IIT Madras: தரவு அறிவியல் பயிற்சி மூலம் 2000+ மாணவர்களுக்கு பிரகாசமான எதிர்காலம்; ஐஐடி சென்னை அசத்தல்
இத்திட்டத்தின்கீழ் 2,000-க்கும் மேற்பட்ட ‘ஸ்டெம்’ மாணவர்களுக்கு தரவு மைய செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு குறித்து 35 மணி நேர ஆன்லைன் பயிற்சி அளிக்கப்படும்.

ஐஐடி சென்னை, தரவு மைய செயல்பாடுகளில் மாணவர்களின் திறனை மேம்படுத்துவதற்காக, வெர்டிவ் பார்ட்னர்ஸ் (Vertiv Partners), ஐஐடிஎம் பிரவர்த்தக் ஆகியவற்றுடன் கூட்டுச் சேர்ந்துள்ளது
இந்த சமூகப் பொறுப்பு நிதி முன்முயற்சியின் மூலம், தரவு மைய செயல்பாடுகள் மற்றும் பராமரிப்புத் துறையில் 2,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு 35 மணி நேர பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்பின்னர்160 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஐஐடி-மெட்ராஸ் வளாகத்தில் 5 நாட்கள் பயிற்சி வழங்கப்படும். இந்தியாவின் எதிர்காலத்திற்குத் தேவையான டிஜிட்டல் வல்லுநர்களை உருவாக்க இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
2000+ மாணவர்களுக்கு பயிற்சி
இத்திட்டத்தின்கீழ் 2,000-க்கும் மேற்பட்ட ‘ஸ்டெம்’ மாணவர்களுக்கு தரவு மைய செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு குறித்து 35 மணி நேர ஆன்லைன் பயிற்சி அளிக்கப்படும். இவர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் 160 மாணவர்கள் ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் 5 நாட்கள் சிறப்புப் பயிற்சியை மேற்கொள்ளும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தின் வளர்ந்து வரும் தேவைகளுக்கு ஏற்ப, கோட்பாடு அறிவையும் நேரடிப் பயிற்சியையும் இணைத்து, தொழில்துறை சார்ந்த திறன்களுடன் பங்கேற்பாளர்களை தயார்படுத்தும் வகையில் இப்பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பை அதிகரிக்க உதவும்
மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்க உதவும் வகையில் இதன் உள்ளடக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பு வேகமாக விரிவடைந்து, தரவு மையம்- முக்கிய உள்கட்டமைப்பு சுற்றுச்சூழல் அமைப்பில் திறமையான நபர்கள் தேவைப்படும் தருணத்தில் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வருகிறது.
தரவு மைய உள்கட்டமைப்பு, வெப்ப- மின் மேலாண்மை, தொலைநிலைக் கண்காணிப்பு, முன்கணிப்பு பராமரிப்பு உத்திகள் போன்ற முக்கிய தலைப்புகளை இப்பயிற்சித் திட்டம் உள்ளடக்கியது. எப்போதும் இயங்கக்கூடிய (always-on) சூழலில், செயல்பாட்டு நேரத்தையும் (uptime) இயக்கத் திறனையும் (operational efficiency) உறுதிப்படுத்துவது அவசியம்.
பங்கேற்பாளர்களுக்கு தொழில்துறை ஆய்வுகள், செயல்முறை விளக்கங்கள் மூலம் வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள், சிறந்த நடைமுறைகள் பற்றிய அனுபவம் கிடைக்கும் என்று ஐஐடி சென்னை நம்பிக்கை தெரிவித்துள்ளது.























