IIT Madras: ஐஐடி சென்னையில் மேலும் 2 புது பி.டெக். படிப்புகள் அறிமுகம்; சேர்வது எப்படி?
ஐஐடி சென்னை சமீபத்திய தொழில்நுட்ப முன்னேற்றங்களை மையமாகக் கொண்ட 2 புதிய பிடெக் படிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

பொறியியலின் மையப் பகுதியை கணக்கீட்டு நுண்ணறிவுடன் இணைத்து இயக்கவியல் மற்றும் உயிரி மருத்துவ கருவிகளில் செயல்படுத்துவதன் மூலம், சமகால சவால்களைத் தீர்ப்பதுடன் அதிநவீன எதிர்காலத் திட்டங்களுக்கும் மாணவர்கள் தயார்படுத்தப்படுவார்கள்.
நாட்டின் தரவரிசையில் நம்பர்-1 பொறியியல் கல்வி நிறுவனமான ஐஐடி சென்னை 2025-26 கல்வியாண்டில் மேலும் இரண்டு புதிய இளங்கலை பொறியியல் படிப்புகளைத் தொடங்கியுள்ளது. 1959-ஆம் ஆண்டில் ஐஐடி மெட்ராஸ் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து, பல்துறை ஆராய்ச்சியில் முன்னணியில் இருந்துவரும் பயன்பாட்டு இயக்கவியல், உயிரி மருத்துவப் பொறியியல் ஆகிய துறைகள் மூலம் இப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.
சேர்வது எப்படி?
ஜேஇஇ (அட்வான்ஸ்ட்) தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள், வரவிருக்கும் கூட்டு இருக்கை ஒதுக்கீடு ஆணையத்தின் (JOSAA) கலந்தாய்வில் இந்த இரு புதிய பாடத் திட்டங்களையும் தேர்வு செய்யலாம். ஒவ்வொன்றிலும் தலா 40 மாணவ-மாணவிகள் இடம்பெறுவார்கள்.
கணக்கீட்டுப் பொறியியல் மற்றும் இயக்கவியல் (Computational Engieering and Mechanics - CEM) பிரிவில் (i) B.Tech. பாடநெறிக்கான குறியீடு 412U, கருவிமயமாக்கல் மற்றும் உயிரி மருத்துவ பொறியியலில் B.Tech. (Instrumentation and Biomedical Engineering - iBME) பாடநெறிக்கான குறியீடு 412V.
4 ஆண்டு பி.டெக். கணக்கீட்டுப் பொறியியல் மற்றும் இயக்கவியல் (Computational Enginering and Mechanics - CEM) படிப்பு:
எதிர்கால டிஜிட்டல் பொறியியல் தொழில்களுக்கு ஏற்ப இப்பாடத்திட்டம் மாணவர்களைத் தயார்படுத்தும். இயற்பியல் அமைப்புகள் கணக்கீட்டு மற்றும் செயற்கை நுண்ணறிவுடன் இதில் ஒன்றிணைகின்றன. தனித்துவமான இப்படிப்பு, நவீன கணக்கீட்டுக் கருவிகளுடன் பாரம்பரிய பொறியியல் அறிவைக் கற்றுக்கொள்ள வைக்கிறது. அத்துடன் நாளைய சிக்கலான, நடைமுறைப் பொறியியல் சவால்களை எதிர்கொள்ளவும் பட்டதாரிகளைத் தயார்படுத்தும்.
இயந்திரக் கற்றல், தரவு அறிவியல், உயர் செயல்திறன் கணினிமயமாக்கல் உள்ளிட்ட அதிநவீன கணக்கீட்டு முறைகளை இப்பாடத் திட்டம் ஒருங்கிணைக்கிறது, அத்துடன் திட- திரவ இயக்கவியல், முக்கிய மின் பொறியியல் (சுற்றுகள், சிக்னல்கள், உட்பொதிக்கப்பட்ட அமைப்புகள்), பொருள் அறிவியல் மற்றும் இயக்கவியல் ஆகியவற்றில் அடிப்படைப் பயிற்சியையும் வழங்குகிறது. விண்வெளி, ரோபாட்டிக்ஸ், ஆட்டோமோட்டிவ் மற்றும் உற்பத்தி ஆகியவற்றில் தொடங்கி டிஜிட்டல் இரட்டை வடிவமைப்பு, ஸ்மார்ட் உள்கட்டமைப்பு, நிலையான ஆற்றல் மற்றும் நிலையான கணினி போன்ற வளர்ந்து வரும் பகுதிகள் வரை, தொழில்துறையில் உயர் தாக்கத்தை ஏற்படுத்தும் தொழில்களுக்கு ஏற்ப இப்பாடத்திட்டம் பட்டதாரிகளை உருவாக்குகிறது.

4-ஆண்டு பி.டெக். கருவிமயமாக்கல் மற்றும் உயிரிமருத்துவப் பொறியியல் (Instrumentation & Biomedical Engineering - iBME):
நாட்டில் வளர்ந்து வரும் மருத்துவ சாதனத் துறையின் மகத்தான ஆற்றலைக் கருத்தில் கொண்டு, மின் மற்றும் கருவிமயமாக்கல் பொறியியலில் (Electrical and Instrumentation Engineering) வலுவான அடித்தளங்களைக் கொண்ட உயிரி மருத்துவப் பொறியியல் படிப்பை (Biomedical Engineering) ஒருங்கிணைப்பதன் மூலம் அடுத்த தலைமுறை மருத்துவ சாதனங்களை உருவாக்க மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் தனித்துவமான அமைப்பு, IoT, AI, வலையமைப்புடன் கூடிய மருத்துவத் தொழில்நுட்பங்கள்... இப்படி நவீன, பயன்பாடு சார்ந்த தலைப்புகளுடன் அடிப்படை பொறியியல் படிப்புகளை ஒருங்கிணைக்கிறது. இவை அனைத்தையும் பயோமெடிக்கல் இன்ஜினியரிங் படிப்பு மையமாகக் கொண்டிருக்கும்.
இப்படிப்பில் பட்டம்பெறுவோர் உலகளாவிய சுகாதார சவால்களை எதிர்கொள்ளும் வகையில் மருத்துவ ரீதியாக சீரமைக்கப்பட்ட, நெறிமுறை ரீதியான உணர்திறன்மிக்க தீர்வுகளை வடிவமைக்க முடியும். இந்த பட்டதாரிகள் நோய் அறிதல், சிகிச்சை அளித்தல் ஆகியவற்றில் புதுமைகளை வளர்த்துக் கொள்வதுடன் மருத்துவ சாதனங்கள் துறை, மறுவாழ்வு தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் சுகாதார அமைப்புகளில் தலைமைத்துவம் என தொழில்முனைவோராகவும் தயார்படுத்துகிறது.





















