இந்திய அளவில் மருத்துவ இடங்கள் அதிகரிப்பு; ஆனாலும் முதலிடத்தை இழந்த தமிழ்நாடு- இதுதான் காரணம்!
தமிழ்நாட்டில் 2023- 24ஆம் கல்வி ஆண்டில் 11650 மருத்துவ இடங்கள் இருந்த நிலையில், தற்போது 2024- 25ஆம் கல்வி ஆண்டில், 12050ஆக அதிகரிக்க உள்ளது.
இந்திய அளவில் மருத்துவ இடங்கள் 10 ஆயிரம் அளவுக்கு அதிகரிக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், மருத்துவக் கட்டமைப்பில் சிறந்து விளங்கும் முதல் மாநிலம் என்ற சிறப்பை தமிழ்நாடு இழந்துள்ளது.
மக்களவை எம்.பி. செல்வராஜ் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு, மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பதிலளித்துள்ளார். அதில் கூறப்பட்டு உள்ளதாவது:
’’2023- 24ஆம் கல்வி ஆண்டில் 1,08,940 மருத்துவ இடங்கள் இருந்த நிலையில், தற்போது 2024- 25ஆம் கல்வி ஆண்டில், 1,18,137 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, ஒவ்வொரு மாநிலங்களிலும் 2024- 25ஆம் கல்வி ஆண்டில், மருத்துவ இடங்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. இதன்படி, 3 மாநிலங்கள் மட்டுமே 12 ஆயிரத்துக்கும் அதிகமான மருத்துவ இடங்களைப் பெற்றுள்ளன.
தமிழ்நாட்டில் 2023- 24ஆம் கல்வி ஆண்டில் 11650 மருத்துவ இடங்கள் இருந்த நிலையில், தற்போது 2024- 25ஆம் கல்வி ஆண்டில், 12050ஆக அதிகரிக்துள்ளது. அதேபோல கர்நாடக மாநிலத்தில், 11745 ஆக இருந்த மருத்துவ இடங்களின் எண்ணிக்கை, 12545 ஆக அதிகரித்துள்ளது.
அதே நேரத்தில் 2023- 24ஆம் கல்வி ஆண்டில் உத்தரப் பிரதேசத்தில் 10 ஆயிரத்துக்கும் குறைவாகவே இருந்தது. அதாவது, 9903 ஆக மட்டுமே இருந்த மருத்துவ இடங்கள், 12425 ஆக இந்த கல்வி ஆண்டில் அதிகரித்துள்ளது. கடந்த ஓராண்டில் புதிய இடங்களை உருவாக்குவதில் தமிழ்நாடு ஆறாம் இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது’’.
இவ்வாறு மத்திய இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மருத்துவ இடங்களின் எண்ணிக்கை குறைந்ததற்கு என்ன காரணம்?
கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் எந்தவொரு புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்படாததும், புதிய மாணவர் சேர்க்கை இடங்கள் ஏற்படுத்தப் படாததும்தான் இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
நாட்டிலேயே அதிக எண்ணிக்கையாக உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 86 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன, அதைத்தொடர்ந்து மகாராஷ்டிராவில் 80 கல்லூரிகளும் தமிழ்நாடு 77 கல்லூரிகளும் உள்ளன. அதற்கு அடுத்தபடியாக, கர்நாடகாவில் 73 மருத்துவக் கல்லூரிகளும், தெலங்கானாவில் 65 மருத்துவக் கல்லூரிகளும் உள்ளன.
மக்கள் தொகை அடிப்படையில் மருத்துவ இடங்கள்
மக்கள் தொகை அடிப்படையில் மருத்துவ இடங்கள் ஒதுக்கப்படும் என்று தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்து இருந்தது. இந்த நிலையில், அடுத்த ஆண்டு முதல் தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் திறக்க முடியாது, கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்களை உருவாக்க முடியாது என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் தேசிய மருத்துவ ஆணையம் நாட்டில் 780 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியது.