வருகைப் பதிவில் ஆள்மாறாட்டம்? பேராசிரியர்கள் பெயரை பதிவேற்ற தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவு
அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களும் தங்களின் கல்லூரி இணையதளத்தில் ஒவ்வொரு துறை சார்ந்த பேராசிரியர்கள் குறித்துப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியர்கள் வருகைப் பதிவில் ஆள்மாறாட்டம் செய்வதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், பேராசிரியர்கள் அடங்கிய பட்டியலை தளத்தில் அப்டேட் செய்ய வேண்டும் என்று மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து என்எம்சி எனப்படும் தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
’’அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களும் தங்களின் கல்லூரி இணையதளத்தில் ஒவ்வொரு துறை சார்ந்த பேராசிரியர்கள் குறித்துப் பதிவேற்றம் செய்ய வேண்டும். மருத்துவக் கண்காணிப்பாளர், முதல்வர், டீன் உள்ளிட்டவர்களின் விவரங்களும் இடம்பெற வேண்டும்.
பேராசிரியர்களின் பெயர்ப் பட்டியலைப் பதிவேற்ற உத்தரவு
பெயரோடு, சம்பந்தப்பட்டவர்களின் சமீபத்திய புகைப்படம், கல்வித் தகுதி, தற்போதைய பணி நிலை, மாநில மருத்துவ கவுன்சில் வழங்கிய பதிவு எண் ஆகியவை உள்ளிடப்பட வேண்டும்.
அதேபோல தகவல்கள் பதிவேற்றத்தில், தவறான, முறையாகப் பூர்த்தி செய்யப்படாத, தாமதமான தகவல்கள் பதிவேற்றம் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு மாதமும் இந்தப் பட்டியல் பதிவேற்றப்படும். இதற்கான கால வரம்பாக மாதக் கடைசி நாள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆள் மாறாட்ட எச்சரிக்கை
சில மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியர்கள், தங்களது வருகைப் பதிவுகளை, போலியாகப் பதிவு செய்வதாகத் தெரியவந்துள்ளது.
எனவே, அனைத்து பேராசிரியர்களும் தங்களது வருகைப் பதிவுகளை, கல்லூரிகளில் வைக்கப்பட்டுள்ள ஆதாருடன் இணைக்கப்பட்ட பயோ-மெட்ரிக் மூலம் சரியான முறையில் பதிவு செய்ய வேண்டும். வருகை பதிவில் ஆள்மாறாட்டம் ஏதேனும் நடந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’.
இவ்வாறு தேசிய மருத்துவ ஆணையம் சார்பில் கூறப்பட்டுள்ளது.
மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வில் முறைகேடு, மோசடி நடந்தது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கூடுதல் தகவல்களுக்கு: https://www.nmc.org.in/