NEET PG Result: நீட் முதுகலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு; பெறுவது எப்படி?- பர்சண்டைல் எவ்வளவு?
NEET PG 2024 Result: நீட் முதுகலைத் தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. இதை NBEMS எனப்படும் மருத்துவ அறிவியலுக்கான தேசியத் தேர்வுகள் வாரியத்தின் இணையதளத்துக்குச் சென்று அறியலாம்.
நாடு முழுவதும் ஆகஸ்ட் 11ஆம் தேதி நீட் முதுகலைத் தேர்வு நடந்து முடிந்த நிலையில், அதற்கான தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.
எம்.டி, எம்.எஸ் உள்ளிட்ட மருத்துவ முதுநிலை படிப்பில் சேர, மருத்துவ மாணவர்கள் நீட் முதுநிலை தேர்வை எழுதுகின்றனர். குறிப்பாக இந்தியா முழுவதும் உள்ள மருத்துவ நிறுவனங்களில் எம்டி (Doctor of Medicine), எம்எஸ் (Master of Surgery) மற்றும் முதுகலை டிப்ளமோ படிப்புகளில் சேர நீட் முதுகலைத் தேர்வு நடத்தப்படுகிறது.
2.28 லட்சம் தேர்வர்கள் எழுதினர்
மருத்துவ முதுகலைப் படிப்புகளில் சேர நீட் முதுகலைத் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. இதற்கான தேர்வு பலமுறை தள்ளி வைக்கப்பட்டு, இறுதியாக ஆகஸ்ட் 11ஆம் தேதி நடந்து முடிந்தது. நாடு முழுவதும் முதல் முறையாக 2 ஷிஃப்டுகளில் தேர்வு நடந்தது. குறிப்பாக, 2,28,540 தேர்வர்களுக்கு 170 நகரங்களில் உள்ள 416 மையங்களுக்கு நீட் முதுகலைத் தேர்வு நடத்தப்பட்டது.
இந்த நிலையில் தேர்வுக்கான தற்காலிக விடைக் குறிப்பை வாரியம் வெளியிட்டது. இறுதியாக மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகளைத் தகுந்த நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து இறுதி விடைக் குறிப்புகளை வாரியம் வெளியிட்டது.
முதல் முறையாக 2 ஷிஃப்ட் தேர்வு
முதல் முறையாக இரண்டு ஷிஃப்டுகளில் தேர்வு நடந்த நிலையில், வினாத்தாளை சமப்படுத்தும் வகையில் நார்மலைசேஷன் முறையை மருத்துவ அறிவியலுக்கான தேசியத் தேர்வுகள் வாரியம் அறிமுகம் செய்துள்ளது.
நெகட்டிவ் மதிப்பெண்கள்
நீட் முதுகலைத் தேர்வில் ஒவ்வொரு தவறான விடைக்கும் 25 சதவீத மதிப்பெண் கழித்துக் கொள்ளப்படும். எனினும் பதிலை எழுதாத பட்சத்தில் மதிப்பெண்கள் எதுவும் பிடித்துக் கொள்ளப்படாது.
தொடர்ந்து தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. இதை NBEMS எனப்படும் மருத்துவ அறிவியலுக்கான தேசியத் தேர்வுகள் வாரியத்தின் இணையதளத்துக்குச் சென்று அறியலாம்.
நீட் முதுகலைத் தேர்வு முடிவுகளை அறிவது எப்படி?
* NBEMS இணையப் பக்கத்தை க்ளிக் செய்யவும். அல்லது https://natboard.edu.in/index என்ற பக்கத்துக்குச் செல்லவும்.
* லாகின் விவரங்களை உள்ளிட்டு உள்ளே நுழையவும்.
* பதிவு எண், பாஸ்வேர்டு ஆகியவற்றை உள்ளிட்டு, நீட் மதிப்பெண்களை அறிந்துகொள்ளலாம்.
பர்சண்டைல் எவ்வளவு?
நீட் முதுகலைத் தேர்வில் தேர்ச்சி பெற, பொதுப் பிரிவினரும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினரும் குறைந்தபட்சம் 50 பர்சண்டைல் பெற்றிருக்க வேண்டும்.
அதேபோல, மாற்றுத் திறனாளி மாணவர்கள் குறைந்தபட்சம் 50 பர்சண்டைல் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர் 40 பர்சண்டைல் பெற்றிருந்தால் போதுமானது.
மதிப்பெண் அட்டை எப்போது?
தனிப்பட்ட மதிப்பெண் அட்டை, ஆகஸ்ட் 30ஆம் தேதி அன்றோ அல்லது அதற்குப் பிறகோ வெளியாக உள்ளது.
கூடுதல் தகவல்களுக்கு: https://cdn.digialm.com//per/g01/pub/726/EForms/image/ImageDocUpload/12/1114334428696558995639.pdf
தொலைபேசி எண்: 011-45593000