Polytechnic Colleges Admission: அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர கால அவகாசம் நீட்டிப்பு; எப்போது வரை?
Polytechnic Colleges admission 2024: சமீப காலத்தில் பாலிடெக்னிக் படிப்புகளுக்கான வரவேற்பு குறைந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளை போல நடப்பாண்டும் சேர்க்கை குறைவாகவே உள்ளது.
அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின்கீழ் 54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 3 இணைப்பு கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் தொழில்நுட்ப பட்டய படிப்புகளுக்கு 19,120 இடங்கள் உள்ளன. இங்கு கணினி பொறியியல், இசிஇ, இ இ இ, மெக்கானிக்கல் பொறியியல் உள்ளிட்ட படிப்புகளுக்கான டிப்ளமோ படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.
பட்டயப் படிப்பு மாணவர்கள் சேர்க்கை
இந்த பல்வகை தொழில்நுட்பக் (பாலிடெக்னிக்) கல்லூரியில் பட்டயப் படிப்பு மாணவர்கள் சேர்க்கை குறித்து தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் வழிகாட்டுதல்களை வெளியிட்டது.
இந்த நிலையில் முதலாம் ஆண்டு மற்றும் பகுதிநேர படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் கடந்த மே 10 முதல் 31ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்தப் படிப்புகளில் சேர சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்தனர். விண்ணப்பித்தவர்களில் தகுதி பெற்றவர்களுக்கு அந்தந்தக் கல்லூரிகளிலேயே தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது.
பாலிடெக்னிக் படிப்புகளுக்குக் குறையும் வரவேற்பு
எனினும், சமீப காலத்தில் பாலிடெக்னிக் படிப்புகளுக்கான வரவேற்பு குறைந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளை போல நடப்பாண்டும் சேர்க்கை குறைவாகவே உள்ளது. ஒட்டுமொத்த இடங்களோடு ஒப்பிடும்போது பாலிடெக்னிக் கல்லூரிகளில் குறைந்த அளவிலான மாணவர்களே சேர்க்கை பெற்றுள்ளனர். இன்னும் 10 ஆயிரம் இடங்கள் வரை நிரம்பாமல் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதை அடுத்து, நிரம்பாமல் உள்ள இடங்களை கல்லூரிகளே நேரடியாக நிரப்பிக்கொள்ள (Spot Admission) தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. எனினும் இதற்குக் கால வரம்பு எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை.
கல்லூரிகளுக்கு நேரடியாகச் சென்று சேரலாம்
இதனால் ஒவ்வொரு மாவட்டங்களிலும் இனி மாணவர்களே நேரடியாக தாங்கள் விரும்பும் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு நேரடியாகச் சென்று சேர்ந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்தெந்தக் கல்லூரிகளில் என்னென்ன படிப்புகள் என்பதை அறிந்துகொள்ள https://www.tnpoly.in/public/docs/Colleges-and-Branches_2.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.
பாலிடெக்னிக் படிப்புகள் குறித்த விளக்கக் கையேட்டை முழுமையாகக் காண: https://www.tnpoly.in/public/docs/TNPA-2024-2025.pdf
கூடுதல் தகவல்களுக்கு: https://www.tnpoly.in/