மாணவியை ஸ்கேலால் அடித்த தலைமை ஆசிரியை பணி நீக்கம்: அதிரடி நடவடிக்கை சரியா?
பொதுநலன் கருதியும், குற்றச்சாட்டுகளின் தன்மையைக்கொண்டும் புழுதிவாக்கம் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை இந்திரா காந்தி தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித்துறையைச் சேர்ந்த சென்னை, புழுதிவாக்கம் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை இந்திரா காந்தி, ஸ்கேலால் மாணவியை அடித்த புகாரில் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஸ்கேலால் அடித்ததாகப் புகார்
பெருநகர சென்னை மாநகராட்சி சென்னை தொடக்கப்பள்ளி புழுதிவாக்கத்தில் பணிபுரியும் இந்திரா காந்தி, தலைமை ஆசிரியை, கடந்த 09.10.2025 5ஆம் வகுப்பு மாணவி சு.லித்திக்ஷா என்பவரை மாணவரின் நலன் கருதி ஸ்கேலால் அடித்ததாகப் புகார் எழுந்தது.
அன்றைய தினம் மாணவிக்கு வீக்கம் இருந்த நிலையில், அடுத்த நாள் காலை வீக்கம் எதுவும் இல்லை என்று தெரிய வந்துள்ளது. தொடர்ந்து, இனி வரும் காலங்களில் இதுபோன்ற தவறை செய்யமாட்டேன் என்று உறுதியளிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
தற்காலிக பணி நீக்கம்
பொதுநலன் கருதியும், குற்றச்சாட்டுகளின் தன்மையைக்கொண்டும் புழுதிவாக்கம் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை இந்திரா காந்தியைத் தற்காலிக பணி நீக்கம் செய்யப்படுவது அவசியமாகிறது.
எனவே, தமிழ்நாடு குடிமைப் பணிகள் (ஒழுங்கு மற்றும் மேல் முறையீடு) விதிகளின் விதி 17-ன் துணைவிதி (e) இன் கீழ் இந்திரா காந்தி, உடனடியாக மறு உத்தரவு வரும் வரை, பணியில் இருந்து தற்காலிக பணி நீக்கம் செய்யப்படுகிறார். தற்காலிக பணிநீக்க காலத்தில் இவருக்கு அடிப்படை விதிகள் 53(1)ன்படி அனுமதிக்கப்பட்ட பிழைப்பூதியம் வழங்கப்படும்.
தலைமையிடத்தை விட்டு வெளியே செல்லக்கூடாது
தற்காலிக பணிநீக்க காலத்தில் தலைமை ஆசிரியை இந்திரா காந்தியின் தலைமை இடம் சென்னைதான் எனவும் ஆணையரின் முன் அனுமதியின்றி தலைமையிடத்தை விட்டு வெளியே செல்லக்கூடாது எனவும் ஆமைணயிடப்படுவதாக பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ஸ்கேலால் அடித்ததற்காக தலைமை ஆசிரியரை பணி நீக்கம் செய்தது சரியா என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். மாணவர்களை ஒழுங்குபடுத்துவது எப்படி என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.






















