(Source: ECI/ABP News/ABP Majha)
அதிகரித்துள்ள டிஜிட்டல் ஏற்றத்தாழ்வுகள்: அரசுப்பள்ளி மாணவர்களின் நீட் எதிர்காலம் என்ன?
மொபைல் ஃபோனில் நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகள் வழியாக மாணவர்கள் தங்கள் மருத்துவக் கனவுகளை எட்டுவது எந்தளவிற்குச் சாத்தியம்?
மருத்துவப் படிப்புக்கான நீட் தேசியத் தகுதித் தேர்வுகளுக்கான தேதிகளை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது இன்னும் இரண்டு மாதங்களில் நீட் தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. பெருந்தொற்று பேரிடருக்கு இடையே இந்த முறை தேசியத் தகுதித் தேர்வை எழுதுவது மாணவர்களுக்குப் பெரும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக நீட் தேர்வுகளுக்கான எவ்விதப் பயிற்சியும் இல்லாமல் வெறும் ஆன்லைனில் மட்டுமே ஒருவருடத்துக்கும் மேலாக அன்றாட வகுப்புகளை மட்டும் கவனித்துவரும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இது கூடுதல் சவாலாகவே இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது.
நீட் அறிமுகப்படுத்தப்பட்டது தொடங்கி 2017ல் 7 அரசுப்பள்ளி மாணவர்களும் 2018ல் 5 அரசுப்பள்ளி மாணவர்கள் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர்ந்ததாக மருத்துவக் கல்வி இயக்குநரகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2016-2019 வரையிலான காலக்கட்டத்தில் ஒட்டுமொத்தமாக 14 மாணவர்கள் மட்டும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு மருத்துவக்கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுகளில் அதிக வாய்ப்பை ஏற்படுத்துவதை வலியுறுத்திதான் 2020ம் ஆண்டில் நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகித இட ஒதுக்கீடும் கொண்டு வரப்பட்டது. மாணவர்கள் நீட் தேர்வை கிளியர் செய்வது அதிகரித்தாலும் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் பணம் செலுத்தி படிக்க முடியாத நிலையில் இந்த இட ஒதுக்கீடு அரசுப்பள்ளி மாணவர்களுக்குச் சற்றே ஆறுதலாக இருந்தது.ஆனால் இந்த ஆண்டு நீட் தேர்வுக்கான பயிற்சிகள் கடந்த நவம்பர் 2020ல் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டது. பின்னர் கடந்த ஜூன் மாதத்தில் மீண்டும் நீட் தேர்வுக்கான பயிற்சிகள் அரசுப்பள்ளிகளில் தொடங்கப்படும் என அரசு அறிவித்தது. நீட் தேர்வு ரத்து செய்யப்படும் வரை அந்தத் தேர்வுக்காக வழங்கப்படும் பயிற்சிகளை மாணவர்கள் கட்டாயம் எடுத்துக்கொள்ளவேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் வலியுறுத்தியிருந்தார்.
நேரடியாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்ட காலத்திலேயே ஒற்றை இலக்கத்தில்தான் மாணவர்கள் மருத்துவக்கல்லூரிகளில் இடம்பிடித்தார்கள் என்னும் சூழலில் மொபைல் ஃபோனில் நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகள் வழியாக மாணவர்கள் தங்கள் ம்ருத்துவக் கனவுகளை எட்டுவது எந்தளவிற்குச் சாத்தியம்?
2020ம் நிதியாண்டுக்கான கோல்டு மேன் சாஷட் நிறுவனத்தின் புள்ளிவிவரத்தின்படி மொபைல் ஃபோன் வைத்திருக்கும் இந்தியர்களில் வெறும் 42 சதவிகிதம் பேர்தான் ஸ்மார்ட்ஃபோன் வைத்திருக்கிறார்கள். குறைந்த வருமானம் உடைய குடும்பங்களில் இந்த எண்ணிக்கை இன்னும் குறைவாகவே இருக்கும். அப்படி ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்களிலும் நெட் கிடைப்பதற்குத் தேவையான செலவுகள் தனி. செலவு செய்தாலும் பயிற்சிக்குத் தேவையான தரவுகளை டவுன்லோட் செய்ய ஹை ஸ்பிடு இண்டர்நெட் தேவை என்னும் போது நெட்வொர்க் கிடைக்காத பகுதிகளில் மாணவர்களின் பயிற்சியும் இதனால் பாதிக்கப்படுகிறது.
இதுகுறித்துக் கூறும் பள்ளிகளுக்கான புதிய பாடதிட்ட வடிவமைப்புக் குழுவின் தலைவர் பேராசிரியர் ராமானுஜம், ‘அரசுப்பள்ளியில் படிக்கும் அத்தனை மாணவர்களுக்கும் ஸ்மார்ட்போன் இருக்கிறதா என்பதை அரசு உறுதிபடுத்தவில்லை. அரசு ஆன்லைன் பயிற்சிகளைக் கொடுக்கிறது ஆனால் அதன் ரீச் குறைவாகவே உள்ளது. டியூஷன் அல்லது டுட்டோரியல் காலேஜ் இருந்தாலொழிய இந்த முறை நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது மிகமிகக் கடினம். இன்னும் சொல்லப்போனால் வடக்கத்திய மாநிலங்களில் நிலை இன்னும் மோசமாக உள்ளது. இந்தச் சூழலில் தேசிய அளவில் தேர்வை நடத்துவதே தவறு’ என்கிறார்.
பேராசிரியர் ராமானுஜம் சொல்வதற்குத் தகுந்தாற் போல நமக்கு ஆதாரங்களும் கிடைக்கப்பெறுகின்றன, இந்தியாவின் போட்டித்தேர்வுகளுக்கான கோச்சிங் ஹப்பாகக் கருதப்படும் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் பெருந்தொற்று அச்சம் காரணமாகப் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் வெளியேறியுள்ளனர். விடுதிகளிலும், பேயிங் கெஸ்ட் இல்லங்களிலும் வெறும் 10 சதவிகிதம் பேர் மட்டுமே தற்போது இருப்பதாக கோட்டாவின் ஹாஸ்டல்கள் சங்கத் தலைவர் குறிப்பிடுகிறார். கோச்சிங் வழியாக மட்டும் வருடாந்திரமாக 1200 கோடி ரூபாய் வரை ஈட்டும் இந்த நகரம் தற்போது அதன் வருமானத்தில் நான்கில் மூன்று பகுதியை இழந்துள்ளது.
கேரளாவின் உண்டு உறைவிடப் பள்ளிகளில் படித்துவந்த வயநாடு மலைப்பகுதி மாணவர்கள் பெருந்தொற்றுக்குப் பிறகு அந்தப் பள்ளிகளில் ஆசிரியர்களுடன் தொடர்பிலேயே இல்லை எனக் கூறப்படுகிறது.
பெருந்தொற்று அதிகப்படுத்தியுள்ள இந்த டிஜிட்டல் ஏற்றத்தாழ்வுகளுக்கிடையேதான் தற்போது நீட் 2021 தேர்வை மத்திய அரசு நடத்தவிருக்கிறது. மாணவர்களின் தேர்ச்சி விகிதம் என்னவாகும் என்கிற பெரும் குழப்பத்தை இந்தச் சூழல் உண்டாக்கியிருக்கிறது.
Also Read: தமிழ்நாடு கொரோனா பாதிப்பு 2,500க்கும் கீழ் குறைந்தது; 55 பேர் உயிரிழப்பு!