GATE 2024: பொறியியல் நுழைவுத் தேர்வு; கேட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி - விண்ணப்பிப்பது எப்படி?
பொறியியல் நுழைவுத் தேர்வான கேட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை (அக்.5) கடைசித் தேதி ஆகும். இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
பொறியியல் நுழைவுத் தேர்வான கேட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை (அக்.5) கடைசித் தேதி ஆகும். இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
மத்திய அரசுக் கல்வி நிறுவனங்கள் எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான். உள்ளிட்ட பொறியியல் மேற்படிப்புகளில் சேர உயர் கல்வி நுழைவுத் தேர்வை நடத்துகின்றன. கேட் (Graduate Aptitude Test in Engineering) என்ற பெயரில் தேர்வு நடைபெறுகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் கேட் தேர்வை ஐஐடி நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றோ அல்லது ஐஐஎஸ்சி எனப்படும் பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனமோ நடத்துகின்றன. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவதன் மூலம் ஐஐடி, ஐஐஎஸ்சி உள்ளிட்ட மத்திய அரசின் தலைசிறந்த உயர் கல்வி நிறுவனங்களில் படிக்க முடியும்.
2024ஆம் ஆண்டுக்கான கேட் (GATE) தேர்வை ஐஐஎஸ்சி எனப்படும் இந்திய அறிவியல் நிறுவனம் நடத்த உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு ஆக.24ஆம் தேதி தொடங்கி, செப்டம்பர் 29ஆம் தேதி வரை நடைபெற்ற நிலையில், கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தாமதக் கட்டணம் செலுத்தாமல் அக்.5ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தாமதக் கட்டணத்தைச் செலுத்தி அக்டோபர் 13ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
3ஆம் ஆண்டு அல்லது அதற்கடுத்த ஆண்டுகளில் படிக்கும் பொறியியல் மாணவர்கள், கேட் 2024ஆம் ஆண்டு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கிடையே மாணவர்கள் நவம்பர் 7 முதல் 11ஆம் தேதி விண்ணப்பங்களில் திருத்தம் செய்யலாம்.
எப்போது தேர்வு?
கேட் தேர்வு பிப்ரவரி 3, 4, 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இரண்டு ஷிஃப்டுகளாக நடைபெற உள்ள தேர்வில், முதல் ஷிஃப்ட் கால 9.30 முதல் 12.30 மணி வரையிலும் 2ஆம் ஷிஃப்ட் 2.30 முதல் 5.30 மணி வரையிலும் நடக்க உள்ளது. ஜனவரி 3ஆம் தேதி அன்று அனுமதிச் சீட்டு வெளியாகும் என்று ஐஐஎஸ்சி பெங்களூரு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மட்டுமே தேர்வு மையங்கள்
கேட் தேர்வு நாடு முழுவதும் இந்தியாவுக்குள் மட்டுமே நடத்தப்படும் என்று ஐஐஎஸ்சி தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கு வெளியே உள்ள தேர்வர்கள், இந்தியாவுக்கு வந்து தேர்வை எழுதலாம். எனினும் போக்குவரத்து, தங்குவது உள்ளிட்ட ஏற்பாடுகளை அவர்களை செய்துகொள்ள வேண்டும் என்று ஐஐஎஸ்சி பெங்களூரு தெரிவித்துள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
மாணவர்கள் gate2024.iisc.ac.in என்ற முகவரியை க்ளிக் செய்து, தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு நடைபெறும் மையங்கள் குறித்து விரிவாக அறிய https://gate2024.iisc.ac.in/exam-cities/ என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும், என்ன தகுதி என்று மாணவர்கள் இங்கே https://gate2024.iisc.ac.in/eligibility-criteria/ தெரிந்து கொள்ளலாம்.
கூடுதல் விவரங்களுக்கு: gate2024.iisc.ac.in என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
இதையும் வாசிக்கலாம்: Teachers Strike: நீளும் ஆசிரியர்கள் போராட்டம்: இன்று வெளியாகும் அறிவிப்பு- கோரிக்கைகளை நிறைவேற்றுமா கல்வித்துறை?