நெக்ஸ்ட் தேர்வு: மருத்துவ மாணவர்களுக்கு நிம்மதி! இந்திய மருத்துவ ஆணையத்தின் முக்கிய அறிவிப்பு
NExT தேர்வு உடனடியாகச் செயல்படுத்தப்படாது. அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்கு, மாதிரித் தேர்வுகளை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.

தேசிய மருத்துவ ஆணையம் (NMC), நெக்ஸ்ட் தேர்வு (National Exit Test - NExT) அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படாது என்று மருத்துவ மாணவர்களுக்கு உறுதிப்படுத்தியுள்ளது.
இந்திய மருத்துவ சங்கத்தின் (FAIMA) பிரதிநிதிகள் அண்மையில் தேசிய மருத்துவ ஆணையத்தின் தலைவரை டெல்லியில் உள்ள அலுவலகத்தில் சந்தித்தனர். இந்தச் சந்திப்பின்போது, FAIMA நடத்திய நாடு தழுவிய கணக்கெடுப்பின் முடிவுகள் சமர்ப்பிக்கப்பட்டன. அத்துடன், மருத்துவக் கல்வியை வலுப்படுத்துதல், உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் மருத்துவர்களின் நலன் தொடர்பான சீர்திருத்தங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
தேசிய மருத்துவ ஆணையம் சொன்னது என்ன?
சந்திப்பிற்குப் பிறகு, தேசிய மருத்துவ ஆணையத்தின் தலைவர் மருத்துவர் அபிஜாத் ஷெத் கூறுகையில், "NExT தேர்வு உடனடியாகச் செயல்படுத்தப்படாது. அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்கு, மாதிரித் தேர்வுகளை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இந்த மாதிரித் தேர்வுகளுக்கு, முழுமையாக தேசிய மருத்துவ ஆணையம் நிதி அளிக்கும்.
இதன் மூலம், தேர்வின் சாத்தியக் கூறுகளை மதிப்பிடவும், மாணவர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து கருத்துக்களைச் சேகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாதிரித் தேர்வுகளின் முடிவுகள் மற்றும் பெறப்படும் பதில்களை மதிப்பீடு செய்த பின்னரே நெக்ஸ்ட் தேர்வை இறுதி செய்வது குறித்து பரிசீலிக்கப்படும்.
தேசிய மருத்துவ ஆணையம் அளித்த பரிந்துரைகளை வரவிருக்கும் கொள்கை விவாதங்களில் சேர்க்கும் சாத்தியக் கூறுகள் குறித்து ஆணையம் பரிசீலிக்கும்" என்று தெரிவித்தார்.
நெக்ஸ்ட் (NExT) தேர்வு
NExT என்பது இந்தியாவில் எம்பிபிஎஸ் பட்டதாரிகளுக்கான ஒரு முக்கியமான தேர்வாகும். இது மருத்துவம் பயிற்சி செய்வதற்கு உரிமம் வழங்குவதற்கும், முதுகலை படிப்புகளில் சேருவதற்கும் ஒரு நுழைவுத் தேர்வாகப் பயன்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது.
இத்தேர்வு ஆகஸ்ட் 2025 முதல் செயல்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும், சட்டரீதியான, கட்டமைப்பு மற்றும் -தளவாட தயார்நிலை உட்பட பல காரணங்களால் தாமதம் ஆனது.
இந்த நிலையில், தேர்வு குறித்து இந்திய மருத்துவ சங்கம் விவாதித்தது. குறிப்பாக கீழே உள்ள அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
- மருத்துவக் கல்வி மற்றும் உள்கட்டமைப்பு ஆய்வு.
- மருத்துவக் கல்வியில் ஆராய்ச்சியை ஒருங்கிணைத்தல்.
- மருத்துவ மாணவர்கள் மற்றும் உறைவிட மருத்துவர்களின் உடல் மற்றும் மன நலன்.
- மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்துதல்.
இந்த ஒத்திவைப்பு, மருத்துவ மாணவர்களுக்கும், மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கும் பெரும் நிம்மதியை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






















