IELTS vs TOEFL: வெளிநாட்டில் படிக்க, வேலைபார்க்க ஆசையா? IELTS, TOEFL தேர்வு தெரியுமா? என்ன வித்தியாசம்?
இரண்டு தேர்வுகளிலும் வாசிப்பு, கேட்டல் மற்றும் எழுதுதம் மதிப்பீடுகள் பெரும்பாலும் ஒரே மாதிரியாக இருந்தாலும், முக்கிய வேறுபாடு பேசும் பிரிவில் உள்ளது.

வெளிநாடுகளில் படிக்கவும் வேலை பார்க்கவும் ஆங்கிலத் திறனை சோதிக்கும் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில், IELTS, TOEFL தேர்வுகள் இரண்டும் பிரபலம் ஆனவை. அப்படி என்றால் என்ன? என்ன வித்தியாசம்? பார்க்கலாம்.
சர்வதேச ஆங்கில மொழி சோதனை முறை (IELTS- The International English Language Testing System) மற்றும் ஆங்கிலத்தை ஒரு வெளிநாட்டு மொழியாகக் கற்கும் தேர்வு (TOEFL- Test Of English as a Foreign Language) ஆகிய தேர்வுகளை உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான கல்வி நிறுவனங்கள் நடத்தி வருகின்றன. இருதேர்வுகளுமே ஆங்கில மொழிக்கான வாசிப்பு, எழுதுதல், கேட்டல் மற்றும் பேசும் திறன்களை மதிப்பிடுகின்றன. அதே வேளையில், அவை வடிவத்திலும் கால அளவிலும் வேறுபடுகின்றன.
சர்வதேச ஆங்கில மொழி சோதனை முறை (IELTS) என்றால் என்ன?
இந்தத் தேர்வு சர்வதேச கல்விக்கான வாய்ப்புகளைத் திறப்பது மட்டுமல்லாமல், குடியேற்றம் மற்றும் பிற நாடுகளில் வேலை பார்ப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
உலக அளவில் 12,000-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் IELTS தேர்வின் மதிப்பெண்களை ஏற்றுக்கொள்கின்றன. இந்தத் தேர்வு, ஆங்கிலத்தை தாய்மொழியாகக் கொண்டிராத நபர்களின் ஆங்கிலப் புலமையை மதிப்பிடுகிறது, மேலும் அவர்களின் மொழியைப் படிக்க, எழுத, பேச மற்றும் புரிந்துகொள்ளும் திறனை மதிப்பிடுகிறது.
IELTS தேர்வு நான்கு முக்கிய மொழித் திறன்களில் கவனம் செலுத்துகிறது.
கேட்டல்,
வாசித்தல்,
எழுதுதல் மற்றும் பேசுதல்.
இந்தத் தேர்வின் முடிவுகள் இரண்டு ஆண்டுகளுக்கு செல்லும். IELTS தேர்வு சவாலானதாக இருந்தாலும், சரியான தயாரிப்பை மேற்கொண்டால், தேர்ச்சி பெறுவது சாத்தியமாகும்.
TOEFL (Test Of English as a Foreign Language) தேர்வு என்றால் என்ன?
வெளிநாட்டில் படிக்கவோ அல்லது வேலை தேடவோ TOEFL தேர்வு நடத்தப்படுகிறது. இது அங்கீகரிக்கப்பட்ட ஆங்கிலத் திறன் தேர்வுகளில் ஒன்றாகும். TOEFL தேர்வு மதிப்பெண்களை, நாடு முழுவதும் 160-க்கும் மேற்பட்ட நாடுகளில் 13,000-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஏற்றுக்கொள்கின்றன. TOEFL iBT தேர்வு, தேர்வெழுதும் நபர்கள் ஆங்கிலத்தை எவ்வளவு நன்றாகப் புரிந்துகொண்டு பயன்படுத்துகிறார்கள் என்பதை அளவிடுகிறது.
ஒரு மாணவர் வகுப்பறை சூழலில் ஆங்கில மொழித் திறன்களை எவ்வளவு சிறப்பாகப் பயன்படுத்த முடியும் என்பதையும், அவர்கள் கல்விப் படிப்புகளுக்குத் தயாராக இருக்கிறார்களா என்பதையும் தீர்மானிக்க இந்தத் தேர்வு உதவுகிறது. இதுவும் அதே நான்கு திறன்களை மதிப்பிடுகிறது: வாசிப்பு, கேட்டல், பேசுதல் மற்றும் எழுதுதல்.
தேர்வு நேரம் எப்படி?
IELTS தேர்வு 2 மணி நேரம் 45 நிமிடங்களுக்கு நடத்தப்படுகிறது. அதேநேரம் TOEFL 2 மணி நேரம் நடைபெறுகிறது. முந்தைய தேர்வில் வாசிப்பு 60 நிமிடங்களுக்கும் பிந்தைய தேர்வு 35 நிமிடங்களுக்கும் நடத்தப்படுகிறது.
கவனித்தல் திறன் மதிப்பீட்டைப் பொறுத்தவரை IELTS தேர்வு 30 நிமிடங்களுக்கும், TOEFL தேர்வில் 36 நிமிடங்களுக்கும் நடத்தப்படுகிறது.
IELTS தேர்வில் எழுத்துத் தேர்வு 60 நிமிடங்களுக்கும் TOEFL தேர்வில் 29 நிமிடங்களுக்கும் நீடிக்கிறது. பேச்சுப் பிரிவில், IELTS தேர்வு 11 முதல் 14 நிமிடங்கள் வரை நீடிக்கும், TOEFL தேர்வில் 16 நிமிடங்கள் மட்டுமே நடக்கும்.
இரண்டு தேர்வுக்கு என்ன முக்கிய வித்தியாசம்?
இரண்டு தேர்வுகளிலும் வாசிப்பு, கேட்டல் மற்றும் எழுதுதம் மதிப்பீடுகள் பெரும்பாலும் ஒரே மாதிரியாக இருந்தாலும், முக்கிய வேறுபாடு பேசும் பிரிவில் உள்ளது.
TOEFL தேர்வில், வேட்பாளர்கள் மைக்ரோஃபோனில் பேசுகிறார்கள், மேலும் அவர்களின் பதில்கள் கணினி மற்றும் மதிப்பீட்டாளர்கள் குழுவால் மதிப்பீடு செய்யப்படுகின்றன. இது நடுநிலைத் தன்மையை அதிகரிக்கிறது. மறுபுறம், IELTS தேர்வர்கள் ஒரு மதிப்பீட்டாளருடன் நேரடியாகப் பேச வேண்டும், இது சார்புடையதாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

