உயர்கல்வியில் சேரும் பெண்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
கடந்த ஐந்தாண்டுகளில் உயர்கல்வியில் சேரும் பெண்களின் எண்ணிக்கை 18.2% ஆக அதிகரித்திருப்பதாக அறிக்கையில் தெரியவந்துள்ளது.
கடந்த ஐந்தாண்டுகளில் உயர்கல்வியில் சேரும் பெண் பிள்ளைகளின் எண்ணிக்கை 18.2% ஆக அதிகரித்துள்ளதாக 2019 2020ம் ஆண்டுக்கான அனைத்திந்திய உயர்கல்வி ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் (AISHE) அனைத்திந்திய உயர்கல்வி ஆய்வறிக்கை வெளியிடப்படுகிறது. அதன்படி, கடந்த வியாழக்கிழமையன்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், 2019 20ம் ஆண்டுக்கான அனைத்திந்திய உயர்கல்வி ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, கடந்த ஐந்தாண்டுகளில் நாடு முழுவதும் உயர்கல்வியில் சேரும் மாணாக்கரின் எண்ணிக்கை 11.4% ஆக அதிகரித்துள்ளது. அதுவும் குறிப்பாக பெண் பிள்ளைகள் உயர்கல்வியில் சேரும் விகிதம் 18.2% ஆக அதிகரித்துள்ளது.
இதற்கு பிரதமர் மோடி தொடர்ச்சியாக பெண் கல்வி, மகளிர் மேம்பாட்டில் செலுத்தும் கவனமே காரணம். மேலும், கடந்த ஐந்தாண்டுகளில் பட்டியிலன மாணாக்கர் உயர்கல்வியில் சேர்வதும் அதிகரித்துள்ளது எனக் கூறினார். உயர்கல்வித் துறை செயலர் அமித் காரே கூறும்போது, (AISHE) அனைத்திந்திய உயர்கல்வி ஆய்வறிக்கையின் பத்தாவது அறிக்கை இது. தொடர்ச்சியாக மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வதன் எண்ணிக்கை அதிகரிப்பதும், கல்வி நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும், பெண் பிள்ளைகள் உயர்கல்வியில் இணையும் விகிதம் அதிகரிப்பதும் தேசத்துக்கு பெருமை தரும் விஷயம். தேசிய கல்விக் கொள்கை 2020ன் இலக்கான கல்வியை அனைவருக்கும் கிடைக்கச் செய்தல், கல்வித் தரத்தை உயர்த்துதல், சமவாய்ப்புகளை வழங்குதல் என்ற இலக்கை அடைய இந்தப் போக்கு மிகவும் முக்கியமானது என்றார்.
தமிழகம் இரண்டாவது இடம்:
அனைத்திந்திய உயர்கல்வி ஆய்வறிக்கையின்படி நாட்டிலேயே அதிகளவில் உயர்கல்வியில் மாணவர்கள் இணையும் மாநிலமாக சண்டிகர் உள்ளது. அங்கு ஒட்டுமொத்த பதிவு 52.% ஆக இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் தமிழகம் உள்ளது. தமிழகத்தில் உயர்கல்வியில் இணைவோரின் ஒட்டுமொத்த விகிதாச்சாரம் 514% ஆக உள்ளது. அதேபோல், தமிழகத்தில் உயர்கல்வியில் சேரும் பெண்களின் எண்ணிக்கை 51.0 சதவீதமாக இருக்கின்றது. நாட்டிலேயே சிக்கிம் மாநிலத்தில்தான் உயர்கல்வியில் சேரும் பெண் பிள்ளைகளின் எண்ணிக்கை மிகமிக அதிகமாக இருக்கிறது. அங்கு சராசரியாக 67.6% பெண்கள் உயர்கல்வியில் சேர்கின்றனர். அடுத்தபடியாக சண்டிகரில் 65.6% உயர்கல்வியில் சேர்கின்றனர். கேரளாவில் உயர்கல்வியில் சேரும் பெண்களின் எண்ணிக்கை 44.7% ஆக இருக்கிறது.
இதுவே, அண்டை மாநிலமான கேரளாவில் 38.8% ஆகவும், கர்நாடகாவில் 32.0 சதவீதமாகவும், ஆந்திராவில் 35.2 சதவீதமாகவும் இருக்கிறது. இருப்பதிலேயே டாமன் டயு யூனியன் பிரதேசத்தில் தான் இந்த விகிதாச்சாரம் 6.1% என்றளவில் மிகமிகக் குறைவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்கள் உயர்கல்வி பெறுவது வீட்டுக்கும், நாட்டுக்கும் பயனளிக்கும் என ஆன்றோர் பலர் கூறியுள்ளனர் அந்த கனவு நெருங்கிக் கொண்டிருக்கிறது. பெண் கல்வி உரிமை எந்த அளவிற்கு முக்கியமோ, அதே அளவிற்கு அவர்களின் பாதுகாப்பிலும் கவனம் செலுத்த வேண்டும். அப்போது தான், இந்த விகிதமானது இன்னும் அதிகரிக்கும். ஊரக பகுதிகளில் இருந்து இன்னும் நிறைய பெண்கள் உயர்கல்வியை நாடி வருவர்.