Teachers Vacancy: ஆசிரியர் பணியிடங்களை அதிகரித்திடுக: தமிழக அரசுக்கு வலுக்கும் கோரிக்கை!
2013 ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தி 19,000 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அதற்கு பின்பு கடந்த 11 ஆண்டுகளாக ஆசிரியர் தேர்வு வாரியம் எந்த தேர்வுகளையும் நடத்தவில்லை.
ஆசிரியர் பணி நியமன பணி இடங்களை அதிகரிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ - எம்) வலியுறுத்தி உள்ளது.
தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் 37, 211 அரசுப் பள்ளிகள் இயங்குகின்றன. இப்பள்ளிகளில் சுமார் 48 லட்சம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் கல்வி கற்பிக்க சுமார் 2.3 லட்சம் ஆசிரியர்கள் உள்ளனர்.
காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள்
எனினும் ஆசிரியர் பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படாததால், கற்பித்தல் பணி பாதிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டும் எழுந்தவண்ணம் உள்ளன. இந்த நிலையில் நுங்கம்பாக்கம், டி.பி.ஐ. எனப்படும் பள்ளிக் கல்வி வளாகத்தில், நேற்று 200க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களின் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளுடன், ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதை அடுத்து கல்வித்துறை அதிகாரிகளை சந்தித்து, கோரிக்கை மனு அளித்தனர்.
இந்த நிலையில், ஆசிரியர் பணி நியமன பணி இடங்களை அதிகரிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ - எம்) வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து சிபிஐ - எம் மாநிலக் குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:
’’தமிழகத்தில் 2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தி 19,000 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அதற்கு பின்பு கடந்த 11 ஆண்டுகளாக ஆசிரியர் தேர்வு வாரியம், ஆசிரியர் நியமனத்துக்கான எந்த தேர்வுகளையும் நடத்தவில்லை.
3192 பணியிடங்கள் மட்டுமே நிரப்ப முடிவா?
இந்த நிலையில் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நடத்தப்பட்ட ஆசிரியர் நியமனத் தேர்வில் 40,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ள போதிலும் 3192 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
கடந்த 11 ஆண்டுகளாக ஆசிரியர் நியமனம் இல்லாத நிலையில் தற்போது 14,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் 3192 பணியிடங்கள் மட்டுமே நியமிப்பது எந்த வகையிலும் பொருத்தமான நடவடிக்கை ஆகாது.
காலிப் பணியிடங்கள் அனைத்தையும் நிரப்புக
ஆசிரியர் பணியை எதிர்பார்த்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் காத்திருக்கும் நிலையில் தற்போதுள்ள காலிப் பணியிடங்கள் அனைத்தையும் நிரப்புவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக் குழு வலியுறுத்துகிறது’’.
இவ்வாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.