’’6 மாதத்தில் உங்களுக்கு பொதுத்தேர்வு; எங்களுக்கு தேர்தல்- இரு தரப்பும்...’’ அமைச்சர் அன்பில் ருசிகரம்!
ஆசிரியர்களே 6 மாதத்தில் உங்களை நம்பி படிக்க வரும் பிள்ளைகளுக்கு பொதுத்தேர்வு வந்துவிடும். எங்களுக்கு பொதுத்தேர்தல் வந்துவிடும். நீங்களும் வெற்றி பெறவேண்டும், நாங்களும் வெற்றி பெற வேண்டும்- அமைச்சர் அன்பில்.

பள்ளிக் கல்வித் துறை முப்பெரும் விழாவில் புதிய ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்ட நிகழ்ச்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற நிலையில் அமைச்சர் அன்பில் மகேஸ் பேசினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று (20.09.2025) சனிக்கிழமை காலை பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெறும் முப்பெரும் விழாவில் கலந்துகொண்டார்.
2715 புதிய ஆசிரியர்களுக்கான நுழைவுநிலைப் பயிற்சி
விழாவில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2715 புதிய ஆசிரியர்களுக்கான நுழைவுநிலைப் பயிற்சியினை தொடங்கி வைத்து, பயிற்சிக் கையேட்டினை வெளியிட்டார்.
மேலும், ரூ.277 கோடி மதிப்பீட்டில் பாரத சாரண சாரணியர் தலைமை அலுவலகக் கட்டடம் மற்றும் 243 புதிய பள்ளிக் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.94 கோடியில் கட்டப்பட்டுள்ள 59 பள்ளிக் கட்டடங்களை திறந்து வைத்து, விழாப் பேருரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது:
''இதுவரை 8,388 பேரை பள்ளிக் கல்வித்துறையில் தேர்வு செய்துள்ளோம். இனி வருங்காலத்தில், 3,227 பேரை நியமனம் செய்ய உள்ளோம்.
மருத்துவமனையில் முதலமைச்சர் அனுமதிக்கப்பட்டிருக்கும்போது நாங்கள் மண் சோறு சாப்பிடவில்லை, அலகு குத்திக்கொள்ளவில்லை. கட்சிக்கு ஆட்கள் சேர்க்கவில்லை. அறிவுசார் கூட்டமாகச் செயல்பட்டோம். ஓரணியில் தமிழ்நாடாக இயங்கினோம்.
நீங்களும் வெற்றி பெறவேண்டும், நாங்களும் வெற்றி பெற வேண்டும்.
ஆசிரியர்களே 6 மாதத்தில் உங்களை நம்பி படிக்க வரும் பிள்ளைகளுக்கு பொதுத்தேர்வு வந்துவிடும். எங்களுக்கு பொதுத்தேர்தல் வந்துவிடும். நீங்களும் வெற்றி பெறவேண்டும், நாங்களும் வெற்றி பெற வேண்டும். நான் அரசியல் பேசவில்லை. அறிவுசார்ந்த மக்களிடம் அரசியல் விஷயத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என்றே பேசுகிறேன்''.
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.






















