Viral letter: இனி லீவு விட்டுடாதீங்க ப்ளீஸ்: கலெக்டருக்கு சிறுமி எழுதிய கடிதம் வைரல்!
பள்ளிக்கு இனியும் விடுமுறை அளித்து விடாதீர்கள் என்று 6ஆம் வகுப்புச் சிறுமி வயநாடு மாவட்ட ஆட்சியருக்கு எழுதிய கடிதம் வைரலாகி வருகிறது.
பள்ளிக்கு இனியும் விடுமுறை அளித்து விடாதீர்கள் என்று 6ஆம் வகுப்புச் சிறுமி வயநாடு மாவட்ட ஆட்சியருக்கு எழுதிய கடிதம் வைரலாகி வருகிறது.
பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டால் மட்டுமே குழந்தைகள் குதூகலம் அடைவர் என்பது பொதுவான எண்ணமாக இருந்து வருகிறது. பள்ளிக்கு விடுமுறை வேண்டும் என்று ஆட்சியருக்கே குட்டிச் சுட்டிகள் கடிதம் எழுதிய கடிதம் அண்மைக் காலங்களில் பேசுபொருளானது. எனினும் இது எல்லா மாணவர்களுக்கும் பொருந்தாது என்று கேரளாவைச் சேர்ந்த 6ஆம் வகுப்பு மாணவி நிரூபித்துள்ளார்.
இந்த நிலையில் சஃபூரா நெளஷத் என்னும் மாணவி, பள்ளிக்கு வருவதுதான் உண்மையான மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார். வயநாடு ஆட்சியர் இதுதொடர்பாக வெளியிட்ட ஸ்க்ரீன்ஷாட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
4 நாட்கள் தொடர்ந்து வீட்டிலேயே இருப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. தயவுசெய்து புதன்கிழமை (இன்று) அன்று பள்ளியைத் திறங்கள் என்று அந்த இ- மெயிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் தொடரும் கனமழை
தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில் சமீப காலங்களாக கனமழை பெய்வதும், கனமழை நிகழ்வுகள் அதிகரித்து வருவதாக மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 2001-2021 ஆண்டுகளில் சேகரிக்கப்பட்ட தரவுகளின்படி, தென்மேற்கு பருவமழை காலத்தில் (ஜூன் முதல் செப்டம்பர் வரை) கேரளாவில் கனமழை பெய்வது அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கேரளாவில் கடந்த சில தினங்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் கேரளாவில் உள்ள முக்கிய அணைகளான பொன்முடி, லோயர் பெரியார், கல்லார்குட்டி, எரட்டையார் மற்றும் குண்டலா மற்றும் மூளியார் ஆகிய அணைகள் நிரம்பி வழிந்தன. இடுக்கி அணை நீல நிற அளவையும், பெரிங்கல்குத்து அணை மஞ்சள் நிற அளவையும் எட்டியது. கேரளாவில் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் மட்டுமின்றி மழை அபாயம் அதிகமுள்ள மாவட்டங்கள் முழுவதும் வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது.
மழை தொடர்ந்து பெய்து வருவதால் மக்கள் தேவையின்றி வெளியில் வர வேண்டாம் என்று அந்த மாநில அரசும், மாநில வருவாய் அமைச்சர் ராஜனும் வேண்டுகோள் விடுத்துள்ளார். மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் இளைஞர்கள் செல்ஃபி எடுக்கும் மோகத்தை கைவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
கேரளாவில் கனமழை காரணமாக 12-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மூன்று பேர் மாயமாகியுள்ளனர். அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சனி, ஞாயிறு விடுமுறை தாண்டி, மழை காரணமாக வயநாட்டுக்குத் திங்கட்கிழமை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது. மொஹரம் காரணமாக செவ்வாய்க்கிழமையும் விடுமுறை அளிக்கப்பட்டது. 4 நாட்கள் விடுமுறையை அடுத்து, புதன்கிழமை விடுமுறை வேண்டாம் என்று சிறுமி சஃபூரா நெளஷத் கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்