ICAI CA Foundation: சிஏ முதல்நிலைத் தேர்வு ஹால்டிக்கெட் வெளியானது: பெறுவது எப்படி?
ஆடிட்டர் படிப்புக்கு நடத்தப்படும் சிஏ முதல்நிலைத் தேர்வுக்கான அனுமதிச் சீட்டை பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஆடிட்டர் படிப்புக்கு நடத்தப்படும் சிஏ முதல்நிலைத் தேர்வுக்கான அனுமதிச் சீட்டை பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் ஆடிட்டர் எனப்படும் பட்டய கணக்காளராக ஆசைப்படுவோர், ஐசிஏஐ எனப்படும் பட்டய கணக்காளர்கள் நிறுவனம் நடத்தும் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற வேண்டியது கட்டாயம் ஆகும். இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, மத்திய அரசு பட்டயக் கணக்காளருக்கான சான்றிதழை வழங்கும்.
3 கட்டமாக தேர்வு
இந்தத் தகுதித் தேர்வு மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. குறிப்பாக முதல்நிலைத் தேர்வு (Foundation Examination), இடைநிலைத் தேர்வு (Intermediate Examination), இறுதித் தேர்வு (Final Examination) என்ற வரிசையில் நடக்கும். பட்டப் படிப்பை முடித்தவர்கள், முதல்நிலைத் தேர்வை எழுதத் தேவையில்லை. இடைநிலை மற்றும் இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதுமானது.
அதே நேரத்தில், ஒவ்வொரு பாடத்திலும் 40 சதவீத மதிப்பெண்கள் மற்றும் ஒட்டுமொத்தமாக 50 சதவீத மதிப்பெண்களைப் பெற்றவர்கள், இடைநிலை மற்றும் இறுதித் தேர்வுகளுக்குத் தகுதியானவர்கள் ஆவர்.
முதல்நிலைத் தேர்வு மொத்தம் 400 மதிப்பெண்களுக்கு 4 தாள்களாக நடைபெறுகிறது. இதில் எழுத்து மற்றும் கொள்குறி வகையில் தேர்வு நடைபெற உள்ளது.
சில நாட்களில் தேர்வு
இந்த நிலையில், 2023-ம் ஆண்டுக்கான சிஏ முதல்நிலைத் தேர்வுகள் டிசம்பர் 31, ஜனவரி 2, 4 மற்றும் 6 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன. இதற்கான ஹால் டிக்கெட் எனப்படும் அனுமதிச் சீட்டு தற்போது வெளியாகி உள்ளது. இதைத் தேர்வர்கள் icai.nic.in மற்றும் icaiexam.icai.org ஆகிய இணையதளங்களுக்குச் சென்று தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் தனியாக அச்சிடப்பட்ட ஹால் டிக்கெட் எதையும் அனுப்பாது என்று தெரிவித்துள்ளது.
ஹால் டிக்கெட்டைப் பெறுவது எப்படி?
* தேர்வர்கள் https://eservices.icai.org/EForms/configuredHtml/1666/71729/login.html என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
* தங்களின் யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டை உள்ளிடவும்.
* அதில் தோன்றும் Download Hall Ticket என்ற பக்கத்தை க்ளிக் செய்து, ஹால் டிக்கெட்டைப் பெறலாம் என்று இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் தெரிவித்துள்ளது.