NEET PG 2025: ஆக.3-ல் நீட் முதுகலைத் தேர்வு; உச்ச நீதிமன்றம் அனுமதி- என்னென்ன ஏற்பாடுகள்?
NEET PG 2025 Exam: நீட் முதுகலைத் தேர்வு ஆகஸ்ட் 3ஆம் தேதி நடத்தப்படுவது உறுதியாகி உள்ளது. இந்தத் தேர்வை சுமார் 2.20 லட்சம் மருத்துவ மாணவர்கள் எழுத உள்ளனர்.

ஆகஸ்ட் 3ஆம் தேதி நீட் முதுகலைத் தேர்வை நடத்திக் கொள்ளலாம் என்று தேர்வு வாரியத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை வாரியம் மேற்கொண்டு வருகிறது.
முன்னதாக ஜூன் 15ஆம் தேதி நீட் முதுகலைப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு நடைபெறுவதாக இருந்தது. 2,42, 678 தேர்வர்கள் நீட் முதுகலைத் தேர்வை எழுத உள்ளனர். இதற்கிடையே, இரண்டு ஷிஃப்டுகளாகத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதை எதிர்த்து மருத்துவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
நீட் தேர்வை ஒரே ஷிஃப்ட்டில் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, ஜூன் 15ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த நீட் தேர்வு, தள்ளி வைக்கப்பட்டது.
எதனால் தேர்வு ஒத்தி வைப்பு?
போதிய தேர்வு மையங்கள், கட்டமைப்பு வசதிகளைச் செய்ய, தேர்வு ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாகவும் புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் மருத்துவ அறிவியலுக்கான தேசியத் தேர்வு வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை அடுத்து, ஆகஸ்ட் 3ஆம் தேதி தேர்வை நடத்தலாமா என்று உச்ச நீதிமன்றத்திடம் தேசியத் தேர்வு வாரியம் அனுமதி கோரியது. இதுதொடர்பான வழக்கு விசாரணையின்போது, ஒரே ஷிஃப்டில் நீட் தேர்வை நடத்தக் கூடுதலாக 450 மையங்கள் தேவைப்படும் என்று மருத்துவ அறிவியலுக்கான வாரியம் தெரிவித்து இருந்தது.
மீண்டும் அவகாசம் அளிக்க முடியாது
தேர்வு மையங்களைக் கண்டறிய கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாக வாரியம் கூறிய நிலையில், போதிய கால அவகாசம் வழங்கி உள்ளதால் மீண்டும் அவகாசம் அளிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், நீட் முதுகலைத் தேர்வு ஆகஸ்ட் 3ஆம் தேதி நடத்தப்படுவது உறுதியாகி உள்ளது. இந்தத் தேர்வை சுமார் 2.20 லட்சம் மருத்துவ மாணவர்கள் எழுத உள்ளதாக தேர்வுகள் வாரியம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கூடுதல் தகவல்களுக்கு: https://natboard.edu.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.






















