பேரறிவாளன் விடுதலை; நீட், மழை: முதலமைச்சர் எவ்வளவு பெரிய கைராசிக்காரர்? - அமைச்சர் அன்பில் பெருமிதம்
பேரறிவாளன் விடுதலை; மழை, நீட் எதிர்ப்பு மசோதா என்று பல்வேறு விவகாரங்கள் மூலம் முதலமைச்சர் எவ்வளவு பெரிய கைராசிக்காரர் என்பது தெரிய வருவதாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
பேரறிவாளன் விடுதலை; மழை, நீட் எதிர்ப்பு மசோதா என்று பல்வேறு விவகாரங்கள் மூலம் முதலமைச்சர் எவ்வளவு பெரிய கைராசிக்காரர் என்பது தெரிய வருவதாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கும் திட்டத்தைப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
''இலவச வீட்டு மனை பட்டா வழங்குவது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இதயத்துக்கு மிகவும் நெருக்கமான திட்டம். ஆதி திராவிடர் நலத்துறை மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆகியவை இந்த திட்டத்தைச் செயல்படுத்துவதில் சிறப்பாகச் செயலாற்றி வருகின்றன.
நம்முடைய முதலமைச்சர் எவ்வளவு பெரிய கை ராசிக்காரர் என்பதற்குப் பல உதாரணங்களைச் சொல்லலாம். நீட் தேர்வு எதிர்ப்பு என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். முதலமைச்சர் கொடுத்த அழுத்தத்தால், நீட் எதிர்ப்பு மசோதாவைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துவிட்டேன் என்று, ஆளுநர் உடனடியாக தொலைபேசியில் அழைத்துச் சொல்லும் அளவிற்கு நாம் இருக்கிறோம்.
30 ஆண்டுகளாகப் போராடிக் கொண்டிருந்த பேரறிவாளனுக்கு விடுதலை என்பது, நாம் ஆட்சிக்கு வந்த பிறகுதான் நடந்தது. கோடை வெயில் காலத்திலும் மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. ஜூன் 12-ஆம் தேதிக்கு முன்பே அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்ற வகையில் தமிழ்நாட்டில் நல்லாட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
மக்களிடம் நேர்மறைச் சிந்தனைகள் இருக்கின்றன. இந்த முதலமைச்சருக்கு நாம் ஓட்டு போட்டோம். அவர் கண்டிப்பாக நமக்கு நல்லது செய்வார் என்ற நம்பிக்கை எல்லோரிடமும் உள்ளது. அதைக் காக்க வேண்டும். இதற்காக மாநிலம் முழுவதும் 234 தொகுதிகளிலும் சாதனை விளக்கக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பொது மக்கள் எங்கள் மீது வைத்துள்ள அன்பை, நம்பிக்கையை, மகிழ்ச்சியை எங்களால் உணர முடிகிறது''.
இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
முன்னதாக, தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் அவரை விடுதலை செய்து நேற்று (மே 19 ) உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் மூலம் அவரது 31 ஆண்டுகால சிறை வாழ்க்கை முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்