CBSC Fail: சிபிஎஸ்இ பள்ளிகள் கையெழுத்து கேட்கும்; பெற்றோர் போடாதீங்க! எச்சரிக்கும் அன்பில் மகேஸ்
என்.சி.இ.ஆர்.டி பாடத்திட்டத்தின் மூலம் வரலாற்றை மாற்ற ஒன்றிய அரசு முயற்சி செய்து வருகிறது

சிபிஎஸ்இ பள்ளிகளின் ஃபெயில் நடைமுறைக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “சிபிஎஸ்இ 5ஆம் வகுப்பு மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்கள் குறைந்த மதிப்பெண்கள் பெற்றால் ஃபெயில் ஆக்கும் நடைமுறைக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். சிபிஎஸ்இ பள்ளிகளின் இந்த நடைமுறையை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது.
இதனால் தான் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என கூறுகிறோம். ஆரம்பத்திலிருந்தே தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்றுதான் கூறி வருகிறோம். தேசிய கல்விக் கொள்கையை சிபிஎஸ்இ பள்ளிகள் அமல்படுத்தும்போது பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.
சிபிஎஸ்இ பள்ளிகளில் 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்கள் ஃபெயில் என்று கையெழுத்து போட சொன்னால் போடக்கூடாது. பெற்றோர்கள் கேள்வி கேட்க வேண்டும்.
கடனை வாங்கி பிள்ளைகளை சிபிஎஸ்இ பள்ளிகளில் சேக்கும் பெற்றோர் எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாவார்கள். 5ஆம் வகுப்பு மாணவர்களை ஃபெயில் ஆக்கினால் இடைநிற்றல் அதிகரிக்கும்.
என்.சி.இ.ஆர்.டி பாடத்திட்டத்தின் மூலம் வரலாற்றை மாற்ற ஒன்றிய அரசு முயற்சி செய்து வருகிறது” எனத் தெரிவித்தார்.
முன்னதாக, மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் சிபிஎஸ்இ பள்ளிகளில், இனி 3, 5, 8ம் வகுப்புகளில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்தால் 'ஃபெயில்' என்ற நடைமுறை அமலுக்கு வீந்தது. இதற்காக தங்களின் குழந்தைகள் குறைவான மதிப்பெண்கள் எடுத்தால் ஃபெயில் ஆக்க சம்மதிப்பதாக பெற்றோர்களிடம் பள்ளிகள் ஒப்புதல் கடிதம் பெறத்தொடங்கியுள்ளன.
அதேநேரம், ஏப்ரல் மாதம் முடிவதற்கு முன்பே 9ம் வகுப்பு வரை விடைத்தாள்கள் திருத்தப்பட்டு, பழைய விதிமுறைப்படி மாணவர்கள் அடுத்த வகுப்புக்குச் சென்று விட்டதால். புதிய நடைமுறையானது அடுத்த ஆண்டில் இருந்துதான் முழுமையாக நடைமுறைக்கு வரும் என அதிகாரிகள் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. 30 சதவிகிதத்திற்கும் குறைவான மதிப்பெண்கள் எடுத்தால், சிபிஎஸ்இ தேர்வுகளில் தோல்வி என அறிவிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.





















