PM SHRI Scheme: கேரளாவில் எதிர்ப்புகளை மீறி பிஎம் ஸ்ரீ திட்டம் அமல்: தமிழ்நாடு, வங்கம்தான் பாக்கி- கல்வியில் என்ன மாற்றம்?
PM SHRI School Kerala: பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இணைவதன் மூலம் கேரளாவின் தனித்துவமான அரசியல் அணுகுமுறை சமரசம் செய்யப்படலாம் என்று சிபிஐ மாநிலச் செயலாளர் பினோய் விஸ்வம் கவலை தெரிவித்திருந்தார்.

மத்திய அரசின் பிஎம் ஸ்ரீ (PM SHRI) திட்டத்தில் சேர கேரள மாநில அரசு நேற்று (வியாழக்கிழமை) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டு உள்ளது பல்வேறு விவாதங்களைக் கிளப்பி உள்ளது.
டெல்லியில் கேரள பொதுக் கல்விச் செயலாளர் கே. வாசுகி மற்றும் இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் (MoE) பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை அதிகாரிகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணியின் (LDF) முக்கிய கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) கடும் எதிர்ப்பையும் மீறி இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது, ஆளும் கூட்டணிக்கு இடையிலான உறவுகளை மேலும் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1,500 கோடி ரூபாய் பங்கை பெறவே..
முன்னதாக, பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இணைவதன் மூலம் கேரளாவின் தனித்துவமான அரசியல் அணுகுமுறை சமரசம் செய்யப்படலாம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பினோய் விஸ்வம் கவலை தெரிவித்திருந்தார். இருப்பினும், இத்திட்டத்தில் இணைவதற்கு ஆதரவளித்த பொதுக் கல்வி அமைச்சர் வி. சிவன்குட்டி, கேரளாவில் பல்வேறு கல்வித் திட்டங்களுக்கு நிலுவையில் உள்ள மத்திய அரசின் 1,500 கோடி ரூபாய் பங்கை பெறுவதற்கான ஒரே வழி இதுதான் என்று கூறியிருந்தார்.
முதலில் CPM மற்றும் கேரள மாநிலக் கல்வித் துறை இரண்டும் பிஎம் ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திட ஒப்புக்கொண்ட போதிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கடும் எதிர்ப்பால், அரசு இருமுறை பின்வாங்க வேண்டியிருந்தது. சமீபத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த பிரச்சினை மீண்டும் எழுப்பப்பட்டது, ஆனால் முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் கல்வி அமைச்சர் சிவன்குட்டி இருவரும், இது கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் இல்லை என்று கூறி பதிலளிக்க மறுத்துவிட்டனர். அமைச்சரவைக்குள் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை, மேலும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முடிவு கேரளாவின் தனித்துவமான அரசியல் அணுகுமுறை கூட்டணிக்குள் விவாதிக்கப்படவில்லை.
அரசின் இந்த நடவடிக்கையை அடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இன்று (வெள்ளிக்கிழமை) தனது கட்சி அலுவலகத்தில் இந்தப் பிரச்சினை குறித்து விவாதித்து அடுத்தகட்ட நடவடிக்கையை முடிவு செய்ய திட்டமிட்டுள்ளது.
பிஎம் ஸ்ரீ ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதன் மூலம் என்ன நடக்கும்?
முதலாவதாக, தேசிய கல்விக் கொள்கை (NEP) – 2020 இன் அனைத்து விதிகளையும் கேரளா முழுமையாக செயல்படுத்தும். இரண்டாவதாக, இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகள் பிஎம் ஸ்ரீ லோகோவை முக்கியமாக காட்சிப்படுத்த வேண்டும்.
PM SHRI என்பது எழுச்சி இந்தியாவுக்கான பிரதம மந்திரி பள்ளிகள் என்பதன் சுருக்கமாகும், இதன் நோக்கம் தற்போதுள்ள பள்ளிகளை தர ரீதியாக வலுப்படுத்தி, தேசிய கல்விக் கொள்கை 2020-ன் "சிறந்த எடுத்துக்காட்டுகளாக" அவற்றை உயர்த்துவதாகும்.
உத்தரப்பிரதேசத்தில்தான் அதிகம்
இந்தத் திட்டத்தின் நோக்கம் நாடு முழுவதும் 14,500 பிஎம் ஸ்ரீ பள்ளிகளை உருவாக்குவதும், அவற்றை பள்ளி கல்வியின் எடுத்துக்காட்டுகளாக மேம்படுத்துவதும் ஆகும். ஒவ்வொரு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு அல்லது தொகுதியில் அதிகபட்சம் இரண்டு பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்படலாம். நாட்டிலேயே அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 1888 பிஎம் ஸ்ரீ பள்ளிகள் உள்ளன.
மத்திய மற்றும் மாநில அரசுகளால் நடத்தப்படும் அனைத்து பள்ளிகளும் பிஎம் ஸ்ரீ திட்டத்தின் கீழ் வர போட்டியிடலாம். அதேபோல அனைத்து கேந்திரிய வித்யாலயா (KVS) மற்றும் நவோதயா வித்யாலயா (NVS) பள்ளிகள் இத்திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம். கேரளாவில், ஏற்கனவே 33 KVS மற்றும் 14 NVS - மொத்தம் 47 பள்ளிகள் பிஎம் ஸ்ரீ பள்ளிகளாகிவிட்டன.
கேரளா இப்போது புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நிலையில், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் மட்டுமே நாட்டில் PM SHRI திட்டத்தில் சேர மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.






















