அரசுப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகளை மூடி கல்வி வாய்ப்பைப் பறிப்பதா?- அன்புமணி கண்டனம்
எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளை நடத்துவதில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதை சரி செய்து நடத்துவதுதான் அரசின் பணி.
அரசுப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகளை மூடி அடித்தட்டு மக்களின் கல்வி வாய்ப்பைப் பறிக்கக்கூடாது என்று அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பாக அதாவது 2018ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சிக் காலத்தில் அரசுப் பள்ளிகளில் எல்கேஜி மற்றும் யூகேஜி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. மாநிலம் முழுவதும் 2381பள்ளிகளில் இவை செயல்பட்டு வந்தன. இதன் மூலம் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வந்தது. அவர்களுக்கென தனி இருக்கைகள், தனி சீருடைகள் வழங்கப்பட்டு வந்தன. கிராமப் புறங்களில் இது மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில், இடைநிலை ஆசிரியர்கள் மழலையர் வகுப்புகளில் பணியாற்ற அனுமதிக்கப்பட்டனர். ஆனால் தற்போது மழலையர் வகுப்புகளில் பணியாற்றி வந்த ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கே மீண்டும் பணி மாறுதல் வழங்கப்பட்டுவிட்டது. இதன் பின்னர், எல்கேஜி மற்றும் யூகேஜி வகுப்புகள் குறித்த முறையான வரையறைகள் வெளியாகவில்லை.
இதனால், அரசுப் பள்ளிகளில் மழலையர் மாணவர் சேர்க்கை குறித்துப் பள்ளிக் கல்வித்துறை தெளிவுபடுத்தக் கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட எல்கேஜி, யூகேஜி ஆகிய மழலையர் வகுப்புகள் மூடப்படுவதாகத் தகவல் வெளியானது.
இந்நிலையில் இதுகுறித்துப் பாமக தலைவர் அன்புமணி இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில் கூறப்பட்டிருப்பதாவது:
''தமிழ்நாட்டில் 2,381 அங்கன்வாடிகளை அரசு பள்ளிகளுடன் இணைத்து தொடங்கப்பட்ட எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது. இதன் மூலம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளுக்கு வராமல் தனியார் பள்ளிகளுக்குச் செல்ல அரசே வழிகாட்டுகிறது!
எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளை நடத்துவதில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதை சரி செய்து நடத்துவதுதான் அரசின் பணி. அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருந்தால் புதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். அதை விடுத்து மழலையர் வகுப்புகளை மூடுவது தவறு.
மழலையர் வகுப்பு ஆசிரியர்கள் கடந்த பிப்ரவரி மாதம் இட மாற்றம் செய்யப்பட்டபோதே அவை மூடப்படும் என்ற செய்தி பரவியது. ஆனால், அப்போது அந்த செய்தியை மறுத்த பள்ளிக் கல்வித்துறை, இப்போது மூட ஆணையிட்டது ஏன்? என்பது குறித்து விளக்கமளிக்க வேண்டும்!
மழலையர் வகுப்புகள் ஏழைக் குழந்தைகளுக்கு வரப்பிரசாதம். அவற்றை மூடி அடித்தட்டு மக்களின் கல்வி வாய்ப்பைப் பறிக்கக்கூடாது. மழலையர் வகுப்புகளை தொடர்ந்து நடத்தவும், அதற்காக பயிற்சி பெற்ற மாண்டிசோரி ஆசிரியர்களை நியமிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.''
இவ்வாறு அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்