Educational Tour: சிங்கப்பூர், மலேசியாவுக்குக் கல்வி சுற்றுலா செல்லும் அரசுப்பள்ளி மாணவர்கள்; விவரம்
தமிழ்நாடு முழுவதிலும் இருந்து தேர்வு செய்யப்பட்ட 21 அரசுப்பள்ளி மாணவர்கள், செப்டம்பர் 4 முதல் 9 வரை மலேசியாவுக்குக் கல்வி சுற்றுலா செல்ல உள்ளனர்.
தமிழ்நாடு முழுவதிலும் இருந்து தேர்வு செய்யப்பட்ட 21 அரசுப்பள்ளி மாணவர்கள், செப்டம்பர் 4 முதல் 9 வரை மலேசியாவுக்குக் கல்வி சுற்றுலா செல்ல உள்ளனர். அதேபோல் 25 அரசுப்பள்ளி மாணவர்கள், செப்டம்பர் 6 முதல் 11 வரை சிங்கப்பூருக்குக் கல்வி சுற்றுலா செல்ல உள்ளனர்.
2022-2023ஆம் ஆண்டிற்கான பள்ளிக்கல்வி மானியக் கோரிக்கையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாணவர்களுக்கு கல்வி சுற்றுலா சார்ந்து அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி, பள்ளிக் கல்வித் துறை சார்பில் 2022-2023 ஆம் கல்வியாண்டில் கல்வி இணை/ கல்வி சாரா மன்ற செயல்பாடுகள், போட்டிகளில் மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள்/ ஆசிரியர்கள், இணை இயக்குநர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் செப்டம்பர் 4 முதல் 9 முடிய மலேசியா நாட்டிற்கு கல்வி சுற்றுலா செல்கின்றனர்.
இதற்காக 21 மாணவர்கள், வழிகாட்டிகளாக 6 ஆசிரியர்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் இணை இயக்குநர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். 21 மாணவர்களில் 9 மாணவர்கள், 12 மாணவிகள் அடங்குவர்.
சிங்கப்பூருக்கு சுற்றுலா
அதேபோல தமிழ்நாடு முழுவதிலும் இருந்து தேர்வு செய்யப்பட்ட 25 அரசுப்பள்ளி மாணவர்கள், செப்டம்பர் 6 முதல் 11 வரை சிங்கப்பூருக்குக் கல்வி சுற்றுலா செல்ல உள்ளனர்.
ஆசிரியர்களை கல்விச் சுற்றுலா செல்வதற்காக பணி விடுவிப்பு செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல மாணவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன. அதில் கூறி உள்ளதாவது:
விமானம் புறப்படும் நேரம் 04.09.2023 இரவு 10.15 மணி
விமானம் சென்னை வந்தடையும் நேரம் 09.09.2023 காலை 06.55 மணி.
மாணவர்கள் மற்றும் அவர்களுடன் வரும் பெற்றோர் ஒருவருக்கு பயணப்படி வழங்கப்படும். ஆசிரியர்களுக்கு தகுதியான பயணப்படி வழங்கப்படும்.
குழுவில் உள்ள அனைவரும் 04.09.2023 அன்று காலை 9.30-க்குள் சென்னை வருகை தர வேண்டும். வெளி மாவட்டத்திலிருந்து வரும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கும் காலை உணவு மற்றும் இதர வசதிகள் சைதாப்பேட்டை ஆசிரியர் இல்லத்தில் செய்து தரப்படும்.
அங்கிருந்து காலை 10.௦0 மணியளவில் பேருந்து மூலம் பள்ளிக் கல்வி இயக்ககத்திற்கு அழைத்து வரப்படுவார்கள். தனித்தனியே சென்னை வருவதற்கு ஏற்பாடுகள் செய்தவர்கள் பள்ளிக் கல்வி இயக்ககத்திற்கு காலதாமதமின்றி 10.30 மணிக்குள் வர வேண்டும்.
பயணம் மேற்கொள்ளவிருக்கும் மாணவர்களுடன் அவர்களுடைய பெற்றோர்களில் எவரேனும் ஒருவர் மட்டுமே சைதாப்பேட்டை ஆசிரியர் இல்லத்தில் தங்க அனுமதிக்கப்படுவர்.
பயண நாட்களின்போது மாணவர்களிடம் பெற்றோர்கள் பேசுவதற்கு தொலைபேசி எண்கள் பெற்றோரிடம் கொடுக்கப்படும். அவ்வெண்களுக்கு இந்திய நேரப்படி இரவு 07.00 மணி முதல் 08.30 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.
5 நாட்களுக்கு தேவையான துணிகள் மற்றும் தேவைப்படும் மருத்துவ உபகரணங்கள், மருந்துகள், கொண்டு வர வேண்டும்.
ஒருவர் 20 கிலோவிற்கு மிகாமல் ஆன உடைகள் மற்றும் பொருட்களை பூட்டக்கூடிய பெரிய பெட்டி அல்லது பெரிய கைப்பையில் கொண்டு வாலாம். மேலும், சிறிய கைப்பை அல்லது சிறிய பெட்டிகளில் 7 கிலோ கிராம் வரையிலான பொருட்களை கையில் வைத்துக்கொள்ளலாம். இதில் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் போன்ற பொருட்களை வைத்துக்கொள்ளலாம்.
செல்லும் நாடுகளின் குறைந்தபட்ச சட்ட திட்டங்கள் குறித்து உங்களுக்கு விளக்கப்படும். அந்நாட்டின் சட்டங்களுக்கு உட்பட்டு அனைவரும் நடந்துகொள்ள வேண்டும்.
ஒவ்வொரு ஆசிரியருக்கும் 3 முதல் 5 குழந்தைகளுக்கான பொறுப்புகள் வழங்கப்படும். அக்குழந்தைகளின் பாதுக்காப்புக்கு அவ்வாசிரியர்களே பொறுப்பேற்க வேண்டும். அந்நாட்டில் தங்குமிடம் மற்றும் தரமான உணவுகள் கல்வித் துறையினால் வழங்கப்படும்.