Heartwarming : நெகிழ்ச்சி... பாடம் சொல்லிக்கொடுத்த பள்ளி ஆசிரியரை மருத்துவமனை இருக்கையில் அமரவைத்து அழகுபார்த்த மருத்துவர்!
பள்ளிக் காலத்தில் தனக்குப் பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியரை, தனது மருத்துவமனை இருக்கையில் அமரவைத்து அழகுபார்த்திருக்கிறார் மதுரையைச் சேர்ந்த மருத்துவரும் மாணவருமான தமிழரசன்.
பள்ளிக் காலத்தில் தனக்குப் பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியரை, தனது மருத்துவமனை இருக்கையில் அமரவைத்து அழகுபார்த்திருக்கிறார் மதுரையைச் சேர்ந்த மருத்துவரும் மாணவருமான தமிழரசன்.
தாய், தந்தைக்கு அடுத்தபடியாக கற்பிக்கும் ஆசானுக்குத்தான் முதலிடம் அளித்திருக்கின்றனர் சான்றோர்கள். அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஆசிரியர்கள், தாங்கள் வாழ்ந்த வாழ்க்கையைக் காட்டிலும், தாங்கள் கற்பித்த மாணவர்களாலேயே கவுரவிக்கப்படுகிறார்கள். தனக்குள் மாற்றத்தை விதைத்த ஆசிரியர்களை எந்தவொரு மாணவனும் மறப்பதில்லை. வாழ்க்கை முழுவதும் நினைவு வைத்திருக்கிறார்கள். சூழல் வாய்க்கும்போது அந்த ஆசிரியரை கவுரவித்து, வாழ்த்துகளையும் பெறுகிறார்கள். அப்படி ஒரு நெகிழ்ச்சியான சம்பவம்தான் இது.
தன்னுடைய கனவான மருத்துவப் படிப்பை அடைவதற்குக் காரணமாக இருந்த ஆசிரியரை அழைத்து வந்து, தன்னுடைய மருத்துவமனை இருக்கையில் உட்கார வைத்து, அவருக்கு தான் அணியும் ஸ்டெதஸ்கோப்பையும் அணிவித்து, அழகு பார்த்திருக்கிறார் ஒரு மாணவர்.
மதுரை நரிமேடு பகுதியில் மருத்துவராகப் பணியாற்றி வருபவர் தமிழரசன். இவரின் ஆசிரியர் ஆதலையூர் சூரியகுமார். திருவாரூர் மாவட்டம் தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியரான சூரியகுமார், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தின் ஆட்சிப் பேரவை உறுப்பினராகவும் இருக்கிறார். இவர் 14 ஆண்டுகளுக்கு முன்பு, மதுரை நேரு வித்யாசாலை மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிந்தபோது தமிழரசன் படித்துள்ளார்.
அந்த நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார் மாணவரும் மருத்துவருமான தமிழரசன். ''சூரியகுமார் சார் எனக்கு பன்னிரண்டாம் வகுப்பில் பாடம் சொல்லிக் கொடுத்தார். ஒரு வருடம் மட்டுமே அவரிடம் படித்தேன். ஆனால் அந்த ஒரு வருடத்திற்குள் எனக்குள் இவர் ஏற்படுத்திய மாற்றங்கள் ஆயிரம் ஆயிரம். லட்சிய உணர்வை ஊட்டி வாழ்க்கைப் பாதையில் இலக்கை நோக்கி நடக்க வேண்டும் என்று திரும்பத் திரும்ப கூறியவர்.
அவர் சொல்லும் ஒவ்வொரு கதையும் உத்வேகம் அளிக்கும். அவருடைய வகுப்பை தவற விடக்கூடாது என்பதற்காகவே நான் விடுப்பு எடுக்காமல் பள்ளிக்குச் செல்வேன். வகுப்பறையை தாண்டி புதிய உலகத்தை எங்களுக்குள் காட்டியவர். நான் மட்டுமல்ல இன்னும் எத்தனையோ மாணவர்கள் தங்கள் இலக்குகளில் லட்சியங்களில் இவருடைய வழிகாட்டுதலால் வெற்றி பெற்றிருக்கிறார்கள். எங்களுக்குள் புதிய கனவை விதைத்து அதை நினைவாக்கும் வழிமுறைகளையும் காட்டியவர். இவரிடம் என்றும் நான் மாணவனாக இருப்பதை பெருமையாக கருதுகிறேன்.
பள்ளியை விட்டு சென்ற பிறகும் எங்களுக்கு தொடர்ந்து வழி காட்டினார். பனிரெண்டாம் வகுப்பு முடித்துவிட்டு ஒரு வருடம் திசை மாறி நின்றபோதெல்லாம் இவருடைய வார்த்தைகள்தான் எனக்கு நம்பிக்கை தந்தன. அதற்குப் பிறகுதான் நான் மருத்துவ படிப்பை தேர்ந்தெடுத்து இன்று மருத்துவராகி இருக்கிறேன். இதற்கு முக்கிய காரணமாக இருந்த என் ஆசிரியருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவே என்னுடைய நாற்காலியில் அமர வைத்து வாழ்த்து பெற்றேன்'' என்கிறார் தமிழரசன்.
இந்த நிகழ்வு பற்றி ஆசிரியர் ஆதலையூர் சூரியகுமார் கூறும்போது, ''மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்பதற்காகவே வருவாய்த்துறையில் கிடைத்த வேலைகளை வேண்டாம் என்று சொல்லிவிட்டு ஆசிரியர் பணிக்கு வந்தேன். நான் தேர்ந்தெடுத்தது சரியான பாதை என்பதைத்தான் மாணவர்கள் எனக்கு உணர்த்தி வருகிறார்கள். ஆயிரக்கணக்கான மாணவர்கள் தொடர்பில் இருக்கிறார்கள். பல்வேறு துறைகளில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
வகுப்பறை என்பது வளமான களம். அங்கு தேசத்தின் எதிர்காலத்திற்கான வலிமையான தூண்கள் செதுக்கப்படுவதாகவே நான் கருதுகிறேன். அந்த வகையில் என்னுடைய வழிகாட்டுதலால் வெற்றி பெற்றேன் என்று சொல்லும் மாணவரின் அன்பு பெரு மகிழ்ச்சி தருகிறது. எந்த ஒரு விருதும் தர முடியாத மகிழ்ச்சி இது'' என்று நெகிழ்கிறார் ஆசிரியர் ஆதலையூர் சூரியகுமார்.