NCERT: இனி 9 முதல் 11ஆம் வகுப்பு வரையான மதிப்பெண்களும் முக்கியம்; பிளஸ் 2 மதிப்பெண் பற்றி என்சிஇஆர்டி புது பரிந்துரை!
பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளில் மாணவர்களின் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான செயல்பாடுகள் கணக்கில் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 முதல் 11ஆம் வகுப்பு வரையிலான மதிப்பெண்களைக் கொண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வு மதிப்பீடுகள் இருக்க வேண்டும் என்று என்சிஇஆர்டியின் பாரக் மையம் பரிந்துரை செய்துள்ளது.
பாரக் (செயல்திறன் மதிப்பீடு, மதிப்பாய்வு மற்றும் முழுமையான வளர்ச்சிக்கான அறிவின் பகுப்பாய்வு- PARAKH) என்பது என்சிஇஆர்டியால் (தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்) அமைக்கப்பட்ட ஒரு ஒழுங்குமுறை மையமாகும். இந்த அமைப்பு இந்தியாவில் உள்ள அனைத்து கல்வி வாரியங்களிலும் தரமான மதிப்பீட்டு அணுகுமுறை குறித்து முன்னதாக வலியுறுத்தி இருந்தது.
அதேபோல பாடத் திட்டத்தில் தரவு மேலாண்மை, குறியீட்டு முறை, பயன்பாட்டு மேம்பாடு, செயற்கை நுண்ணறிவு, இசை, கலைகள் மற்றும் கைவினைப்பொருட்கள் போன்ற தொழில்சார் மற்றும் திறன் சார்ந்த பாடங்களை உருவாக்க பரிந்துரைக்கப்பட்டது.
கல்வி வாரியங்கள் முழுவதும் சமத்துவத்தை ஏற்படுத்துதல்
இந்த நிலையில் பாரக், ’கல்வி வாரியங்கள் முழுவதும் சமத்துவத்தை ஏற்படுத்துதல்’ (Establishing Equivalence across Education Boards) என்ற பெயரில் புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில், பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளில் மாணவர்களின் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான செயல்பாடுகள் கணக்கில் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 9ஆம் வகுப்பில் இருந்து 15 சதவீத மதிப்பெண்கள், 10ஆம் வகுப்பில் இருந்து 20 சதவீத மதிப்பெண்கள், 11ஆம் வகுப்பில் இருந்து 25 சதவீத மதிப்பெண்கள் மதிப்பிடப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 40 சதவீத மதிப்பெண்கள் 12ஆம் வகுப்பில் இருந்து மதிப்பீடு செய்யப்பட உள்ளன.
மதிப்பீடுகள் எப்படி மேற்கொள்ளப்பட வேண்டும்?
அதேபோல 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளின் மதிப்பீடுகளும் எப்படி மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அறிக்கை பரிந்துரைத்துள்ளது. அதன்படி, 9ஆம் வகுப்பில் 70 சதவீத மதிப்பெண்கள், formative assessment மூலமாகவும் 30 சதவீத மதிப்பெண்கள், summative assessment மூலமாகவும் அளிக்கப்பட வேண்டும். அதேபோல, 10ஆம் வகுப்பில் இரு வகையான மதிப்பீடுகளும் தலா 50 சதவீத மதிப்பெண்களாகப் பிரித்துக்கொள்ளப்பட வேண்டும்.
தொடர்ந்து 11ஆம் வகுப்பில் 40 சதவீத மதிப்பெண்கள், formative assessment மூலமாகவும் 60 சதவீத மதிப்பெண்கள், summative assessment மூலமாகவும் அளிக்கப்பட வேண்டும். 12ஆம் வகுப்பில் 30 சதவீத மதிப்பெண்கள் formative assessment மூலமாகவும் 70 சதவீத மதிப்பெண்கள், summative assessment மூலமாகவும் அளிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மதிப்பீடுகள் அனைத்தும் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளின்போது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று பாரக் தெரிவித்துள்ளது.
கட்டமைப்பு வசதிகள்
அதேபோல ஆசிரியர்களின் செயல்திறன், பள்ளியின் கட்டமைப்பு, தண்ணீர் வசதி, விளையாட்டு வசதிகள், வளங்கள் நிறைந்த நூலகங்கள் ஆகியவற்றின் தேவையையும் பாரக் முன் வைத்துள்ளது.