Madras University: போராட்டத்தில் பேராசிரியர்கள்; கைகொடுக்கும் மாணவர்கள்! முடங்கிய சென்னை பல்கலை.
சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், தங்களுக்கு ஊதியம் வழங்காததைக் கண்டித்து வளாகத்திலேயே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், தங்களுக்கு ஊதியம் வழங்காததைக் கண்டித்து வளாகத்திலேயே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பல்வேறு குடியரசுத் தலைவர்களை உருவாக்கிய பெருமைக்குச் சொந்தமானது சென்னைப் பல்கலைக்கழகம் (University of Madras). இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றான இது 1851-ல் சென்னையில் தொடங்கப்பட்டது. லண்டன் பல்கலைக்கழகத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சென்னைப் பல்கலைக்கழகம், 1857-ல் இந்திய சட்டமன்றத்தின் கீழ் இணைக்கப்பட்டது.
இந்தப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம், பொறியியல், சட்டம், அறிவியல், கலை முதலிய அனைத்துத் துறைகளும் இருந்தன. நீண்ட காலம் தமிழகத்தின் ஒரே பல்கலைக்கழகமாக விளங்கியது. தணிக்கைத் துறை தடை காரணமாக தமிழக அரசு வழங்கும் நிதி படிப்படியாகக் குறைக்கப்பட்டது. பல்வேறுகட்ட எச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட நிலையில், பல்கலைக்கழகத்தின் 37 வங்கிக் கணக்குகளை வருமானவரித் துறை கடந்த பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி முடக்கியது.
ஊதியம், ஓய்வூதியம் வழங்குவதில் சிக்கல் நீடிக்கும் நிலையில், விடுதிகளில் மாணவர்களுக்கு உணவு வழங்கக் கூடத் தடுமாறும் நிலை உருவாகியது. பல்கலைக்கழகம் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையில் ஒரு குறிப்பிட்ட அளவை செலுத்தினால் வங்கிக் கணக்கு முடக்கத்தை நீக்க தயாராக இருப்பதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. எனினும் பிரச்சினை இதுவரை தீர்ந்தபாடில்லை.
உயர் மட்டக் குழு அமைப்பு
இதையடுத்து பல்கலைக்கழக ஆசிரியர்களும் ஊழியர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து ஏபிபி நாடு செய்தி வெளியிட்டது. இந்த நிலையில், நிதி நெருக்கடியை சீர்செய்யும் வகையில், 7 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டது. தமிழக அரசு இந்தக் குழுவை உருவாக்கி, அரசாணையை வெளியிட்டது.
அரசாணையில், கணக்குத் தணிக்கைகளின்போது, பல்கலைக்கழகத்தின் பதிவாளர், உயர் மட்டக் குழுவின் கூட்டத்தில் கட்டாயம் கலந்துகொண்ட வேண்டும். 3 மாதங்களுக்கு ஒருமுறை இந்தக் குழு கூடி, விவாதிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டளது.
பேராசிரியர்கள் போராட்டம்
மார்ச் மாதமும் இன்று பிறந்துவிட்டநிலையில், 3 மாத சம்பளம் இன்னும் கைக்கு வரவில்லை என்று கூறி பேராசிரியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். சென்னைப் பல்கலைக்கழக வளாகத்திலேயே ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் வேலையைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்களும் உடன் இணைந்து போராட்டத்தில் பங்குபெற்றுள்ளனர். இதனால் பல்கலைக்கழகப் பணிகள் முடங்கி உள்ளன.
அரசு தலையிட்டு இதில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.