Jactto Geo: ஜாக்டோ ஜியோவுடன் இணைந்து மனிதச் சங்கிலி போராட்டம்- தலைமைச் செயலக சங்கம் அறிவிப்பு
ஜாக்டோ ஜியோவுடன் இணைந்து 24.03.2023 அன்று கோரிக்கைகளைத் தமிழக முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வரும் நிகழ்வாக, மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெறும் என்று தலைமைச் செயலக சங்கம் தெரிவித்துள்ளது.
அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோவுடன் இணைந்து 24.03.2023 அன்று கோரிக்கைகளைத் தமிழக முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வரும் நிகழ்வாக, மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெறும் என்று அரசு தலைமைச் செயலக சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அரசு தலைமைச் செயலக சங்கம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:
’’நாம் பெற்றுக் கொண்டிருக்கக் கூடிய உரிமைகள் அனைத்தும் ஆட்சிக் கட்டிலில் இருந்த ஆட்சியாளர்கள் ஏதோ தாமாக முன்வந்து வழங்கியது இல்லை. ஆளுகின்ற ஆட்சியாளர்களிடம் நமது உரிமைகளைப் பெறுவதற்கு ஒவ்வொரு கால கட்டத்திலும் பல்வேறு கட்ட போராட்ட இயக்க நடவடிக்கைகளை மேற்கொண்டே நமது உரிமைகளை மீட்டுள்ளோம் என்பதுதான் வரலாறு.
கடந்த 20.03.2023 அன்று வெளியிடப்பட்ட தமிழக நிதிநிலை அறிக்கையில் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்பதோடு, அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் சமூகமானது தமிழக அரசால் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
காலங்காலமாக நாம் பெற்று வரக்கூடிய மத்திய அரசிற்கு இணையான அகவிலைப்படியானது, தற்போது அரசின் கருணைத் தொகையாகவும் / பரிசுத் தொகையாகவும் தற்போது மாறியுள்ளது. இறுதியாக வெளியிடப்பட்ட அக விலைப்படி அரசாணையானது, இனிவரும் காலங்களில் மத்திய அரசிற்கு இணையான அக விலைப்படி என்பது மாநில அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்படாது என்பதற்கு கட்டியம் கூறுவதாக அமைந்துள்ளது.
இதோடு நமது வாழ்வாதார கோரிக்கைகள் மற்றும் தலைமைச் செயலகப் பணியாளர்களின் கோரிக்கைகள் மீதான அரசின் நிலைப்பாடு மிகவும் கவலையளிப்பதாக உள்ளது.
இந்தப் பின்னணியில், அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ 24.03.2023 அன்று கோரிக்கைகளைத் தமிழக முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வரும் நிகழ்வாக, மனிதச் சங்கிலிப் போராட்டத்தினை ஏற்பாடு செய்துள்ளது. தலைமைச் செயலகத்தில் மனிதச் சங்கிலிப் போராட்டமானது நாளை 24.03.2023 வெள்ளிக்கிழமை மாலை 5.45 மணிக்கு காமராஜர் சாலையில் நடைபெறும். இதில் தலைமைச் செயலகப் பணியாளர்கள் அனைவரும் கோரிக்கை பதாகைகள் ஏந்தி, தமிழகத்தில் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் அனைவரும் ஓரணியில் உரிமைகளை மீட்டெடுக்க திரண்டுள்ளோம் என்ற செய்தியினை தமிழக அரசுக்கு தெரிவிப்போம்’’.
இவ்வாறு தலைமைச் செயலகச் சங்கம் தெரிவித்துள்ளது.
2023- 24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 26 (1)ன் படி மார்ச் 20 ஆம் தேதி காலை 10 மணிக்கு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதில் அரசு ஊழியர்களின் நீண்ட காலக் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து அறிவிப்பு வெளியாகாதது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாம்: 12ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அனைத்துப் பாடங்களின் மாதிரி வினாத் தாள்களையும் காண: https://tamil.abplive.com/topic/question-bank என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.