பழைய ஓய்வூதியத் திட்டம் என்னாச்சு? ஜூலை 9-ல் நாடு முழுவதும் வேலை நிறுத்தம்; ஜாக்டோ ஜியோ அழைப்பு
தேசம் முழுவதும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அனைவரும் பெற ஒரே தீர்வு PFRDA ஆணையத்தை ரத்து செய்திட வேண்டும்.

தேசத்தின் பொதுமக்கள் மற்றும் கருத்தாலும், கரத்தாலும் உழைக்கும் அனைவரின் உரிமைகள் மீட்டெடுக்க, ஜூலை 9ஆம் தேதி அன்று நடைபெறும் அகில இந்திய வேலைநிறுத்தம் வெற்றியடையச் செய்வோம்.
இதுகுறித்து ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது:
தேசத்தின் எதிர்கால மாணவர்களின் கல்வியை சீரழிக்கும் வகையில் மாணவர்கள் இடைநிற்றலை அதிகப்படுத்தப்பட்டு அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்படும்என்பதை பற்றி சிறிதும் கவலைப்படாமல் தேசிய கல்விக் கொள்கை 2020 அமுல்படுத்த மத்திய அரசு முயற்சித்து வருகிறது. அதை அமுல்படுத்திட மறுக்கும் மாநிலங்களுக்கு அனைவருக்கும் கல்வித்திட்ட நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டிவருகிறது.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்திட மறுக்கும் ஒன்றிய அரசு, ராஜஸ்தான், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், இமாச்சல் பிரதேசம் போன்ற மாநிலங்கள் தங்கள் மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்திய போது PFRDA நிதியத்தில் செலுத்தப்பட்ட நிதியை தர மறுத்துவிட்டது. தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை ஆய்வு என்ற முறையில் ரத்து செய்திட முயற்சியெடுத்து வருகிறது.
PFRDA ஆணையத்தை ரத்து செய்க
எனவே, தேசம் முழுவதும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அனைவரும் பெற ஒரே தீர்வு PFRDA ஆணையத்தை ரத்து செய்திட வேண்டும்.
பல்வேறு மாநிலங்களில் 12 மணிநேர வேலை நேரத்தை அமல்படுத்தப்பட்டு வருகிறது. இவை எல்லாவற்றிற்கும் காரணமான மத்திய அரசு நடைமுறைப்படுத்திவரும் தாராளமயம், உலகமயம், தனியார்மயம் என்ற மக்கள் விரோத, ஊழியர் விரோத கொள்கைகளுக்கு எதிராக நாடு தழுவிய காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சுமார் 20 கோடி பேர் பங்கேற்கும் அகில இந்திய வேலை நிறுத்தம் 09.07.2025 அன்று நடைபெறுகிறது.
கடந்த 19.05.2025 அன்று நடைபெற்ற மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி ஜாக்டோ ஜியோவும் பங்கேற்பது என முடிவெடுக்கப்பட்டது.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம்
அதன் அடிப்படையில் 09.07.2025 அகில இந்திய வேலை நிறுத்தம் சம்பந்தமாக பிரச்சாரம், நோட்டீஸ், போஸ்டர் போன்ற இயக்கப் பணிகளை திட்டமிட அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தைக் கூட்டி திட்டமிட வேண்டும். தமிழகத்தில் ஜாக்டோ- ஜியோ சார்பில் 09.07.2025 அகில இந்திய வேலைநிறுத்தம் மிக எழுச்சியாக வெற்றிகரமாக நடைபெற்றிட அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளார்.
ஜாக்டோ - ஜியோ 09.07.2025 அகில இந்திய வேலைநிறுத்த கோரிக்கைகள்
1. பழைய ஓய்வூதியத்திட்டத்தை தேசம் முழுவதும் அமுல்படுத்திட வேண்டும். PFRDA பென்சன் நிதி ஆணையத்தை ரத்து செய்திட வேண்டும்.
2. தேசத்தின் எதிர்காலக் கல்வியைச் சீரழிக்கும் தேசத்தை கூறுபோடும் தேசிய கல்விக்கொள்கை 20220ஐ ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப்பெற்று அனைவருக்கும் தேசநலன் சார்ந்த கல்விக்கொள்கையை உருவாக்க வேண்டும்.
3. 8வது ஊதியக்குழுவை உடனடியாக அமுல்படுத்திட வேண்டும். அதற்கான நிதியை அனைத்து மாநிலங்களுக்கும் ஒதுக்கீடு செய்திட வேண்டும்.
4. சம வேலைக்கு சம ஊதியம் உறுதி செய்யப்பட வேண்டும்.
5. 8 மணி நேர வேலை நேரம் உள்ளிட்ட போராடிப்பெற்ற உரிமைகள் பறிக்கப்படுவதை தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
6. கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.
7. அங்கன்வாடி, சத்துணவு, ஆஷா போன்ற ஊழியர்களை நிரந்தர ஊழியராக்க வேண்டும். அவர்களுக்கான பணிக்கொடை மற்றும் குறைந்தபட்ச ஒய்வூதியம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
8. தேசிய நலன்கருதி இந்தியன் ரயில்வே, சாலைப்போக்குவரத்து, நிலக்கரிச்சுரங்கம், பிற சுரங்கங்கள், துறைமுகம், கப்பல்துறை, பாதுகாப்பு, தபால், மின்சாரம், பெட்ரோலியம், தொலைதொடர்பு, வங்கிகள் மற்றும் காப்பீட்டுத்துறை போன்றவற்றை தனியார்மயமாக்கலை தவிர்க்க வேண்டும்.
9. ஐந்தாண்டுக்கு ஒருமுறை விலைக்குறியீட்டுடன் வழக்கமான திருத்தத்துடன் குறைந்தபட்ச ஊதியமாக ரூ.26,000 உறுதிப்படுத்திட வேண்டும்.
10. ILO உடன்படிக்கைகள் 87, 98, 100 ஆகிவற்றை உறுதிப்படுத்திட வேண்டும். ILO உடன்படிக்கைகள் 155 மற்றும் 187 ன்படி வேலை உரிமைக்கான அடிப்படை கோட்பாடுகள் கடைபிடிக்கப்பட வேண்டும்.
11. மத்திய அரசின் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். மற்றும் காலாவதியான பணியிடங்கள் புதுப்பிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






















