MBBS, BDS Counselling: தொடங்கிய எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் மருத்துவக் கலந்தாய்வு; முழு விவரம்..
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் அக்.17ஆம் தேதி வெளியான நிலையில், மாநில இடங்களுக்கான கலந்தாய்வு இன்று (அக்டோபர் 19-ம் தேதி) தொடங்கி உள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் அக்.17ஆம் தேதி வெளியான நிலையில், மாநில இடங்களுக்கான கலந்தாய்வு இன்று (அக்டோபர் 19-ம் தேதி) தொடங்கி உள்ளது.
விளையாட்டு வீரர்களுக்கான சிறப்புக் கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் நேரடியாக இன்று தொடங்கியுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நாளை நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு இணைய வழியில் அக்டோபர் 21ஆம் தேதி தொடங்க உள்ளது.
மத்தியக் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு
நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் மத்திய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு அக்டோபர் 10ஆம் தேதி தொடங்கி, நடைபெற்று வருகிறது. நாளை வரை இந்தக் கலந்தாய்வு நடைபெறுகிறது. கலந்தாய்வுக்குப் பிறகு, மாணவர்கள் 28ஆம் தேதிக்குள் கல்லூரியில் இணைய வேண்டும்.
மாநில இடங்களுக்கு இன்று (அக்டோபர் 19) கலந்தாய்வு தொடங்கி, 27ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கலந்தாய்வுக்குப் பிறகு, மாணவர்கள் நவம்பர் 4ஆம் தேதிக்குள் கல்லூரியில் இணைய வேண்டும்.
மாநில இடங்களுக்கு நவம்பர் 7-ல் இரண்டாம் கட்டக் கலந்தாய்வு தொடங்கி, 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கலந்தாய்வுக்குப் பிறகு, மாணவர்கள் நவம்பர் 21ஆம் தேதிக்குள் கல்லூரியில் இணைய வேண்டும். இதைத் தொடர்ந்து முழுமைச் சுற்று (Mop up Round) கலந்தாய்வும், விடுபட்ட காலியிடங்களுக்கான இறுதிச் சுற்று (Stray Vacancy) கலந்தாய்வும் நடைபெறும் என்றும் மருத்துவக் கலந்தாய்வுக் குழு அறிவித்துள்ளது.
மத்தியக் கலந்தாய்வு
நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் மத்திய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு நவம்பர் 2ஆம் தேதி தொடங்குகிறது. நவம்பர் 10 வரை இந்தக் கலந்தாய்வு நடைபெறுகிறது. கலந்தாய்வுக்குப் பிறகு, மாணவர்கள் 18ஆம் தேதிக்குள் கல்லூரியில் இணைய வேண்டும்.
முதலாம் ஆண்டு வகுப்புகள்
அதேபோல நவம்பர் 15-ம் தேதி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கும் என்றும் மருத்துவ கலந்தாய்வுக் குழு அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு ஆன்லைனில் நடந்தது. சிறப்பு பிரிவு மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடுகளுக்கு மட்டும் ஆப்லைனில் கலந்தாய்வு நடந்தது. இந்த முறையும் அதேபோல நடைபெறுகிறது.
விரிவான அட்டவணை:
சிறப்பு கலந்தாய்வு தொடங்கியது
மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், ராணுவ வீரர்களின் வாரிசுகள் உள்ளிட்டோருக்கான சிறப்புக் கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் நேரடி முறையில் இன்று தொடங்கியுள்ளது. இவர்களில் 68 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, இந்த கலந்தாய்வில் பங்கேற்றுள்ளனர். இன்றைய கலந்தாய்வில் கல்லூரிகளை தேர்வு செய்த மாணவர்களுக்கு, மாலையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சேர்க்கை ஒதுக்கீட்டு ஆணையை வழங்குகிறார்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நாளை நடைபெற உள்ளது. அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு இடங்கள் 6067, பல் மருத்துவ இடங்கள் 1380-ல், 7.5 % ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ் 454 , பிடிஎஸ் 104 என மொத்தமாக 558 இடங்கள் நிரப்பப்படவுள்ளன. அதைத் தொடர்ந்து பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு இணைய வழியில் அக்டோபர் 21ஆம் தேதி தொடங்க உள்ளது.