JACTO GEO Strike: தேர்தல் வாக்குறுதிகள் என்னாச்சு? ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தம்; தொடர் போராட்டங்களும் அறிவிப்பு
நவம்பர் 18-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் அடையாள வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படும். அதில் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை பங்கெடுக்கச் செய்யப்படும் - ஜாக்டோ ஜியோ.

பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே அமல்படுத்திட வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பு, நவம்பர் மாதத்தில் பல்வேறு போராட்டங்களை அறிவித்துள்ளது. நவம்பர் 18ஆம் தேதி, தமிழ்நாடு முழுவதும் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது.
ஜாக்டோ ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் உயர்மட்டக் குழு கூட்டம் மாநில ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் தலைமையில் காணொலி வாயிலாக நடந்தது. இதில் அரசு ஊழியர், ஆசிரியர்களின் கோரிக்கைகள், அரசு நிலைப்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஜாக்டோ ஜியோ சார்பில் கூறப்பட்டதாவது:
பத்து அம்ச கோரிக்கைகளில் முதல் கோரிக்கையாக,
- 1.4.2003-க்கு பிறகு பணியில் சேர்ந்தோருக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
- 23.8.2010-க்கு முன்பு பணியேற்ற ஆசிரியர்களை டெட் தேர்வு அச்சுறுத்தலில் இருந்து காக்க சீராய்வு மனு நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும்.
- மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை மாநில அரசும் ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும்.
- உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உயர்த்த வேண்டும்.
- கருணைப் பணி நியமனத்தை 25 சதவீதமாக உயர்த்த வேண்டும்
என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
என்னென்ன போராட்டங்கள்?
நவம்பர் 10 முதல் 14 வரை பள்ளிகள், கல்லுாரிகள், அரசு அலுவலகங்களில் உள்ள அரசு ஊழியர், ஆசிரியர்களை சந்தித்து கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் அரசின் தாமதம், அதற்காக போராட்டம் நடத்துவது, அதில் பங்கேற்பது குறித்து வாகன பிரசார இயக்கம் நடத்தப்பட உள்ளது.
நவம்பர் 18-ல் தமிழ்நாடு முழுவதும் அடையாள வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படும். அதில் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை பங்கெடுக்கச் செய்யப்படும். அதன் பின்னும் கோரிக்கையை நிறைவேற்றவில்லை எனில், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுப்போம் என்று ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.






















