JEE Advanced 2025: ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு எப்போது? தேதி அறிவித்த ஐஐடி கான்பூர்- இவர்களுக்கெல்லாம் அனுமதி இல்லை!
JEE Advanced 2025 Exam Date: முதல் தாள் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும் தாள் 2, மதியம் 2.30 முதல் மாலை 5.30 மணி வரையிலும் நடைபெற உள்ளது.
2025ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு எப்போது நடைபெறும் என்பதற்கான தேதிகளை ஐஐடி கான்பூர் அறிவித்துள்ளது.
இதன்படி 2025ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ள இந்தத் தேர்வு தாள் 1, தாள் 2 என இரு தாள்களாக நடைபெற உள்ளது. இரு தேர்வுகளும் தலா 3 மணி நேரத்துக்கு நடைபெற உள்ளது. இரண்டு தேர்வுகளையும் தேர்வர் எழுத வேண்டியது கட்டாயம் ஆகும்.
தேர்வு எப்போது? எப்படி?
முதல் தாள் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும் தாள் 2, மதியம் 2.30 முதல் மாலை 5.30 மணி வரையிலும் நடைபெற உள்ளது. அண்மையில் ஜேஏபி என்னும் கூட்டு மாணவர் சேர்க்கை வாரியம், மாணவர்கள் தேர்வை எழுதுவதற்கான வாய்ப்புகளை 2-ல் இருந்து 3 ஆக அதிகரித்தது.
யாரெல்லாம் ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு (JEE Advanced 2025) எழுதத் தகுதியானவர்கள்?
- 2020, அக்டோபர் 1 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்களே இந்தத் தேர்வுக்குத் தகுதி ஆனவர்கள் ஆவர்.
- எனினும் எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பில் சலுகை உள்ளது.
- தேர்வர்கள் 12ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்வை 2023, 2024 அல்லது 2025-ல் எழுத வேண்டும். அதேபோல இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகியவை கட்டாயப் பாடங்களாக இருக்க வேண்டும்.
- இதே பாடங்களாக இருந்தாலும் 2022-ம் ஆண்டில் பொதுத்தேர்வை எழுதிய மாணவர்களுக்கு அனுமதி இல்லை.
- 2024-ல் ஏதேனும் ஓர் ஐஐடியில் preparatory படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்களும் இந்தத் தேர்வை எழுதத் தகுதியானவர்கள் ஆவர்.
- ஏதேனும் ஓர் ஐஐடியில் மாணவர் சேர்க்கைக்குப் பிறகு, ஏதேனும் ஒரு காரணத்துக்காக மாணவர் சேர்க்கை ரத்து செய்ய மாணவருக்கு தேர்வு எழுத அனுமதி இல்லை.
ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு எதற்கு?
ஜேஇஇ மெயின்ஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், அட்வான்ஸ்டு தேர்வை எழுதத் தகுதியானவர்கள். அட்வான்ஸ்டு தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. ஆகிய கல்வி நிறுவனங்களில் இடம் ஒதுக்கப்படுகிறது.
கூடுதல் விவரங்களுக்கு: https://jeeadv.ac.in/