UGC NET Syllabus: தேசிய தகுதித் தேர்வு பாடத்திட்டம் மாற்றி அமைப்பு: எப்போது?- யுஜிசி வெளியிட்ட தகவல்
தேசிய தகுதித் தேர்வுக்கான பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க உள்ளதாகவும் அதற்காக நிபுணர் குழு விரைவில் அமைக்கப்படும் எனவும் யுஜிசி தலைவர் ஜெகதிஷ் குமார் தெரிவித்து உள்ளார்.

தேசிய தகுதித் தேர்வுக்கான பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க உள்ளதாகவும் அதற்காக நிபுணர் குழு விரைவில் அமைக்கப்படும் எனவும் யுஜிசி தலைவர் ஜெகதிஷ் குமார் தெரிவித்து உள்ளார்.
இந்தியாவில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பணியாற்ற உதவிப் பேராசிரியர் (Assistant professor ) பணிக்கான தகுதியையும், இளையர் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை (Junior Research Fellowship- JRF) பெறவும் நெட் தேர்வு எனப்படும் தேசியத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். இந்தத் தேர்வு தேசியத் தேர்வுகள் முகமையால் (NTA) நடத்தப்படுகிறது. மொத்தம் 83 பாடங்களுக்கு நடைபெறும் இத்தேர்வு, கணினி முறையில் நடத்தப்படுகிறது. குறிப்பாக, ஆண்டுதோறும் 2 முறை ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் தேர்வு நடைபெறுகிறது.
அறிவியல் பாடங்கள், மானுடவியல், சமூக அறிவியல், இந்திய, வெளிநாட்டு மொழிகள் உள்ளிட்ட பாடங்களுக்கு தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது.
முன்னதாக 2017ஆம் ஆண்டு யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு தேர்வுக்கான பாடத்திட்டத்தை மாற்றி அமைத்தது. கடந்த 6 ஆண்டுகளாக பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படாத நிலையில் தற்போது மாற்றி அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர் கல்வியில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள்
இதுகுறித்து யுஜிசி தலைவர் ஜெகதிஷ் குமார் கூறும்போது, ’’தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்திய பிறகு, உயர் கல்வியில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, பலதரப்பட்ட பாடத்திட்டங்கள் மற்றும் முழுமையான கல்வியை வழங்குவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
எனவே யுஜிசி தேசிய தகுதித் தேர்வு பாடத்திட்டத்தை புதுப்பிப்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டது. யுஜிசி விரைவில் நிபுணர் குழுவை அமைத்து இதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கும்.
தேர்வர்கள் கவலைப்பட வேண்டாம்
அதேநேரத்தில் பாடத்திட்ட மாற்றம் குறித்து தேர்வர்கள் கவலைப்பட வேண்டாம். புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படும் முன், தேர்வர்களுக்குப் போதிய அளவில் நேரம் அளிக்கப்படும்’’ என்று யுஜிசி தலைவர் ஜெகதிஷ் குமார் தெரிவித்தார்.
டிசம்பர் மாத அமர்வு எப்போது?
2023ஆம் ஆண்டு டிசம்பர் மாத அமர்வுக்கான தேசியத் தகுதித் தேர்வு டிசம்பர் 6 முதல் 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. டிசம்பர் முதல் வாரத்தில் மாணவர்கள் தங்களின் அனுமதிச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதற்குத் தேர்வர்கள் செப்டம்பர் 30ஆம் தேதி முதல் விண்ணப்பித்தனர். அன்று தொடங்கிய விண்ணப்பப் பதிவு, அக்டோபர் 28ஆம் தேதி மாலை 5 மணிக்கு நிறைவு பெறுவதாக இருந்தது. எனினும் மாணவர்கள் நலன் கருதி விண்ணப்ப அவகாசம் அக்.28ஆம் தேதியில் இருந்து அக்.31ஆம் தேதியாக நீட்டிக்கப்பட்டது. தொடர்ந்து மாணவர்கள் நவம்பர் 1 முதல் 3ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொண்டனர்.
முன்னதாக ஜூன் மாத உதவிப் பேராசிரியர் பணிக்கான யு.ஜி.சி. தேசிய தகுதித் தேர்வு, ஜூன் 13 முதல் 22ஆம் தேதி வரை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

