Students Voting: மாணவர்கள் வாக்களித்தால் தேர்வு எழுதத் தடையா?- என்டிஏ பரபரப்பு விளக்கம்!
NTA on Students Voting: இந்த மை வைக்கப்பட்ட மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு எழுத அனுமதி கிடையாது என்று சமூக வலைதளங்களில் செய்தி பரவியது.
மாணவர்கள் வரக்கூடிய மக்களவைத் தேர்தலில் வாக்களித்தால் நுழைவுத் தேர்வு எழுதத் தடை விதிக்கப்படும் என்று வெளியான செய்தி குறித்து, தேர்வுகளை நடத்தும் என்டிஏ பரபரப்பு விளக்கம் அளித்துள்ளது.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் களைகட்டி வருகிறது. ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை 7 கட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் முதல் கட்டத்திலேயே ஏப்ரல் 19 அன்று தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்வும் தேர்தலும்
இந்த நிலையில் ஜேஇஇ நுழைவுத் தேர்வுகள் நடந்து வருகின்றன. ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கிய தேர்வுகள் 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இவை பொறியியல் படிப்புகளில் சேர நடத்தப்படுகின்றன. மே 5ஆம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. மே 15 முதல் 31ஆம் தேதி வரை பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வான க்யூட் தேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில் நுழைவுத் தேர்வுகளை ஒட்டியே, மக்களவைத் தேர்தலும் நடைபெற உள்ளது.
இதற்கிடையே தேர்தல்களில் வாக்களிப்போருக்கு இடது கை ஆள்காட்டி விரலின் முனையில் மை வைக்கப்பட்டும். இந்த மை வைக்கப்பட்ட மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு எழுத அனுமதி கிடையாது என்று சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. இதற்கு, பெரும்பாலான நுழைவுத் தேர்வுகளை நடத்தும் தேசியத் தேர்வுகள் முகமை மறுப்பு தெரிவித்துள்ளது.
Clarification: No Impact on Examination Eligibility for Voters in General Elections pic.twitter.com/iP8Zv469Iu
— National Testing Agency (@NTA_Exams) April 9, 2024
இதுகுறித்து என்டிஏ எனப்படும் தேசியத் தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ’’மை வைக்கப்பட்ட மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு எழுத அனுமதி கிடையாது என்று சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது. இதில் எள்ளளவும் உண்மையில்லை. மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தி தேர்வை சரியாக எழுதுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்’’ என்று தெரிவித்துள்ளது.