425 காலிப் பணியிடங்களை நிரப்பாமல் அண்ணா பல்கலைக்கழகம் எப்படி செயல்படுகிறது? உயர் நீதிமன்றம்
அண்ணா பல்கலைக் கழகத்தில் 425 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 425 இடங்களை நிரப்பாமல் எப்படி செயல்படுகிறது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதற்கு பலகலைக்கழக தரப்பில், “பணி இடங்களை நிரப்புவது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் நிரபப்படாமல் உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளில் கடந்த 2010 – 2011 ஆம் ஆண்டுகளில் மாதம் 20 ஆயிரம் ரூபாய் தொகுப்பு ஊதியத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அதன் பின்னர் அவர்கள் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் இவர்கள் தரப்பில், தங்களுக்கு பணி நிரந்தரம் வழங்காமல் புதிதாக தற்காலிக ஆசிரியர்கள் தேர்வுக்காக வெளியிடப்பட்ட அறிவிப்பாணையை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த தனி நீதிபதி புதிதாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க கூடாது என்றும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தார். இந்த உத்தரவை எதிர்த்து தற்காலிக ஆசிரியர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர் சுரேஷ் குமார் மற்றும் குமரேஷ்பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின்போது, நிரந்தர ஆசிரியர்களை நியமிக்கும் விவகாரத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் நிலைப்பாடு என்ன ? 12 ஆண்டுகளாக தற்காலிக ஆசிரியர்களாக உள்ளவர்களை பணி நிரந்தரம் செய்வதில் என்ன சிக்கல்? தற்காலிக ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய தயங்குவது ஏன் ? உள்ளிட்ட பல கேள்விகளை எழுப்பினர்.
இந்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது பல்கலைக்கழகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுச்வான AICTE இன் விதிமுறையின் படி உதவி பேராசிரியர்கள், இணை பேராசிரியர், பேராசிரியர் என 1745 பேர் ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்றும், ஆனால் 981 பணியிடங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது என குறிபிடப்பட்டிருந்தது.
காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும் என உத்தரவு பிறப்பித்து மூன்று ஆண்டுகளைக் கடந்தும் இவ்வளவு காலி பணியிடங்களை வைத்துக் கொண்டு இத்தனை ஆண்டுகளாக பல்கலைக்கழகம் எப்படி செயல்படுகிறது ? என புரியவில்லை எனவும் நீதிபதிகள் மிகவும் வருத்ததுடன் கேள்வி எழுப்பினர்.
425 காலி இடங்களை வைத்துக் கொண்டு எப்படி பல்கலைக்கழகம் செயல்படுகிறது ? இடைப்பட்ட மூன்று ஆண்டுகளில் உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்காதது ஏன் ? என அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் 5ஆம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதிகள் அதற்குள் பதில் அளிக்கத் தவறினால் பதிவாளர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்றும் எச்சரிக்கை செய்தனர்.