MKU Convocation: மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா; பட்டங்களை வழங்கிய ஆளுநர்! புறக்கணித்த அமைச்சர்
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 55வது ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 55வது ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு மாணவ - மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கினார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 55வது ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று (நவ.2) பல்கலைகழக வளாகத்தில் காலை 10.30 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது. இதில் பல்கலைக்கழகத்தின் வேந்தரும் தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். கடந்த வாரம் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் எதிரொலியாக, ஆளுநர் வருகையை முன்னிட்டு காவல் துறையினர் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பட்டமளிப்பு விழா நிகழ்வை முன்னிட்டு பல்கலைக்கழக முழுவதிலும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஆளுநர் பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு, பல்கலைக்கழக வளாகத்திற்குள் வந்த அனைத்து வாகனங்களும் கடும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். மேலும் அனுமதி அட்டை உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மேலும் பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தருபவர்களுக்கு செல்போன் எடுத்துவரவும் மற்றும் குழந்தைகளை அழைத்து வரவும் அனுமதி மறுக்கப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவ - மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கினார். பல்கலைக்கழகத் துணை வேந்தர் குமார் நினைவுப் பரிசை வழங்கினார்.
1,34,531 மாணவர்களுக்குப் பட்டங்கள்
இந்த விழாவில், காமராஜர் பல்கலைக்கழக வளாக மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளின் மாணவர்கள் 1,34,531 பேருக்கு பட்டங்கள் வழங்கப்படுகின்றன. இதில் 748 பேருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேரடியாகப் பட்டங்களை வழங்கினார். அதில் 605 பேருக்கு முனைவர் பட்டமும், 143 பேருக்கு பதக்கங்களும் வழங்கப்பட்டன.
புறக்கணித்த அமைச்சர் பொன்முடி
மதுரை பல்கலை. பட்டமளிப்பு விழாவை, துணை வேந்தரும் உயர் கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி புறக்கணித்தார். முன்னதாக இதுகுறித்து சென்னை, தலைமைச் செயலகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, ’’சுதந்திரப் போராட்ட வீரருக்கு உண்மையிலேயே மரியாதை செலுத்தும் எண்ணம் ஆளுநருக்கு இருந்தால், அனுமதி மறுப்பது ஏன்? ஆர்எஸ்எஸ் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு சுதந்திரப் போராட்டத்தின் மதிப்பு தெரியாது என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.
தியாகி சங்கரய்யாவுக்கு கவுரவ முனைவர் பட்டம் அளிக்க ஆளுநர் அனுமதி மறுப்பது ஏன்? சங்கரய்யாவுக்கு தகைசால் தமிழர் பட்டத்தை முதன்முதலில் தமிழ்நாடு முதல்வர் வழங்கினார். விருதுடன் வழங்கப்பட்ட ரூ.25 லட்சத்தைக் கூட வைத்துக்கொள்ளாமல், அரசுக்கே திருப்பி வழங்கிவிட்டார். அதுதான் பெரிய மனிதருக்கு அழகு.
ஆனால் ஆளுநர் பொய் பேசுவதையே தொழிலாகக் கொண்டிருக்கிறார். கடந்த சில பட்டமளிப்பு விழாக்களில் ஆளுநர் ஆர்.என்.ரவி என்னைப் பேச விடாமல் தடுத்தார்’’ என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.