மாணவர்கள் பேருந்தில் தொங்கியபடி வந்தால் இதைச் செய்யவேண்டும்: போக்குவரத்துக் கழகம் உத்தரவு
இனி மாணவர்கள் பேருந்தில் தொங்கியபடி வந்தால் உடனே காவல் துறையினருக்குத் தகவல் கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை மாநகரப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது.
இனி மாணவர்கள் பேருந்தில் தொங்கியபடி வந்தால் உடனே காவல் துறையினருக்குத் தகவல் கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை மாநகரப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து மாநகரப் போக்குவரத்து கழகத்தின் பொது மேலாளர் கூறி இருப்பதாவது:
’’மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருத்துகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்யாதவாறு பேருந்துகளில் ஏறும் போதும். பயணம் செய்யும்போதும், பாதுகாப்பான விதிகளை கடைப்பிடிக்கச் செய்ய ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் நிலையான இயக்க நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். அவை பின்வருமாறு:
வழித்தடங்களில் ஏதேனும் மாணவர்கள் படியில் தொங்க நேரிட்டாலோ அல்லது உயிருக்குப் பாதுகாப்பற்ற முறையில் பயணிக்க முற்பட்டலோ அந்த பேருந்தை நிறுத்தி படிக்கட்டு மற்றும் முறையற்ற பயணத்தைத் தவிர்க்க மாணவர்களை அறிவுறுத்த வேண்டும்.
ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களின் அறிவுரையைக் கேட்காமல் மாணவர்கள் மீறி செயல்பட்டு, நிலைமை கட்டுப்பாட்டை மீறினால் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் பேருந்து இயக்கத்தை, போக்குவரத்து இடையூறு இல்லாமல் ஓரமாக நிறுத்தி அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது காவல் துறை அவசர அழைப்பு 100 எண்ணுக்கோ மற்றும் மாநகரப் போக்குவரத்து வான்தந்திப் பிரிவுக்கும் தகவல் தெரிவித்து புகார் அளித்திட வேண்டும்.
பேருந்துகளில் பள்ளி/ கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தினை உறுதி செய்வது, ஓட்டுநர் மற்லும் நடத்துநர்களின் பொறுப்பு எண்பதனை உணர்ந்து பணிபுரிய வேண்டும்’’.
இவ்வாறு பணிமனை அறிவிப்பு பலகை மூலமாக, அனைத்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கும் அனைத்து இணை மேலாளர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு, பேருந்தில் பயணம் செய்யும் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளது. அதன்படி, ’அரசுப் பேருந்து பயணம் செய்யும் மாணவர்கள், படியில் பயணம் செய்யக் கூடாது; அவ்வாறு பயணம் செய்வதினால் உயிர் சேதம் ஏற்படுகிறது. இந்த நாட்டின் எதிர்காலமான மாணவர் செல்வங்கள் படியில் பயணம் செய்து மரணம் அடைவது மிகவும் வேதனை அளிக்கிறது’ என்று தமிழக முதல்வர் அறிவுறுத்தி இருந்தார்.
சென்னையில் சோதனை
முன்னதாக சென்னை முழுவதும் பேருந்து படிக்கட்டுகளில் ஆபத்தான முறையில் மாணவர்கள் பயணிப்பதைத் தடுக்கும் வகையில் வகையில் போக்குவரத்துக் காவலர்கள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்த மாணவா்களைப் பிடித்து கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
பல்வேறு மாவட்டங்களிலும் மாணவர்கள் ஆபத்து பயணம் குறித்து உணராமல் தொடர்ந்து இதுபோன்று படியில் பயணம் செய்கின்றனர். இதற்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதே போல் போக்குவரத்து குறைவாக உள்ள பகுதிகளுக்கு அரசு தனி கவனம் செலுத்து பேருந்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.