Thirukkural Quiz: முதல் பரிசு ரூ.2 லட்சம்; திருக்குறள் வினாடி வினா போட்டி- கலந்துகொள்வது எப்படி?
முதல்நிலைப் போட்டிகளில், 38 மாவட்டங்களில் எழுத்து தேர்வுகள் நடத்தப்படும். அதில் இருந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் மூன்று குழுக்களாக (ஒன்பது பேர்) தேர்வு செய்யப்படுவார்கள்.

மாநில அளவில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா நிகழ்வு போட்டி டிசம்பர் 28ஆம் தேதி நடைபெற உள்ளது. முதல் பரிசைப் பெறும் குழுவுக்கு ரூ.2 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது. விருதுநகர் ஆட்சியர் ஜெயசீலன் இதற்கான முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளார்.
கன்னியாகுமரி அய்யன் திருவள்ளுவர் சிலையின் வெள்ளிவிழா ஆண்டினை முன்னிட்டு தமிழ் வளர்ச்சிப் பண்பாட்டுத் துறையின் சார்பாக, விருதுநகர் மாவட்டத்தில் வரும் டிசம்பர் 28ஆம் தேதி அன்று மாநில அளவில் அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான வினாடி வினா நிகழ்வு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்விற்கு அனைத்து மாவட்டத்தில் இருந்தும், அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
போட்டி நடைபெறுவது எப்படி?
முதல்நிலைப் போட்டிகளில், 38 மாவட்டங்களில் எழுத்து தேர்வுகள் நடத்தப்படும். அதில் இருந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் மூன்று குழுக்களாக (ஒன்பது பேர்) தேர்வு செய்யப்படுவார்கள்.
பின்னர், விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் காலிறுதி, அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகளில், சிறந்த 40 குழுக்கள் காலிறுதிக்கு தேர்வு செய்யப்படும். காலிறுதியில் நான்கு சுற்றுகள் நடத்தப்பட்டு, 12 குழுக்கள் இறுதிக்கு தேர்வு செய்யப்படுகின்றன. இந்த 12 குழுக்களில் முதல் 6 இடம் பெற்ற 6 குழுக்கள் இறுதியில் கலந்து கொள்ளும்.
இறுதிப் போட்டியில் வெல்லும் முதல் குழுவிற்ரு ரூபாய் 2 லட்சம் பரிசு தொகையாக வழங்கப்படும். இரண்டாம் குழுவிற்கு ரூபாய் 45 லட்சமும் மூன்றாம் குழுவிற்கு ரூபாய் ஒரு லட்சமும் பரிசு தொகையாக வழங்கப்படும். மேலும் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்ற இதர மூன்று குழுக்களுக்கும் ஊக்கப் பரிசாக ரூபாய் 25 ஆயிரம் வழங்கப்படும்.
குழுக்களைத் தேர்வு செய்வது எவ்வாறு?
4 மாவட்ட அளவில் எழுத்துத் தேர்வு (கொள்குறி வகை) நடத்தி , அதில் சிறந்த மதிப்பெண் பெறும் ஒன்பது நபர்களை மூன்று குழுக்களாக இணைத்து அனுப்பலாம்.
எழுத்துத் தேர்விற்கான வினாத்தாள் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து பொறுப்பு அலுவலருக்கு தேர்வு நாளன்று காலையில் வழங்கப்படும்.
யாரெல்லாம் கலந்துகொள்ளலாம்?
அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்துத் துறை / அனைத்து நிலை அலுவலர்களும், அரசு, அரசு உதவி பெறும் / அங்கீகரிக்கப்பட்ட அனைத்து வகை தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியப் பெருமக்கள் அனைவரும் இதில் கலந்து கொள்ளலாம்.

