EMIS School Education : எமிஸ் பணிகளில் இருந்து ஆசிரியர்கள் விடுவிப்பு: பள்ளிக் கல்வித்துறை தகவல்
ஒப்பந்த முறையில் நியமிக்கப்பட உள்ள அலுவலக உதவியாளர்கள் மூலம் எமிஸ் பணிகளை முடிக்க, பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டு வருகிறது.
எமிஸ் தளத்தில் வருகைப் பதிவேடு, மாணவர்களின் விவரங்கள் உள்ளீடு ஆகிய பணிகளில் இருந்து ஆசிரியர்கள் இந்த கல்வியாண்டில் விடுவிக்கப்பட உள்ளனர். பள்ளிக் கல்வித்துறை வட்டாரத்தில் இருந்து இந்தத் தகவல் வெளியாகி உள்ளது.
எமிஸ் தளத்தில் புள்ளி விவரங்கள் பதிவு செய்வதில் இருந்து ஆசிரியர்களுக்கு விடுதலை அளிக்கப்படும் என 2023ஆம் ஆண்டு ஆசிரியர் தின விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அதிரடியாக அறிவித்தார்.
அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு
''எங்கு சென்றாலும், எப்போது பார்த்தாலும் 'எமிஸ் பணிகள் அதிகமாக இருக்கின்றன. கற்பித்தலில் கவனம் செலுத்த முடிவதில்லை' என்று ஆசிரியர்கள் சொல்வதைக் கேட்டுக்கொண்டே இருந்தேன். இதையடுத்து எமிஸ் பணிகளில் இருந்து ஆசிரியர்களுக்கு விடுதலை அளிக்கப்படும். EMIS திட்டம் (Educational Management Information System) மூலம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்பான புள்ளி விவரங்களை பிஆர்டி (வட்டாரக் கல்வி அலுவலர்கள்) மூலம் பதிவு செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், 2024 கல்வியாண்டின் தொடக்கத்தில் இருந்து எமிஸ் வலைத்தள பணிகளில் இருந்து ஆசிரியர்கள் விடுவிக்கப்படுவர் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கடந்த மாதம் அறிவித்தார்.
அலுவலக உதவியாளர்கள் மூலம் எமிஸ் பணி
இந்த நிலையில் ஒப்பந்த முறையில் நியமிக்கப்பட உள்ள அலுவலக உதவியாளர்கள் மூலம் எமிஸ் பணிகளை முடிக்க, பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டு வருகிறது.
எமிஸ் என்பது கல்வி மேலாண்மை தகவல் மையம் ஆகும். பள்ளி, மாணவர்கள் தொடர்பான தகவல்களையும் புள்ளிவிவரங்களையும் உள்ளடக்கியது எமிஸ். அதேபோல ஆசிரியர்கள் உள்ளிட்ட அலுவலர்களின் தினசரி செயல்பாடுகளும் எமிஸ் தளத்தில் கண்காணிக்கப்படுகின்றன எமிஸ் வழியாக மாணவர்கள், நலத்திட்டங்கள் குறித்த தகவல்களை உள்ளிட வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு . பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. எனினும் இதுதொடர்பான பணிகள் அதிக நேரத்தை எடுத்துக்கொள்வதாக ஆசிரியர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், இனி ஆசிரியர்கள் எமிஸ் விவரங்களை உள்ளிடுவதற்கான பணிகளில் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள். இதற்காக வரும் கல்வியாண்டில் ஒப்பந்த அடிப்படையில் 6 ஆயிரம் அலுவலக உதவியாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.