியிட்டுள்ளன. தகுதியான மாணவர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் சென்று பதிவு செய்யலாம். எனினும் விண்ணப்ப செயல்முறையை முழுமையாக முடிக்க, தேவையான ஆவணங்கள் மற்றும் விண்ணப்பக் கட்டணத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
விண்ணப்பிக்க விரும்பும் அரசுப் பள்ளிகள் / அரசு உதவி பெறும் பள்ளிகள் / மாநகராட்சி / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.
என்ன தகுதி?
அனைத்து ஆதாரங்களில் இருந்தும் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ. 3,50,000-க்கு மிகாமல் உள்ள மாணவர்கள் உதவித் தொகையைப் பெறத் தகுதி உடையவர்கள்.
உதவித்தொகை வழங்குவதற்கான தேர்வுத் தேர்வில் கலந்துகொள்ள மாணவர்கள், 7 ஆம் வகுப்பு தேர்வில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்கள் அல்லது அதற்கு சமமான தரத்தைப் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி மாணவர்களுக்கு 5 சதவீத தளர்வு உண்டு.
ஆண்டுதோறும் 4 ஆண்டுகளுக்கு 12 ஆயிரம் உதவித்தொகை
இந்த கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவுகளைச் சேர்ந்த தகுதியுடைய மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12,000 தொகை வழங்கப்படும். 4 ஆண்டுகளுக்கு மொத்தம் 36 ஆயிரம் ரூபாய் அளிக்கப்படும். 8ஆம் வகுப்பில் மாணவர்கள் இடைநிற்றலைத் தடுக்கவும், மேல்நிலைப் பள்ளியில் தங்கள் கல்வியைத் தொடர அவர்களை ஊக்குவிக்கவும் இந்த உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் 9ஆம் வகுப்பில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் 1 லட்சம் பேருக்கு புதிய உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன. மேலும் மாநில அரசு, அரசு உதவி பெறும் மற்றும் உள்ளாட்சிப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 10 முதல் 12ஆம் வகுப்புகளில் அவர்களின் தொடர்ச்சி / புதுப்பித்தல் செய்யப்படுகிறது. இந்த உதவித்தொகைகள் மின்னணு பரிமாற்றம் வழியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்பட உள்ளன.
கூடுதல் விவரங்களை https://scholarships.gov.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்து அறியலாம்.






















